பிரதமரானார் மஹிந்த; நானே பிரதமர் - ரணில் | தினகரன்


பிரதமரானார் மஹிந்த; நானே பிரதமர் - ரணில்

பிரதமரானார் மஹிந்த ராஜபக்ஷ-Mahinda Rajapakse Sworn in as Prime Minister Sri Lanka

- அரசிலிருந்து விலகியது ஐ.ம.சு.மு
- அரசியலமைப்புக்கு முரண் - மங்கள

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (26) இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்ெகாண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று மாலை அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது, அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதனையடுத்துச் சபாநாயகரைச் சந்தித்த சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்தனர்.

இதனையடுத்தே இன்று மாலை புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்தப் பதவியேற்பு வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சமல் ராஜபக்‌ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, டிலான் பெரேரா முதலானோரும் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு வைபவத்தின்போது ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, மதக் கடமைகளில் கலந்துகொண்டார். பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுக்கொண்டதையடுத்து கொழும்பு உட்பட நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவை தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, "அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்றாலும் இன்று அல்லது நாளை தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என்றார்.

ஜனநாயகத்திற்கு எதிரான சதி -அமைச்சர் மங்கள

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்குக்கும் சட்டத்திற்கும் முரணானது என்று ஊடகத்துறை மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானே பிரதமர் -ரணில்

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் தாமே தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...