கல்லடி பாலத்தில் தற்கொலைகளை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம் | தினகரன்

கல்லடி பாலத்தில் தற்கொலைகளை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் மட்டக்களப்பு முதல்வரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வானது கடந்த வியாழக்கிழமை (07) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதிக்குழு மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு - செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அமர்வின் விசேட அம்சங்களாக மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் மட்டக்களப்பு நகரத்தினதும் அதற்கு ஓர் அடையாளமாக இருக்கின்ற கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் முதல்வரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்றும், இவ்வாறான தற்கொலைபுரியும்மனநிலைக்குஆட்படுகின்றவர்களை உள ஆற்றுப்படுத்துவதற்கும்,அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையினால் அனுமதியளிக்கப்படடுள்ளது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம். எஸ். நூர்டீன்)


Add new comment

Or log in with...