சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற மஹாநாம | தினகரன்

சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற மஹாநாம

பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த பாரிய கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு பாடசாலைக்கும் இவ்வாறான போட்டிகள் உள்ளன. இந்தப் போட்டிகளின் பொது அதீத திறமை காட்டும் வீரர்கள் தமது பாடசாலைகளில் மிகவும் பிரபலமாகிவிடுவார்கள். இவர்களில் பலர் பாடசாலையை விட்டகன்றதும் தங்கள் கிரிக்கெட் விளையாட்டை மறந்து விடுகின்றனர். எனினும் அவர்களில் மிகச் சிலர் மட்டும் பாடசாலை அணிகளில் இருந்து தேசிய அணிக்கு சென்று அங்கிருந்து சர்வதேச ரீதியிலும் புகழடைந்து விடுகின்றனர்.

இவ்வாறு பாடசாலையில் இருந்து சர்வதேச அளவுக்கு சென்ற ஒருவர்தான் ரொஷான் மஹாநாம. முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான இவர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டித் தீர்ப்பாளரும் ஆவார்.

ஒரு பாடசாலை கிரிக்கெட் அணி ஒரு பருவ காலத்தில் எத்தனை போட்டிகளில் விளையாடலாம் என்பதில் ஒரு வரையறை இருக்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் போட்டிகளின் தரத்தை பேண முடியம் என்று நம்புகிறார்.

“வெளியில் உள்ள பாடசாலை அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதற்கு நான் இணக்கம் தெரிவிக்கிறேன். ஆனால் அது போட்டிகளின் தரத்தை பாதிப்பதாக இருக்கக் கூடாது” என்று அண்மையில் வழங்கிய ​ேபட்டியொன்றில் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் முதலாவதும் பிரதானமானதுமான ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது பாடசாலை கிரிக்கெட் வீரர்களை எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் பருவகாலத்தின் இறுதியிலும் தமது கடுமையான கிரிக்கெட் விளையாட்டின் பின்னர் அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை 1983 மற்றும் 1984ஆம் வருடங்களின் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றமை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத மைல்கல் என்று மஹாநாம கூறுகிறார்.

“சிறந்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவு செய்யப்படுவதும் தனது விளையாட்டுத் திறமை மதிக்கப்படுதலும் மிகப் பெரிய ஊக்குவிப்பாகும். இந்த விருதை வெல்வது எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது. எனவே இந்த விருதை வென்றது பெருமை தருவதாக உள்ளது” என்று அவர் கூறினார். இந்த விருது என்னை தைரியப்படுத்தியது. மேலும் சிறப்பாக செயற்படுமாறு தூண்டியது.

“நாலந்தா கல்லூரி அணியில் பந்துல வர்ணபுர விளையாடிய போது நான் பார்த்திருக்கிறேன். அப்போதைய பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு நிறைய ரசிகர்கள் வருவார்கள். பாடசாலை கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்குமாறு பாடசாலை நிர்வாகம் எம்மை உற்சாகப்படுத்தியது” என்று மஹாநாம குறிப்பிட்டார்.

“வெற்றிக்காக குறுக்கு வழிகளை கையாள்வதை விட தியாகம் செய்ய பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தமது இலக்குகளை எட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வெற்றியை அடைய குறுக்கு வழிகள் இல்லை. என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது காலத்தில் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு 19வயதுக்குட்பட்டவர்கள் என்ற பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவ்வளவாக இருக்கவில்லை.

நான் நாலந்தா கல்லூரிக்காக 5 வருடங்கள் விளையாடிய போதும் இரண்டு முறை மட்டுமே வெளிநாடு சென்று விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இப்போது அவ்வாறான நிறைய வாய்ப்புகள் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனரா என்றுதான் தெரியாமல் உள்ளது.

நாலந்தா கல்லூரிக்காக விளையாடிய பொது எமது கல்லூரியின் கிரிக்கெட் போட்டிகளில் எங்கள் பெயர்கள் வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கல்லுரியின் பழைய மாணவர்கள் கூட தமது ஏனைய வேலைகளை ஒதுக்கிவிட்டுப் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க மைதானத்தில் நிறைந்து விடுவார்கள்.

அர்ஜுன ரணதுங்க 1980 இலும் 1982இலும் ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் விரர் விருதை இரு வருடங்களாக வென்ற போதும் ரொஷான் மஹாநாமவே அதனை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்ற முதலாமவர் ஆவார். அவர் 1983 இலும் 1984இலும் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் என்ற விருதை வென்றார்.

அர்ஜுன ரணதுங்கவும் ரொஷான் மஹாநாமவும் தவிர திலான் சமரவீர (1994 மற்றும் 1995) லஹிரு பீரிஸ் (2004 மற்றும் 2005) பானுக ராஜபக்ஷ (2010 மற்றும் 2011) சரித்த அஸலங்க (2015 மற்றும் 2016) ஆகியோரே அதனை இரண்டு முறை வென்றுள்ளனர்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அத்துடன் ஒழுங்கான முறையில் விளையாடுவதுடன் கிரிக்கெட்டின் உயர் பாரம்பரியத்தை முறையாகப் பேணவும் வேண்டும். ரொஷான் மஹாநாமவின் வெற்றிக்கு பின்னால் இருந்து பெரிதும் உழைத்தவர் அவரது தந்தையாரான உபாலி மஹாநாம என்பதை அவர் நினைவு கூருகிறார்.

அவர் என்னை பெருமளவில் தைரியமூட்டினார். விழுமியங்களின் பெறுமதியை உணரச் செய்தார். ஒழுக்கம் எத்தனை முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தினார். அதேநேரம் லயனல் மெண்டிஸ் சேரின் கண்களில் நான்பட்டது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். அவர் எமக்கு இலக்குகளை முன்வைத்தார். அவற்றை எவ்வாறு எட்டவேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

எங்கள் காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மதிக்க வேண்டும். அணியின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. எமது பயிற்சியாளர்களே எமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். அத்துடன் நடுவர்களுக்கு நாம் மிகுந்த மதிப்பளித்தோம்.

தற்போதைய பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் தரம் குறைந்துள்ளதால் பாடசாலை வீரர்கள் நேரடியாக தேசிய அணிகளுக்குள் நுழைவது சிரமமாகவுள்ளது. முன்னர் ரஞ்சன் மடுகல்ல போன்றவர்கள் பாடசாலைகளில் இருந்து நேரடியாக தேசிய அணிக்குள் நுழைய முடிந்தது. ஆனால் இப்போது அவ்வாறு தேசிய அணிக்குள் நேரடியாக நுழையும் திறமை பெற்ற பாடசாலை கிரி்க்கெட் வீரர்களைக் காண முடிவதில்லை.

எதிர்வரும் மேமாதம் 53 வயதை எட்டும் மஹாநாம இலங்கைக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2576 ஓட்டங்களப் பெற்றுள்ளார்.

இதில் 4 சதங்களும் 11 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றன. 1992 இல் இந்தியாவுக்கு எதிராக 225 ஓட்டங்களை பெற்றதே ஒரு இன்னிங்ஸில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். அதேநேரம் அவர் சனத் ஜெயசூரியவுடன் 576 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை இலங்கையின் சாதனை மிகு இணைப்பாட்டமாக அமைந்தது.

213 ஒருநாள் போட்டிகளில் அவர் 5162 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 4 சதங்கள் அடங்குகின்றன.


Add new comment

Or log in with...