வாசிப்பு நல்ல மனிதனை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்! | தினகரன்


வாசிப்பு நல்ல மனிதனை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்!

“என் அப்பாவின் பெயர் பூபாலசிங்கம். அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாகவே இறுதிவரை வாழ்ந்தார். 1945ம் ஆண்டு யாழ். நகரில் சிறிய பத்திரிகைக் கடையை ஆரம்பித்து நடத்தி வந்தார். அது கஷ்ட காலம் என்பதால் விடியல் ஆறு மணிக்கே யாழ். தேவியில் வரும் தினகரனை கையில் மடித்துப் போட்டுக் கொண்டு யாழ். பஸ் நிலையத்தில் கூவிக் கூவி பத்திரிகை விற்பேன். வன் செயல்களில் சிக்கி எங்கள் கடை மூன்று தடவைகள் எரிந்த போதும் நாங்கள் எங்கள் பத்திரிகை வியாபாரத்தை கைவிடவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்துக்கு வேறு வர்த்தகம் தெரியாது”

தன் கடந்த கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி எம்முடன் பகிர்ந்தபடியே புன்னகை முகத்துடன் பேச ஆரம்பித்தார் இலங்கையின் முன்னணி தமிழ் புத்தக இறக்குமதியாளரும் விநியோகத்தருமான பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங். தனக்கு பிடித்தமான இந்திய சுதந்திர போராட்ட வீரரின் பெயரையே எனக்கு அப்பா வைத்துவிட்டார் என்கிறார் ஸ்ரீதரசிங்.

யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பு செட்டியார் தெருவுக்கு வந்த ஸ்ரீதரசிங், செட்டியார் தெரு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக தன் புத்தக சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். இருபதாயிரம் தலைப்புகளில் இங்கே எப்போது வேண்டுமானாலும் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ், ஆங்கில நூல்கள் மற்றும் பல வகையான அகராதிகள் இங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை எழுத்தாளர்கள் எழுதும் நூல்களும் இங்கே விற்பனைக்காக வருகின்றன. நீங்கள் தேடிவரும் நூல்கள் இங்கே கிடைக்கவில்லை என்றால் இவர்களிடம் அந்நூல்கள் பற்றிய விவரங்களைத் தெரிவித்தால் மூன்று வாரங்களில் அந்த நூல்களை கொண்டு வந்து தருவார்கள். உங்களுக்குத் தேவையான நூல்களை தபாலிலும் தருவித்துக் கொள்ளலாம். இது தவிர, சகல விதமான எழுது பொருட்களும், கல்வி சம்பந்தமான பாட நூல்களும் அவை தொடர்பான பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. யாழ்ப்பாணம், வெள்ளவத்தையில் கிளைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இன்றைய சூழலில் நூல் வர்த்தகம் எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டால் விரிவான பதில் இவரிடமிருந்து வருகிறது.

“இது ஒரு கஷ்டமான வர்த்தகம். இறக்குமதியாகும் நூல்களில் இருபது சதவீதம் பாவணைக்கு உதவாததாக இருக்கும்.

நனைந்த, எலி கடித்த, முறையாக அச்சடிக்கப்படாத நூல்களை கழித்துவிட வேண்டியிருக்கும். சில துறைகள் சார்ந்த நூல்கள் விற்பனையாகாமல் தேங்கி விடும். சில நூல்கள் இங்கு வரும் போது அதன் தேவைக்கான காலம் கடந்து விட்டிருக்கும். நூல் வர்த்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

முதலாவது பாடசாலை மற்றும் கற்கை தொடர்பான நூல்களும், உசாத்துணை நூல்கள், எழுது பொருட்களின் விற்பனை. இதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இரண்டாவது, பொதுவான வாசிப்புக்கு ஏற்ற நூல்கள். இந்நூல் வர்த்தகத்தின் மீதான முதலீடு மிக அதிகம். எனவே புதிதாக இவ் வர்த்தகத்தில் கால் பதிப்பவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். சிங்கள நூல் விற்பனை, பதிப்பு, வெளியீடு, விநியோகம் என்பதற்கும் தமிழ் நூல் விற்பனைக்கும் இடையே பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.  நூல் விற்பனை அல்லது வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு துறை என்ற வகையில் இது நேரடியாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது என்றார் பூபாலசிங்கம் அதிபர்.

வாசிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது என்ற கூற்று எங்கள் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சுலோகம் அல்ல, அது உண்மை.

தொடர்ச்சியான பல்துறைகளில் விரிவாக மேற்கொள்ளப்படும் வாசிப்பு ஒருவரை அறிவுபூர்வமான சிந்திக்கும், கவர்ச்சியிலும் அலட்டலிலும் ஆட்படாத, பகுத்தறிவு, ஆழப்பார்வை கொண்டவராக மாற்றுகிறது. அவர் நல்ல குடிமகனாக வாழ்வதற்கான அத்திவாரத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது. துறைசார் மற்றும் கல்வி ரீதியான வாசிப்பு தொழில் ரீதியான ஏற்றத்தை ஏற்படுத்தித் தருகிறது. சிந்தனைத் திறனும், தொழிலாண்மையும் ஒரு நாட்டில் சிறக்க புத்தக விற்பனையாளர்களான நாங்கள் பின்புலமாக நின்ற இயங்குகிறோம்” என்று கூறி முடித்தார்    பூபாலசிங்கம் ஸ்ரீதர்சிங்.

நேர்காணல்: சத்யா
Video: Sudath Nishantha


Add new comment

Or log in with...