கூடுதல் வரி, டொலர் ஏற்றங்களால் ஆடைத்துறையில் கடும் வீழ்ச்சி | தினகரன்


கூடுதல் வரி, டொலர் ஏற்றங்களால் ஆடைத்துறையில் கடும் வீழ்ச்சி

- ரஞ்சனாஸ் குழுமத்தின் தலைவர் தேசமான்ய கே. துரைசாமி வழங்கிய சுவாரஸ்யமான, விசேட நேர்காணல்

தங்கத்தைப் போன்று ஆடைக்கும் வரிவிதிப்பதை அரசு நிறுத்த வேண்டும்

நிலையான வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தி, வர்த்தகர்களையும் நுகர்வோரையும் ஊக்குவிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு இலகுவான வரிகளை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். மனிதனின் அத்தியாவசியத் தேவையான ஆடைக்கும் தங்கத்தைப் போன்று அறவிடப்படும் 15 வீத வற் வரி குறைக்கப்பட வேண்டும் என, ரஞ்சனாஸ் குழுமத்தின் தலைவர் தேசமான்ய கந்தசாமி துரைசாமி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுவரும் நிதியமைச்சு டெக்டைஸ் தொழில்துறையினரின் இந்தக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்பது அத்துறை சார்பில் அவர் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கையாக அமைந்தது. வரி அதிகரிப்பு, டொலர் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகளால் டெக்டைல்ஸ் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியை சரிசெய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.

“தங்கத்துக்கு 15 வீத வற் வரி அறவிடுவதால் டெக்டைல்ஸூக்கும் 15 வீத வற் வரியை அறவிடத் தீர்மானித்ததாக நிதியமைச்சின் சார்பில் எமக்கு விளக்கமளிக்கப்பட்டது. தங்கத்தைப் பொறுத்தவரையில் வசதிபடைத்தவர்களே  அதனை அணிந்துகொள்வார்கள். ஆனால் ஆடை அவ்வாறில்லை, அது மனிதனின் அன்றாட தேவையாகும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளுக்கான வரியை 15 வீதத்தால் அதிகரித்திருப்பதால் ஆடைகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன”என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த வரி அதிகரிப்பானது தமது வர்த்தகத்தைப் பாதித்தது மாத்திரமன்றி பணியாளர்களையும் கணிசமாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிட்ட ரஞ்சனாஸ் தலைவர், 1000 பேராகவிருந்த தமது பணியாளர்களை 600 ஆகக் குறைத்திருப்பதாகவும் கூறினார்.

ஆடைகளுக்கான வற் வரியை 5 வீதமாகக் குறைத்தால் போதுமானதாகவிருக்கும் எனக் குறிப்பிட்ட தொரைசாமி, அரசாங்கம் நாளுக்கு நாள் வரிகளை மாற்றாது உறுதியான, நிலையான வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். நிலையான வரிக் கொள்கையொன்று கொண்டுவரப்பட்டால் விலைகளை உரிய வகையில் நிர்ணயம் செய்து வியாபாரத்தை முன்னெடுக்கலாம். வியாபாரிகள் விலைகளை நிர்ணயம் செய்வதைப்போன்று அதிகாரிகளும் அவற்றை கண்காணிக்க முடியும் என்றார்.

“இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரிகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். இதனால் நாம் ஏற்கனவே முன்பதிவுகளைச் செய்துகொண்டு வியாபாரம் செய்வதில்லை. கப்பலில் பொருள்கள் வருவதற்கு முன்னர் சுங்கத்தில் வரி மாறுவதால் பொருட்கள் கைக்கு கிடைத்த பின்னரே நாம் வியாபாரம் செய்கின்றோம்”என தற்போதைய தமது நிலைமையை விளக்கினார்.

அது மாத்திரமன்றி அரசாங்கம் வரி அறவீடுகள் அல்லது அதிகரிப்புக்கள் குறித்து உரிய முறையில் அறிவிப்பதில்லை. அதிகரிக்கப்படவிருக்கும் வரி தொடர்பில் ஊடகங்களில் எந்தவித விளம்பரங்களும் செய்யப்படுவதில்லை. நினைத்த மாத்திரத்தில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வரிகளை அதிகரிக்கின்றனர். எந்த வியாபாரியும் ஒவ்வொருநாளும் வர்த்தமானி அறிவித்தலைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. அதிகாரிகள் வந்துநின்று கோப்புக்களைக் கேட்கும்போதே வரிகள் குறித்து எமக்குத் தெரியவரும். இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்.

வரி அதிகரிப்பு டொலர் அதிகரிப்பு என்பவற்றுக்கு அப்பால் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் ஏற்பட்ட வியாபார இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை என்பது அவருடைய நிலைப்பாடகவிருந்தது.

மிகவும் சிரமப்பட்டு வியாபாரத்தை மேற்கொண்டுவந்த சூழலில் 52 நாட்களில் இருந்த வியாபாரமும் இல்லாமல்போயிட்டது. அந்த நாட்களிலேயே நாம் ரொம்பவும் பாதிக்கப்பட்டோம். இரண்டு மாதங்களில் இடம்பெற்ற சகல வியாபாரமும் வீணாகிப்போய்விட்டது. திட்டமிட்டுவைத்திருந்தவற்றையும் சகலரும் இடைநிறுத்திவிட்டனர். டென்டர்கள் இடைநிறுத்தப்பட்டதுடன், எம்மிடம் பொருட்களை வாங்கியவர்கள் என சகல செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இதுவே எமக்குப் பெரும்பாதிப்பாகும். எமக்கு மாத்திரமன்றி சகல வியாபாரிகளுக்கும் இவ்வாறான நிலையே ஏற்பட்டது. தற்பொழுது எவரும் சந்தோசமாக வியாபாரம் செய்வதாகத் தெரியவில்லை. முன்னர் வியாபாரம் சிறப்பாக இருந்தது. இன்று சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்திருப்பதால் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருபது முப்பது நாட்களுக்குள் சகல திணைக்களங்களிலும் புதியவர்கள் வந்துவிட்டனர். மீண்டும் பழையவர்கள் அந்தந்த இடத்துக்கு வந்துள்ளபோதும் உத்தியோகபூர்வமாகத் தம்மை நியமிக்கவில்லையெனக் கூறி அதிகாரிகள் கூறுகின்றர் எனவும் சுட்டிக்காட்டினார்.

பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிருக்கும் சூழ்நிலையில், பணியாளர்களும் முன்னரைப் போன்று கடின உழைப்பாளர்களாக இருப்பது குறைவு என்றும் அவர் கவலையைத் தெரிவித்தார். இருந்தபோதும் தம்மிடம் பணியாற்றும் நூற்றுக் கணக்கான பணியாளர்களுக்கும் உரிய பயிற்சிகளை வழங்கி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சேவைகளை வழங்குவதே தமது வெற்றியின் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி: டெக்டைல்ஸூக்கான வரி தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் நிலைமைகள் தற்பொழுது எவ்வாறுள்ளது?

பதில்: டெக்டைல்ஸ{க்கு 15 வீத வற் வரியை அரசாங்கம் அறவிடுகிறது. இதற்கு முன்னர் டெக்டைல்ஸ{க்கு இந்த வரி விதிக்கப்படவில்லை. அண்மைய வருடங்களாக டெக்டைஸூக்கு அரசாங்க வரி விதித்து வருகிறது. ஆரம்பம் முதல் இதற்கு எதிராக நாம் போராடி வருகின்றோம். கடந்த வருட வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னரும் நிதியமைச்சுடன் இந்த விவகாரம் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம்.

தங்கத்துக்கு 15 வீத வற் வரி அறவிடுவதால் டெக்டைல்ஸூக்கும் 15 வீ வற் வரியை அறவிடத் தீர்மானித்ததாக நிதியமைச்சின் சார்பில் எமக்கு விளக்கமளிக்கப்பட்டது. தங்கத்தைப் பொறுத்தவரையில் வசதிபடைத்தவர்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொள்வார்கள், வசதியற்றவர்கள் தங்கத்தைக் கொள்வனவு செய்யமாட்டார்கள். ஆனால், ஆடை அவ்வாறில்லை ஆடை என்பது மனிதனின் வாழ்கைக்கு அத்தியாவசியமான தேவையாகும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளுக்கான வரியை 15 வீதத்தால் அதிகரித்திருப்பதால் ஆடைகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. உதாரணத்துக்கு முன்னர் 1000 ரூபாவுக்குக் கொள்வனவு செய்த ஷேர்ட்டை தற்பொழுது 3000 ரூபாவுக்கே கொள்வனவு செய்ய முடியும்.

வருமானவரி ஆணையாளர் நாயகத்துடன் நடத்திய கலந்துரையாடியபோது தங்கத்தையும் ஆடையையும் ஒரேமாதிரியானதாகப் பார்த்து எவ்வாறு 15 வீத வற்வரியை அறவிடமுடியும் எனக் கேட்டேன். நிதியமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இது அறவிடப்படுவதாக அவர் பதில்வழங்கினார்.

இந்த வரியை மாற்றுவது தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டார். அவருடன் கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருந்தபோது அரசாங்கம் கலைக்கப்பட்டு மீண்டும் அமைச்சர் மாறினார். இதுபற்றி தற்பொழுது கதைக்கச் செல்லும்போது மீண்டும் பழையடி முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டியதாகவுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் இதுபற்றிக் கலந்துரையாடுவதற்கு எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது எமது இந்த நிலைமையை எடுத்துக் கூறுவோம்.

ஆடை அத்தியாவசியப் பொருள் என்பதால் 5 வீத வற் வரியை அறவிட்டால் போதுமானது. 15 வீதம் 17 வீதம் என அறவிட்டால் எவ்வாறு வாடிக்கையாளர்கள் அதனைத் தாங்கிக்கொள்வார்கள். வரிகள் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்போது அது எமது வியாபாரத்தையும் கணிசமாகப் பாதிக்கிறது. இலங்கையில் நவநாகரிகமான ஆடைகளை அணிபவர்கள் அல்ல. 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சாதாரண ஆடைகளை அணிபவர்களே.

கேள்வி: இந்த வரி அதிகரிப்பு உங்கள் வியாபாரத்தைப் பாதித்துள்ளதா?

பதில்: டெக்டைஸூக்கான வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட கடந்த மூன்று வருடங்களில் எமது வியாபாரம் 50 வீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. சரியான வியாபாரம் இல்லையென்பதால் பணியாளர்களின் எண்ணிக்கையை 50 வீதமாகக் குறைத்துவிட்டோம். எமக்கு வேறு வழியின்றி இதனைச் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டது. வியாபாரத்தில் இலாபம் இல்லாவிட்டாலும், நஷ்டத்தை நோக்கிச் செல்ல முடியாது என்பதால் பணியாளர்களைக் குறைப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

கேள்வி: டொலர் விலை அதிகரிப்பு உங்களை எவ்வாறு பாதித்துள்ளது?

பதில்: வரி அதிகரிப்பு ஒருபக்கமிருக்க டொலருக்கு எதிரான ரூபாவின் விலை அதிகரிப்பு பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற தெரியவில்லை டொலர் அதிகரிப்பை எம்மால் சமாளிக்க முடியாமல் உள்ளது. 140 ரூபாவாகவிருந்த அமெரிக்க டொலர் இன்று 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 40 வீதத்துக்கும் அதிகமான அதிகரிப்பு என்பதால், டொலர் 140 ரூபாவாக இருக்கும்போது ஓடர் செய்யப்பட்ட ஆடைகளை 180 ரூபா கொடுத்து சுங்கத்திணைக்களத்திலிருந்து விடுவிக்கவேண்டியுள்ளது. இதனை நாம் எவ்வாறு ஆடைகளில் சேர்த்துக்கொள்வது. டோலர் விலை கூடியிருப்பதால் ஏற்பட்டுள்ள ஆடைகளின் விலை அதிகரிப்பு ஒருபக்கம் மறுபக்கத்தில் வற் வரி அதிகரிப்பு என இரண்டு சவால்களுக்கு ஒரேநேரத்தில் முகங்கொடுக்கவேண்டியுள்ளது. ஆடைகளுக்கான வரியை 5 வீதமாக்கினால் பணியாளர்களை அதிகரிக்க முடியும் என்பதுடன், விற்பனையும் அதிகரிக்கும்.

கேள்வி: இந்தப் பிரச்சினைகள் உங்களுக்கு மாத்திரமா அல்லது ஏனைய வியாபாரிகளுக்கும் இவ்வாறான நிலைமைதான் காணப்படுகிறதா?

பதில்: வருமானவரிக்கான கோப்பு இலக்கங்கள் இருப்பவர்களை அழைத்தே வரி கட்டுவதைப் பற்றிக் கேள்விகேட்கின்றனர். மறுபக்கத்தில் நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் எம்மைவிட கூடுதலான வருமானத்தை ஈட்டுகின்றபோதும் அவர்களுக்கு எந்த வரியும் இல்லை. இப்படியான சூழலில் வியாபாரிகள் எவ்வாறு போட்டிபோடுவது. மாலையாகும்போது கிடைக்கும் வருமானத்தை தமது பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டு செல்கின்றனர். ஆனால் நாம் அப்படி செயற்பட முடியாது.

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரிகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். இதனால் நாம் ஏற்கனவே முன்பதிவுகளைச் செய்துகொண்டு வியாபாரம் செய்வதில்லை. கப்பலில் பொருட்கள் வருவதற்கு முன்னர் சுங்கத்தில் வரி மாறுவதால் பொருட்கள் கைக்கு கிடைத்த பின்னரே நாம் வியாபாரம் செய்கின்றோம்.

கேள்வி: நிலையான வரிக்கொள்கையொன்று இல்லாமைதான் இந்தப் பிரச்சினகளுக்கு காரணம் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: நிலையான வரிக் கொள்கையொன்று கொண்டுவரப்பட்டால் விலைகளை உரிய வகையில் நிர்ணயம் செய்து வியாபாரத்தை முன்னெடுக்கலாம். வியாபாரிகள் விலைகளை நிர்ணயம் செய்வதைப்போன்று அதிகாரிகளும் அவற்றை கண்காணிக்க முடியும். தற்பொழுதுள்ள நிலையில் டொலர் விலை அதிகரிப்பதால் அரசாங்கத்திலும் விலைகளை கட்டுப்படுத்தமுடியாதுள்ளது. டொலர் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் வரிகளைக் குறைத்து வியாபாரிகளுக்கு அவர்கள் சலுகைகளை வழங்க முடியும்.

வரி அறவீடுகள் அல்லது அதிகரிப்புக்கள் குறித்து அரசாங்கம் உரிய முறையில் அறிவிப்பதில்லை. அதிகரிக்கப்படவிருக்கும் வரி தொடர்பில் ஊடகங்களில் எந்தவித விளம்பரங்களும் செய்யப்படுவதில்லை. நினைத்த மாத்திரத்தில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வரிகளை அதிகரிக்கின்றனர். எந்த வியாபாரியும் ஒவ்வொருநாளும் வர்த்தமானி அறிவித்லைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. அதிகாரிகள் வந்துநின்று கோப்புக்களைக் கேட்கும்போதே வரிகள் குறித்து எமக்குத் தெரியவரும். உரிய அறிவிப்புக்களை விடுக்காது எம்மிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

கேள்வி: இதைவிட வேறு என்ன சவால்கள எதிர்கொள்கின்றீர்கள்?

பதில்: வியாபாரத்தில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஏனைய போட்டியாளர்களுடன் போட்டிபோட முடியாது என்பதாலேயே பணியாளர்களைக் குறைக்கவேண்டிய நிலைக்குச் சென்றுள்ளோம். வியாபாரம் செய்துதான் ஆகவேண்டும் என நினைப்பவர்கள் வியாபாரம் செய்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஆட்களைக் குறைத்து செலவுகளைக் குறைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ பணியாளர்கள்தான். நடைபாதையில் எம்மைவிட அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர். ஆனால் கோப்புக்கள் உள்ள எம்மை அழைக்கும் அதிகாரிகள் ஏன் வருமானத்தைக் குறைத்துக் காண்பிக்கின்றீர்கள் என கேள்விகேட்கின்றனர்.

கேள்வி: பணியாளர்களை குறைத்திருப்பதாகக் கூறினீர்கள். தற்பொழுது எத்தனை பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்?

பதில்: எமது டெக்டைல்ஸ் நிறுவனங்களில் 600ற்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். செரமிக்கஸில் 1500 பேர் இருக்கின்றனர். முன்னர் டெக்டைஸில் 1000ற்கும் அதிகமானவர்கள் இருந்தனர். டெக்டைல்ஸ் நிறுவனங்களில் தினமும் நின்றுகொண்டு பணியாற்றுவது என்பது மிகவும் சவாலான விடயமாகும். சிந்தட்டிக் எனும் இரசாணயம் புடவைகளில் பயன்படுத்தப்படுவதால் தொடர்ச்சியாக அதற்குள் பணியாற்றுபவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். எமது டெக்டைல்ஸ் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தங்குமிடம், உணவு என்பவற்றை நாமே வழங்குகின்றோம். ஆரோக்கியமான உணவு அல்லது அவர்களுக்கு விரும்பமான உணவுகளை வழங்குகின்றோம். இதற்காகவே நாம் பெருந்தொகை பணத்தை செலவிடுகின்றோம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. நான் முன்னர் கூறியதைப்போன்று அவர்களின் உடல் நலன் சார்ந்தது மற்றையது அப்போதுதான் அவர்கள் வாடிக்கையாளர்களை சரியாகக் கவனிப்பார்கள்.

எமது பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை இந்தியாவிலிருந்து பேராசிரியர்களை அழைத்துவந்து பயிற்சிகளைக் கொடுகின்றோம். வாடிக்கையாளர்களை எவ்வாறு சிரித்த முகத்துடன் கையாழ்வது போன்ற பல விடயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றோம். வாடிக்கையாளரின் திருப்தியே எமக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே பணியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிசிரிவி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் புடவைகள் எடுப்பதற்கான இளம் பெண்கள் தனியாக வருவார்கள். அவர்களை கேலிசெய்து, கண்ணியமாக நடத்தாவிட்டால் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாது. இதுபோன்ற விடயத்தில் நாம் அக்கறையாக இருக்கின்றோம்.

அது மாத்திரமன்றி விற்பனைப் பகுதியில் உள்ளவர்களுக்கு நாளாந்தம் விற்பனைக்கான கமிஷன்களைக் காண்பிக்கின்றோம். அவற்றைப் பார்வையிட்டு அவர்கள் தமது இலக்கை மேலும் அதிகரிப்பதற்காக முயற்சிக்கின்றார்கள்.

கேள்வி: புறக்கோட்டை வர்த்தகர்கள் சங்கத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இணைந்து இதற்காக குரல்கொடுக்கவில்லையா?

பதில்: வற் வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக ஹர்த்தால் நடத்தியிருந்தோம். அதன் பின்னர் வர்த்தகர்கள் மீது அதிகாரிகள் கெடுபிடிகளை அதிகரித்தனர். இதனால் பெரும்பாலான வர்த்தகர்கள் தமக்கு ஏன் வீண் வம்பு என அமைதியாக இருந்துவிடுகின்றனர்.

கேள்வி: கடந்த வருடத்தில் ஏற்பட்ட இரண்டுமாத அரசியல் குழப்பத்தில் வியாபார நடவடிக்கைகள் எவ்வாறிருந்தன?

பதில்: அதை ஏன் கேட்கின்றீர்கள். மிகவும் சிரமப்பட்டு வியாபாரத்தை மேற்கொண்டுவந்த சூழலில் 52 நாட்களில் இருந்த வியாபாரமும் இல்லாமல்போயிட்டது. அந்த நாட்களிலேயே நாம் ரொம்பவும் பாதிக்கப்பட்டோம். இரண்டு மாதங்களில் இடம்பெற்ற சகல வியாபாரமும் வீணாகிப்போய்விட்டது. திட்டமிட்டுவைத்திருந்தவற்றையும் சகலரும் இடைநிறுத்திவிட்டனர். டென்டர்கள் இடைநிறுத்தப்பட்டதுடன், எம்மிடம் பொருட்களை வாங்கியவர்கள் என சகல செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இதுவே எமக்குப் பெரும்பாதிப்பாகும். எமக்கு மாத்திரமன்றி சகல வியாபாரிகளுக்கும் இவ்வாறான நிலையே ஏற்பட்டது. தற்பொழுது எவரும் சந்தோசமாக வியாபாரம் செய்வதாகத் தெரியவில்லை. முன்னர் வியாபாரம் சிறப்பாக இருந்தது. இன்று சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்திருப்பதால் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருபது முப்பது நாட்களுக்குள் சகல திணைக்களங்களிலும் புதியவர்கள் வந்துவிட்டனர். மீண்டும் பழையவர்கள் அந்தந்த இடத்துக்கு வந்துள்ளபோதும் உத்தியோகபூர்வமாகத் தம்மை நியமிக்கவில்லையெனக் கூறி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பல விடயங்களைச் செய்யமுடியாதுள்ளது. இவர்களை நியமித்து சுமூகமான நிலைக்கு வரும்போது எமது வேலைகளைச் செய்யமுடியாதுபோய்விடும்.

கேள்வி: யுத்தகாலத்தில் நடைபெற்ற வியாபாரத்துக்கும் தற்போதைய நிலைமைக்கும் எவ்வாறான வித்தியாசங்கள் உள்ளன?

பதில்: நிறையவே வித்தியாசம் உள்ளது. யுத்த காலத்தின்போது இருந்ததைவிட தற்பொழுது வியாபாரம் குறைவென்றே கூறமுடியும். முன்னர் மக்களிடம் பணம் இருந்தபோதும் வெளியேவரப் பயப்பட்டனர். இன்று வரி அதிகரிப்பு மற்றும் டொலர் விலையேற்றம் என்பவற்றால் பொருட்களின் விலைகள் யாவும் அதிகரித்திருப்பதால் மக்களிடம் கொள்வனவு செய்வதற்குப் போதிய பணம் இல்லை.

கேள்வி: 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் வியாபார நடவடிக்கைகளில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

பதில்: என்னைப் பொறுத்த வரையில் வியாபாரம் வீழ்ச்சிகண்டிருப்பதாகவே கூறவேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று வரி அதிகரிப்பு, டொலர் விலை அதிகரிப்பு போன்ற இன்னோரன்ன காரணிகளால் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதால் அது வியாபாரத்தையும் பாதித்துள்ளது. எமது நிறுவனத்தில் பணியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்கி, ஏனைய வசதிகளைச் வழங்குவதாலேயே அவர்களால் தொடர்ந்தும் இருக்க முடிகிறது.

கேள்வி: உங்கள் வியாபாரத்தின் ஆரம்பம் பற்றிக் கூறுங்களேன்?

பதில்: நான் 1963ஆம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்தேன். முதலில் இரண்டு கடைகளை புறக்கோட்டையில் வைத்திருந்தேன். ஆரம்பத்தில் நான்கு பணியாளர்கள் மாத்திரமே இருந்தனர் தற்பொழுது இந்த எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் எம்மிடம் பணியாற்றியவர்கள் நம்பிக்கையான கடின உழைப்பாளர்களாக இருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இழைஞர்கள் பலர் எம்மிடம் வேலைபார்த்தனர். அவர்கள் தமது உழைப்பினால் படிப்படியாக உணர்ந்து நிர்வாகத்தில் பங்கெடுத்தனர். தற்பொழுது மலையகப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே அதிகமிருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கடின உழைப்பாளர்களாக இருக்கின்றனர். சிலர் வீட்டு நிலைமைகளைப் புரிந்து நடந்துகொள்வதில்லையென்றே கூற வேண்டும். எம்மிடம் 20 வயதுடைய பையன் ஒருவர் இணைந்துகொண்டான். எனக்கு தேநீர் எடுத்துவரும்போது அவனின் பொக்கட்டில் இருந்து இரண்டு கையடக்கத்தொலைபேசிகளுக்கும் ஒரே நேரத்தில் அழைப்பு வந்தது. ஏனப்பா உனக்கு இரண்டு தொலைபேசிகள், இதற்கு பணம் செலவுசெய்தால் எவ்வாறு மலையகத்தில் உள்ள உனது பெற்றோருக்குப் பணம் அனுப்புவாய் எனக் கேட்டேன். நான் கடையிலிருந்து வீடு திரும்பியதும் அந்தப் பையன் வேலையை விட்டு நின்றுவிட்டதாக மனேஞர் தெரிவித்தார். நான் அவனுடைய தனிப்பட்ட விடயத்தில் தலையிடுவதாகக் கூறி அவன் வேலையைவிட்டுவிட்டானாம்.

இப்போதுள்ள தலைமுறையினர் கடின உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்.

(நேர்காணல்: மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...