ஒரு தடவை பேசிய தொலைபேசி எண்ணையும் மறந்து விடாதவர் | தினகரன்

ஒரு தடவை பேசிய தொலைபேசி எண்ணையும் மறந்து விடாதவர்

சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை.

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர். அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை. சென்னை ஜவகர் வித்தியாலயா பாடசாலையில் பத்தாம் வகுப்பு, வனவாணி பாடசாலையில் பன்னிரண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பாடசாலையில் மேலாண்மைப் பட்டம்.

2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. -

சுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. சுந்தர் பிச்சை பற்றிய பல விடயங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன? ஏன் பிரபலமாக்கப்படுவதில்லை? -

ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் கூட்டத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம். திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

ஒரு மூத்த மின்பொறியியலாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம். இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லை.

ஒரு இரசாயன பொறியியலாளரான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐ.ஐ.டி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத் தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை 'டயல்' செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.

ஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பாடசாலையில் என்றெல்லாம் அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கப்டன் ஆவார்.

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார்.

2004-ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-க்கான தயாரிப்பு மேலாண்மையாளராக இணைந்ததில் இருந்து சுந்தர் பிச்சை கூகுள் ட்ரைவ்-தனில் மிக ஈடுபாடோடு இருந்தார். உடன் ஜிமெயில் மற்றும் கோகுல் மேப்ஸ்-ஐயும் மேற்பார்வையிடுவார். இப்போது கூகுள் தேடல், விளம்பரங்கள், வரைபடங்கள், கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவை சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் உள்ளன.


Add new comment

Or log in with...