கையகப்படுத்திய அரச காணிகளை மீட்டெடுக்க வேண்டும் | தினகரன்


கையகப்படுத்திய அரச காணிகளை மீட்டெடுக்க வேண்டும்

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள அரச காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை அடையாளப்படுத்தி பிரதேச சபைக்கு அறிவிக்குமாறு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.  

நாவிதன்வெளி பிரதேச சபையின் 12ஆவது அமர்வு நேற்று முன்தினம் சபா மண்டபத்தில் பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் நடைபெற்றது. அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றன என பிரதேச சபை உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போதே பதிலளித்த, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்து பதிலளித்து பேசிய தவிசாளர் த.கலையரசன், 

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள அரச காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை மக்கள் பிரதிநிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கம், பொது அமைப்புகளுடன் இணைந்து அடயாளப்படுத்தி பிரதேச சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இதன் மூலம் அரச காணிகளை பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தி அரச காணிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதி என்றவகையில் எமது பணிகளை முனைப்புடன் வினைத்திரனோடு எடுக்க வேண்டும் என்றார். 

அரச காணிகளை தனியாரின் கையகப்படுத்தல் காரணமாக பொது கட்டிடங்கள், பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு அரச காணிகள் இல்லாத நிலை எதிர்காலங்களில் ஏற்படும்.  

தனியார், அரச காணிகளை கையகப்படுத்துவதற்கு ஒருசில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உடந்தையாக கடந்த காலங்களில் இருந்துள்ளனர். எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். 

தவிசாளரின் விசேட அறிவித்தல் சபையின் அங்கீகாரத்திற்கான விடயங்கள், சபைக்குரிய மனுக்கள், கடிதங்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் முன்மொழிவுகள், பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.   

சவளக்கடை குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...