உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் | தினகரன்

உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழு ப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்த நிலையிலுள்ளனர். அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் இவ்விடயம் பூதாகரமெடுத்துள்ளது. பிரதியமைச்சர் புத்திக பத்திரன இக்குற்றச்சாட்டை தெரிவிப்பதற்கு யாரிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் பன்றிக் கொழுப்பு, மரக்கறி எண்ணெய், லக்டோ கலப்படம் என்பன உள்ளடங்கியுள்ளதாகவே பிரதியமைச்சர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

கடந்த சில தினங்களாக மக்கள் மத்தியில் இது பேசுபொரு ளாக மாறியுள்ளது. இதற்கு முன்னர் ஒரு தடவை முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸாவும் இது போன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் வெளிப்படையாகச் சொன்னாரே தவிர ஆதாரபூர்வமாக எதனையும் முன்வைக்காததால் மக்கள் அவரது கருத்து குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் பிரதியமைச்சர் புத்திக பத்திரனவின் குற்றச்சாட்டு பாரதூரமானதாகவே நோக்க வேண்டியுள்ளது. தனது உரையின் ஒவ்வொரு சொற்பிரயோகத்துக்கும் தான் பொறுப்புக் கூறுவதாக அவர் தெரிவித்திருக்கின்றார். அதுவும் நுகர்வோர் அதிகார சபைக்குப் பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சராக இவர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்த வரையில் இவ் விடயம் மிகப் பாரதூரமானதாகும்.

உண்மையாகவே பால்மாவில் பன்றிக்கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதா? அல்லது இது முஸ்லிம்களின் மன உணர்வுகளை தூண்டிவிடும் ஒரு சதியா? என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை ஹலால் அதிகார சபை கடந்த காலத்தில் வெளியிட்ட அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் பத்து வகையான வர்த்தக நாமங்களைக்கொண்ட பால் மா வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றில் எவ்விதமான கலப்படங்களும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அதே சமயம் பிரதியமைச்சர் புத்திக பத்திரனவின் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன முற்று முழுதாக நிராகரித்திருக்கின்றார். தான் இது குறித்து தேடியறிந்ததன் மூலம் அவ்வாறான கலப்படங்கள் எதுவுமே இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் காணப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக உறுதிபடத் தெரிவிக்கின்றார். அப்படியானால் பிரதியமைச்சர் என்ன காரணத்துக்காக இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதன் உண்மைத்தன்மை உடனடியாக கண்டறியப்பட வேண்டும்.

பிரதியமைச்சர் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டாரா? அல்லது எவராவது அவரை தவறாக வழிநடத்தினார்களா? என்றொரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் குழப்பமடையும் விதத்தில் காலத்துக்குக் காலம் புரளிகள் கிளப்பிவிடுவது போன்றதொரு தவறான நோக்கமா? இது என்பதை அரசு உடனடியாக கண்டறிய வேண்டும். ஹலால் அறிக்கையைக்கூட சந்தேகிக்கக் கூடியதாகவே இவ்வறிவித்தல் காணப்படுகின்றது.

முன்னைய காலத்தில் எமது மக்கள் பசுப்பால் பாவனைக்கே தங்களை பழக்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கர்ப்பிணித் தாய்மாருக்குக்கூட ஊட்டச்சத்தாக பசும்பாலே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் தாயின் சக்தி பலவீனப்படுவதும், பால் சுரப்பிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவும் குழந்தைக்கு போதுமான பால் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றுத் தீர்வாகவே வைத்தியர்கள் புட்டிப்பாலை அறிமுகப்படுத்தினர். தாய்க்கும், குழந்தைக்குமாக இரு வகை பால் மாவை சிபாரிசு செய்தனர்.

பின்னரான காலப்பகுதியில் குறிப்பிட்டுக் கூறுவதானால் நாட்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை உருவானது. பல நாடுகளிலிருந்தும் பால் மா இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. அவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பன்றிக் கொழுப்போ வேறு விதமான கலப்படங்களோ உள்ளடக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டே வந்தது.

இதுதவிர உள்நாட்டிலும் பால் மா உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிலும் எந்தவிதமான கலப்படங்களும் இருப்பதாக இன்றுவரை காணப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் சரியான ஆதாரங்களைக் காட்டாமல் வெற்றுப் பேச்சுக்களைப் பேசி நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சிப்பது அனுமதிக்கப்படவே கூடாது. இது விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் உண்மைத் தன்மை கண்டறியப்படவேண்டும்.

பால் மா விடயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விதத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இது தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட்டு இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.


Add new comment

Or log in with...