உலகக்கிண்ண தொடருக்கான அணியில் ஸ்மித்- வோர்னருக்கு வாய்ப்பு | தினகரன்

உலகக்கிண்ண தொடருக்கான அணியில் ஸ்மித்- வோர்னருக்கு வாய்ப்பு

உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில், ஸ்மித்- வோர்னருக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும், அவ்வாறு வாய்ப்பு கொடுக்காவிட்டால் அது பைத்தியக்காரத்தனம் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு, கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தடை, அடுத்த மாதம் 23ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனால் அவர்கள் இருவரும் உலக்கிண்ண தொடர் மற்றும் ஆஷஸ் தொடரின்போது அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

எனினும், உலகக்கிண்ண தொடருக்கான அணியில் வோர்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் வாய்ப்பை தேடுவோம்.

நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். அவர்களை நாங்கள் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.

இதற்கு முன்னதாக ஆஷஸ் தொடரைக் காரணம் காட்டி, ஒருநாள் தொடர்களிலிருந்து முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடியாது என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...