இலங்கை மகளிர் அணிக்கு தென்னாபிரிக்காவில் படு தோல்வி | தினகரன்

இலங்கை மகளிர் அணிக்கு தென்னாபிரிக்காவில் படு தோல்வி

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது மற்றும் இறுதி ரி-20 போட்டியிலும் இலங்கை மகளிர் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தத் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றிக் கொண்டது.

சென்சூரியன், சுப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் (6) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

வழக்கம்போல் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்பம் தொட்டே ஓட்ட வேகத்தை அதிகரித்தது. குறிப்பாக அந்த அணித் தலைவியும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையுமான டான் வான் நீகேர்க் 29 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீராங்கனை டஸ்மின் பரிட்ஸ் 30 பந்துகளில் 36 ஓட்டங்களை விளாசினார்.

மத்திய வரிசை வீராங்கனைகளும் சிறப்பாக துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை மகளிர் அணியினர் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் எதிரணி துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுக்க தவறினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பிரசாதனி வீரக்கொடி முகம்கொடுத்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட் ஆனார். எனினும் மறுமுனை ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான அணித்தலைவி சமரி அத்தபத்து அதிரடியாக ஆடி இலங்கை அணியின் வெற்றிக்காக போராடினார்.

இந்நிலையில் மறுமுனை விக்கெட்டுகள் பறிபோனதால் தேவையான ஓட்டவேகத்தை இலங்கை மகளிர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களையே பெற்றது. சமரி அத்தபத்து 36 பந்துகளில் 6 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 43 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது தென்னாபிரிக்க அணி சார்பில் நடின் டி கிளர்க் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ஷப்னிம் இஸ்மைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த தொடரில் தென்னாபிரிக்க மகளிர் அணி சார்பில் அந்த அணியின் தலைவி டான் வான் நீகேர்க் துடுப்பாட்டத்தில் ஒரு அரைச்சதத்துடன் மொத்தம் 142 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதை வென்றார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெச்சட்ஸ்ரூமில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...