Friday, March 29, 2024
Home » மதீனாவில் உலகின் முதல்தர இஸ்லாமிய பல்கலைக்கழகம்

மதீனாவில் உலகின் முதல்தர இஸ்லாமிய பல்கலைக்கழகம்

by gayan
December 20, 2023 11:14 am 0 comment

மதீனாவில் அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் குர்ஆன் ஸுன்னாவின் கல்வியை உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகைதரும் பல இலட்சம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகப் போதிக்கும் ஒரு கல்வி நிலையமாகும். இப்பல்கலைக்கழகம் ஹிஜ்ரி 1381 அதாவது 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சவூதி மன்னர் ஸுஊத் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிக்காலத்தில் அரச செலவில் இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் தனித்துவம் பெற்று முன்னணி வகிக்கின்றது.

இன்று இப்பல்கலைக்கழகத்தில் 30,000 இற்கும் மேற்பட்ட உலகின் 185 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 1000 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் கல்விச் செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்கின்றனர்.

அதேவேளை 2500 இற்கு மேற்பட்ப கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இங்கு கடமை புரிகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டுவரை இஸ்லாமியக் கல்விக்குரிய அல்குர்ஆன் அறிவு பீடம், ஹதீஸ் கலாபீடம், ஷரீஆ பீடம், இஸ்லாமிய அழைப்புப் பணிக்கான கலாபீடம், அறபுமொழிபீடம் ஆகிய ஐந்து பீடங்கள் மாத்திரமே இங்கு இருந்தன. பிற்காலத்தில் மருத்துவ பீடம், பொறியியல், விஞ்ஞான, பல்மருத்துவ, மருந்தக கற்கை, தாதியியல், பொருளியல் முகாமைத்துவம், வணிகம், ஊடகவியல், பிரயோக விஞ்ஞானம், மனிதநேய கற்கை உட்பட மொத்தம் 18 கலாபீட பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.

இப்பல்கலைக்கழகம் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தல் வரிசையில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணிப்பீட்டில் 11 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே யுனெஸ்கோ மற்றும் பொருளியல், அபிவிருத்திக்கான அமைப்பு (OECD) போன்ற சர்வதேச நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றுள்ளது. மேற்படி துறைகளுக்கு அப்பால் உயர்கல்வி பிரிவில் முதுமாணி கற்கை, முனைவர் கற்கை ஆகியனவும் இப்பல்களைக்கழகத்தில் காணப்படுகின்றன. அவ்வாறே அரபு மொழி தெரியாத மாணவர்களுக்காக மஃஹத் லுஹா அல் அரபிய்யா எனும் அரபுமொழி கற்கைபீடமும் உள்ளது. மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மதீனாவுக்கு வருவதற்கான இலவச விமான பயணச்சீட்டுகள், கற்கைநெறியை பூர்த்திசெய்தபின் நாடு திரும்புவதற்கான இலவச விமான டிக்கெட், ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும் கோடை விடுமுறையில் நாடு சென்று திரும்புவதற்கு இலவச விமான சீட்டு என்பன வழங்கப்படும். புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு இலவச உள்ளக விடுதி, கற்றல் தளபாடங்கள் மற்றும் உடைகள் இலவசமாக வழங்கப்படும். மிகக் குறைந்த விலையில் தரமான மூன்று வேளை உணவு வழங்கப்படும். மாணவருக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்குவதற்காக வருடாந்தம் ஆயிரம் ரியால்கள் வழங்கப்படும். மாணவரின் கைச்செலவுக்காக மாதந்தம் ஆயிரம் ரியால்கள் வழங்கப்படும். பரீட்சை பெறுபவர்களில் சிறப்புச்சித்தி எய்தும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வருடாந்தம் ஆயிரம் ரியால்கள் வழங்கப்படும். பல்கலைக்கழகத்திலிருந்து மதீனா ஹரத்துக்கு சென்று வருவதற்கு தினமும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

மெளலவி

ஏ.ஜி.எம். ஜெலீல்…?

மதனி, மஃஹதுஸ் ஸுன்னா

அறபுக் கல்லூரி, காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT