வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம் | தினகரன்

வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம்

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வழங்குவது தொடர்பில் 4/4/2018நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் துறைசார்ந்த அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,  

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை வழங்கும்போது ஏற்கனவே கடந்த 40வருடங்களாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற 35வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று கடந்த வருடம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் இந்த தீர்மானத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை வழங்குவது தொடர்பில் கடந்தவாரம் திறந்த கேள்வி கோரப்பட்டிருந்தது.  

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் என்னை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  

நேற்று முன்தனம் (6/2) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரால் துறைசார்ந்த அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 35 கடை உரிமையாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மிகுதியாகவுள்ள கடைகளை திறந்த கேள்வியில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சருக்கு பிரதமரால் பணிப்புரை வழங்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.    

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...