2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர் | தினகரன்

2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர்

இந்திரா மல்வத்த

தேசிய ஏற்றுமதி வியூகத்தின் முதல் ஆறு மாத கால முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த கூறியுள்ளார்.  

கடந்த வாரம் நடைபெற்ற 17ஆவது ஏற்றுமதியாளர்கள் ஒன்றுகூடல் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைத் கூறினார்.  

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 17பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டலாம். அது கடந்த மூன்று வருட கால சராசரியுடன் ஒப்பிடுகையில் 27சதவீத அதிகரிப்பாகும்.

எவ்வாறெனினும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2018ஆம் வருடத்துக்கான ஏற்றுமதி வருமானம் 16.2பில்லியன் டொலர்களாக இருந்தது.

எனினும் இந்தத் தொகையில் சுங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 550மில்லியன் டொலர்கள் சேர்க்கப்படவில்லை. சுங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் தொகை 2018ஆம் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்படுமா அல்லது 2019ஆம் ஆண்டின் வருமானத்துடன் சேர்க்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.  

ஏற்றுமதியின் முக்கிய அங்கமான ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் இந்த வருடத்துக்கான (2019) இலக்கு 20பில்லியன் டொலர்களாகும்.

தேசிய ஏற்றுமதி வியூகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு சீராக இயங்கினால் அந்த இலக்கை எட்ட முடியும் என்று இந்தத் துறையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.   கடந்த வருடம் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானம் நாட்டின் சரித்திரத்திலேயே பெறப்பட்ட அதிகமான வருமானமாக அமைகிறது என்று அங்கு உரையாற்றிய அபிவிருத்தி மூலோபாயங்கள் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கூறினார்.  

மேற்கூறிய ஏற்றுமதி இலக்கு சீரற்ற உலக நிலவரங்கள் மற்றும் கடுமையான போட்டிச் சந்தையின் இடையில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

ஏற்றுமதிகளை விஸ்தரிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு சரியான கொள்கைகளை அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கம்.

அதன் மூலம் எதிர்கால இலக்குகளை ஏற்றுமதியாளர்கள் எட்டமுடியும்.

அத்துடன் இந்த ஏற்றுமதியாளர்கள் ஒன்று கூடல் ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்ததொரு மேடையாகும். அவர்கள் தமது பிரச்சினைகளை இங்கு கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைத் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.  

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறி வரும் போதிலும் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகள் இன்றும் முடிந்த பாடில்லை.

எனினும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதன் மூலம் அவர்கள் தமது ஏற்றுமதி சந்தையை விஸ்தரித்து நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர முடியும் என்று அமைச்சர் சமரவிக்கிரம அங்கு குறிப்பிட்டார்.  

தேசிய ஏற்றுமதி வியுகத்தின் முன்னேற்ற அறிக்கையை அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும். அதற்கு தேவையான பரிந்துரைகளை செய்வதுடன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதையும் அரசாங்கம் யோசித்து வருகிறது என்று அமைச்சர் அங்கு மேலும் கூறினார்.  


Add new comment

Or log in with...