வியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடம் | தினகரன்


வியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடம்

வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆசியாவில் சிறந்த இடங்களில் இலங்கை பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வியாபாரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஆசிய பிராந்திய நாடுகளில் இலங்கை 13வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் 85.24புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது. நூறு ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு 61.22புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் கம்பனிகளின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகளில் பாகிஸ்தான் 11ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ள சிங்கப்பூர், உலகளாவிய ரீதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவில் வியாபாரம் மேற்கொள்ள சிறந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் தென்கொரியா காணப்படுகிறது.

வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அயல் நாடான இந்தியா உலகத்தில் 77வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 23ஸ்தானங்கள் முன்னேறியுள்ளது. வியாபாரங்களை ஆரம்பித்தல் மற்றும் கட்டுமான அனுமதி கையாளல் ஆகிய விடயங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டதன் ஊடாக இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் இரண்டாவது பாரிய பொருளாதாரமும், பாரிய ஏற்றுமதி பொருளாதாரத்தையும் கொண்ட சீனா கணிசமான முன்னேற்றத்தை அல்லது வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. உலகளாவிய ரீதியில் வியாபாரம் செய்வதற்கு உரிய நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு 46வது இடம் கிடைத்துள்ளது.


Add new comment

Or log in with...