சிங்களமொழி புரியாவிடின் அவஸ்தை,நெருக்கடி! | தினகரன்


சிங்களமொழி புரியாவிடின் அவஸ்தை,நெருக்கடி!

நாட்டிலுள்ள பிரதான அரச நிறுவனங்களில் தொழில் திணைக்களமும் ஒன்றாகும். தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இத்திணைக்களத்திற்கு நாடு முழுவதும் மாவட்ட கிளை அலுவலகங்கள் செயற்படுகின்றன. தொழில் ஆணையாளர் நாயகத்தைத் திணைக்களத் தலைவராகக் கொண்டு இத்திணைக்களத்தின் தலைமை அலுவலகங்கள் செயற்படுகின்றன.

தொழில் ஆணையாளர் நாயகத்தைத் திணைக்களத் தலைவராகக் கொண்ட இத்திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல தொழில் ஆணையாளர்களும், பிரதி ஆணையாளர்களும், உதவி ஆணையாளர்களும் அதே போல் தொழில் உத்தியோகத்தர்களும் பதவிநிலை அலுவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 

மாவட்ட தொழில் திணைக்களங்களுக்குப் பொறுப்பாகப் பிரதி ஆணையாளர்கள் அல்லது உதவி ஆணையாளர்கள் செயற்படுகின்றனர். ஊழியர் சேமலாப நிதிய அலுவலகமும் இத்திணைக்களத்தின் கீழேயே இயங்குகின்றது. தனியார் துறை ஊழியரின் நலன் கருதிய பல தொழிற் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மேற்பார்வை செய்வது, ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, வழிகாட்டுவது எனப் பல பொறுப்புகள் இத்திணைக்களத்திற்கு உள்ளது. தனியார் துறையில் தொழில் வழங்குனர் மற்றும் தொழில் செய்பவர்களுக்கிடையே உறவைப் பேணி தொழிற்களத்தில் அமைதியையும், சுமுக உறவையும் பேணும் பாரிய பொறுப்பு தொழிற்றிணைக்களத்திற்கு உள்ளது. இவ்வாறு நாட்டின் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனமான தொழில் திணைக்களத்தால் தனியார் துறையினர் ஓய்வு பெற்றதன் பின்பான ஊழியர் சேமலாப நிதி கையாளப்படுகின்றது. 

இவ்வாறு பாரிய செயற்பாட்டை மேற்கொள்ளும் இத்திணைக்களத்தில் காணப்படும் குறிப்பிடக் கூடிய குறைபாடாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படாதுள்ளமையைக் குறிப்பிடலாம். இந்நாட்டின் பெருந்தொகையினராக தொழில் செய்பவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களாவர்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்.- அதே போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியார் துறைகளில் தொழில் செய்பவர்களுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பெருமளவு தமிழர்கள் தனியார் துறையில் பணி புரிகின்றார்கள். இவர்கள் அனைவரதும் தொழில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலன்களைப் பேண வேண்டியது தொழில் திணைக்களத்தின் கடமையாகின்றது. 

தொழில் திணைக்களத்தில் தமிழ்மொழி மூலம் தமக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் செல்லும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அங்கு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தமிழ் தெரிந்த பணியாளர்கள் ஒரு சிலரே அங்கு உள்ளனர். இதன் காரணமாக அங்கு செல்லும் தமிழர், முஸ்லிம்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகின்றனர்.

அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து  நிறைவேற்ற தமிழ்மொழிப் புலமையுள்ள அலுவலர்கள் இல்லாத நிலையே தொழில் திணைக்களத்தில் மாத்திரமன்றி பெரும்பாலான தொழில் அலுவலகங்களில் உள்ளது. ஒருபடிவத்தைத் தமிழ் மொழியில் பூர்த்தி செய்து கொண்டு வந்து கையளித்தால் அதை வாசித்து, விளங்கிக் கொள்ளும் ஆற்றலுள்ள அலுவலர்கள் இன்மை பொதுவாகவே காணப்படுகின்றது. 

தொழில் நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளையிட்டு முறைப்பாடு செய்ய முனையும் போது முறைப்பாட்டாளர் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது சர்வ சாதாரண நிலைமையாகவுள்ளது. விசாரணை செய்யும் அதிகாரிக்கு தமிழ் மொழியில் விளங்கிக் கொள்ள முடியாத போது உரிய தீர்வைப் பெற்றுக் கொள்வதில் சிக்கலேற்படுகின்றது. பொதுவாக உயர் பதவி வகிப்பவர்களுக்கு இரு தேசிய மொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் போதிய தகைமை இருக்க வேண்டும். உயர் தரத்தில் அதாவது பேச வாசிக்க, எழுத, விளங்கிக் கொள்ளக் கூடிய மொழி அறிவு இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்ற போதிலும் அந்நிலை அற்ற நிலையே காணப்படுகின்றது. 

அதுமட்டுமல்ல, தமிழ் மொழியில் பூர்த்தி செய்யப்படும் படிவங்களை வாசித்தறிந்து சரிபிழை பாரக்கக் கூடிய ஆற்றலும் அற்ற நிலையிலேயெ பெரும்பாலான தொழில் திணைக்கள அதிகாரிகள் உள்ளனர். இதனால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்கள் தனியார் துறைகளிலும், பெருந்தோட்டத்துறைகளிலும் பணியாற்றும் சிங்கள தொழியறிவு அற்ற தமிழ்த் தொழிலாளர்களும் ஊழியர்களுமேயாவர். 

இந்நிலையில் தமிழ்த் தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றக் கூடிய வசதிகளும் பொதுவாகவே அற்ற நிலை காணப்படுகின்றது. மலையகப் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஊழியர் சேமலாபநிதி, மற்றும் தொழில் துறைசார்ந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்ள மாவட்டத் தொழில் திணைக்களங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பெரும் இடர்பாடுகளைத் தினமும் சந்திப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 

நாட்டின் தேசிய மற்றும் நிர்வாக மொழியாக அரசியலமைப்பினூடாகத் தமிழ் மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதுவும் தமிழ் மொழிக்கு நிர்வாக உரிமை வழங்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டம் உட்படப் பல பிரதேசங்களில் நிலவும் இந்நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்த் தொழிலாளர்களும், ஊழியர்களும் தொழில் அலுவலகங்களில் எதுவித பிரச்சினையுமின்றி தமிழ் மொழியில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும். 

தமிழ்த் தொழிலாளர்களும், ஊழியர்களும் எதிர்கொண்டுள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கங்களும் முன்வர வேண்டும். தொழில்திணைக்களத்துடன் கலந்துரையாட வேண்டும்.

தமிழை முதல் நிர்வாக மொழியாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தொழில் தலைமை அலுவலகத்தால் அனுப்பப்படும் சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவித்தல்கள், அறிவுறுத்தல்களும், கூட  தனிச்சிங்களத்திலேயே அனுப்பப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. அதனால், நாட்டின் தேசிய தொழிக்கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி அவரவர் தமது மொழியில் ஏதாவது ஒரு தேசிய மொழியில் தடையின்றிய பயன் பெற ஏற்ற ஒழுங்குகளைத் தொழில் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். 

இலங்கை மாறன் 


Add new comment

Or log in with...