ஆட்சிக் கவிழ்ப்புக்கான செயல்முறைகள் | தினகரன்


ஆட்சிக் கவிழ்ப்புக்கான செயல்முறைகள்

1970செப்டெம்பர் 15ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ட்ரி கிஸிங்கர் போட்ட உத்தரவு கையாலாகத்தனத்தின் உச்சம்! வரப்போகும் சிலியின் சோசலிச ஜனாதிபதி சால்வடோ அலென்டேவின் அரசை கவிழ்ப்பதற்கு எதையும் செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு அவர்கள் உத்தரவு போட்டார்கள். பனிப்போர் காலம் என்பதால் மனசாட்சிக்கெல்லாம் இடமில்லை.  

“சிலியில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்” என்பதுவே அமெரிக்காவின் திட்டமாக இருந்தது. சிலியில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு என்றே அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ 10மில்லியன் டொலர் செலவில் ‘பியுப்லட்’ திட்டத்தை ஆரம்பித்தது.  

இதற்கு ஏற்ப 1971, ஜூலை 11ஆம் திகதி அலென்டே அரசு நாட்டின் செப்புத் துறையை தேசியமயமாக்கியதால் அதில் அண்டிப் பிழைத்துவந்த அமெரிக்க பெரு நிறுவனங்கள் அமெரிக்க அரசின் கழுத்தை பிடிக்க ஆரம்பித்தது.   

அலென்டேவுக்கு எதிராக சிலி இராணுவத்தின் ஒரு பிரிவை சி.ஐ.ஏ தொடர்புகொள்ள ஆரம்பித்தது. மூன்று ஆண்டுகள் கழித்து 1973, செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்கா திட்டமிட்டபடி சிலியில் இராணுவ சதிப்புரட்சி நிகழ்ந்தது, அலென்டே கொல்லப்பட்டார். அன்றுதான் சிலியின் இருண்ட யுகம் ஆரம்பமானது. உலகப் புகழ்பெற்ற சர்வாதிகாரியாக உருவெடுத்தார் அகஸ்டோ பினோசே. சிலியில் 1990வரை இராணுவ ஆட்சி நீடித்தது.  

அமெரிக்காவின் இந்த திருவிளையாட்டு சிலிக்கு மாத்திரம் பொருந்துவதல்ல. கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா இந்த சாகசத்தை உலகெங்கும் நிகழ்த்தியிருக்கிறது. அதிலும் தென் அமெரிக்கா என்றால் விசேடமானது. இப்போது அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நாடுகளிடம் அகப்பட்டிருக்கும் நாடு வெனிசுவேலா.  

வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி, சமூகப் பிரச்சினைகள், அரசியல் குழப்பங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது அங்கே இவ்வாறு தெருவோரத்தில் இருந்து நான்தான் ஜனாதிபதி என்று கூச்சலிட்ட எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதியாக அமெரிக்கா ஏற்பது நியாயமாக இருக்கிறது என்று ஊர் பேர் தெரியாத நியாயம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.  

சிலியின் கடந்த கால வரலாறு ஏன் வெனிசுவேலாவுக்கு பொருந்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினாலேயே பல விடைகள் கண்முன் தோன்றுகிறது.  

உண்மையில் தென் அமெரிக்கா என்பது காலனித்துவ சமூக, பொருளாதா, கலாசாரத்தில் மூழ்கிப்போன ஓர் இடம். அங்கே ஒற்றை உற்பத்திதான் பெரும்பாலும் மொத்த உள்நாட்டு வருமானத்தையும் தூக்கிப்பிடிக்கிறது. சீனி என்றால் கியூபா, எண்ணெய் என்றால் வெனிசுவேலா. எனவே, அந்த நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு அந்த உற்பத்தியில் கை வைத்தால் போதுமானது. 

வெனிசுவேலாவிலும் அது தான் நடந்தது. வெனிசுவேலாவின் 98வீதமான ஏற்றுமதி என்பது வெறுமனே எண்ணெய்தான். 2008ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பீப்பாய் ஒன்று 160.72டொலர்களாக இருந்த மசகு எண்ணெய் இந்த ஆண்டு ஜனவரியில் வெறுமனே 51.99டொலர்கள்தான். எனவே கடந்த தசாப்தத்தில் வெனிசுவேல பொருளாதாரம் படுகுழியில் விழுவதை சொல்லவே தேவையில்லை.  

அதாவது சாதாரண குடும்பஸ்தனின் அன்றாடப் பிழைப்புடன் ஒப்பிட்டாலே இது புரிந்துவிடும். தனது ஏற்றுமதிக்கு போதிய வருமானம் கிடைக்காதபோது அதிக கடன் வாங்க, அந்தக் கடன் கொழுத்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக தொகை கடனுக்கே செலவாகி விடுகிறது.  

இதனால் பண வீக்கம் அதிகரித்து சாதாரண மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிடும். நாட்டின் அடிப்படை உட்கட்டமைப்புகளை செய்யவே அரசிடம் பணம் இல்லாமல் இருக்கும்.  

எனவே கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு, பாதுகாப்பு என மக்களுக்கான மானியங்களில் அரசு கைவைக்கும். நாட்டில் வாழ வழியில்லாத போது அங்கிருந்து இடம்பெயர்வது என்பது தொன்றுதொட்டு வருகின்ற ஒன்று. கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிசுவேலாவில் அதுதான் நிகழ்கிறது. அங்கிருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  

இப்படியான தருணத்தைத்தான் அமெரிக்காவும் மேற்குலகமும் எதிர்பார்த்திருக்கும். ஜனநாயக ரீதியாகவோ அல்லது சதி மூலமோ தனக்குத் தேவையானவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு பொன்னான சந்தர்ப்பம் இதுதான். வெனிசுவேலாவில் இப்போது நான்தான் ஜனாதிபதி என்று கூறிக்கொண்டிருக்கும் ஜுவான் குவைடோ என்பவர் இப்படி அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆவார்.  

2014தொடக்கம் வெனிசுவேலா அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. அண்மையில் கூட வெனிசுவேலாவில் கடும் வெள்ளம் பாதித்து மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்காவும் பிரிட்டனும் வெனிசுவேலாவின் பில்லியன் டொலர்களை திருடியது.  

அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகளால் கடந்த நான்கு ஆண்டுகளில் வெனிசுவேலா பல பில்லியன் டொலர்களை இழந்திருக்கிறது. இது அந்த நாட்டில் செயற்கையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த போதுமானது. 

வெனிசுவேலாவில் அமெரிக்கா நினைத்தபடி ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்திருக்கிறது. எனவே அடுத்த கட்டமான இராணுவத்தை கொண்டேனும் மடுரோ அரசை வீழ்த்துவது குறித்து அமெரிக்கா ஊரூராக கூற ஆரம்பித்தது.  

வெனிசுவேலா பற்றி கூறுவதற்கு அண்மையில் செய்தியாளர் சந்திப்பை கூட்டிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின், கையில் வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையில், “கொலம்பியாவில் 5,000துருப்புகள்” என்று எழுதி இருந்தது. வெனிசுவேலாவின் அண்டை நாடான அங்கு ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் இருக்கின்றன.  

எனவே, வெனிசுவேலாவில் ஆட்சி கவிழ்ப்புக்கான சதிப்புரட்சி ஒன்று நிகழுமேயானால் அதற்கு தயாராக அமெரிக்கா இருப்பதை அது கூறாமல் கூறி இருக்கிறது.  

எனவே, வெனிசுவேலாவில் நிகழும் அடுத்த கட்ட நகர்வுகள் நல்லதாக இருக்காது.

எஸ்.பிர்தௌஸ்


Add new comment

Or log in with...