Friday, March 29, 2024
Home » டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் அவசியம்

டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் அவசியம்

by gayan
December 20, 2023 6:00 am 0 comment

நாட்டில் கடந்த சில மாதங்களாக நீடித்துவரும் சீரற்ற காலநிலையின் விளைவாக டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. டெங்கு ஒழிப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், காலி, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்னும் சில பிரதேசங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று இரண்டு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் ஒன்று சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்திலும் மற்றொரு கூட்டம் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹீபால தலைமையிலும் நடைபெற்றுள்ளது. இக்கூட்டங்களின் ஊடாக டெங்கு வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பது தெளிவாகிறது.

தற்போதைய சூழலில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், வளாகங்கள் உள்ளிட்ட பொதுக்கட்டடங்கள் போன்றன நுளம்பு பெருக்கத்திற்கான முக்கிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி டெங்கு நுளம்பு பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்பை அவ்விடங்கள் அதிகளவில் கொண்டுள்ளதே இதற்கான காணமாகும்.

அதனால் டெங்கு நுளம்பு ஒழிப்பு, நோய்க் கட்டுப்பாடு, டெங்கு வைரஸ் நோய்க்கான சிகிச்சைகளை வலுப்படுத்தல் என்பன குறித்து இக்கூட்டங்களின் போது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஒரு சில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ‘டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்திற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், அரச நிறுவனங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்புக்கான விஷேட திட்டத்தினை, நடைமுறைப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வறிவுறுத்தல்கள் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியவையாகும். தற்போதைய சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கத்தைப் பரவலாகக் காண முடிகிறது. அத்தோடு டெங்கு வைரஸ் நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் பெருக்கமடைந்திருப்பது டெங்கு வைரஸைக் காவிப் பரப்பும் நுளம்பினம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

இவ்வின நுளம்புகள் தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் முட்டை இட்டு பல்கிப் பெருக்கக்கூடிய பண்பை கொண்டுள்ளன. அதன் காரணத்தினால் இந் நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பது அவசியம். அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலும் சுற்றாடலிலும் காணப்படும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கக்கூடிய கைவிடப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், பிளாஸ்ரிக் மற்றும் மட்பாண்டப் பொருட்கள், பொலித்தீன் உறைகள் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் பிரதேச மட்டத்தில் சிரமதானப் பணிகளை முன்னெடுத்து திண்மக்கழிவுப் பொருட்களை ஒழுங்குமுறையாகவும் தொடராகவும் அப்புறப்படுத்துவது அவசியம்.

இந்நடவடிக்கைகள் சீராகவும் ஒழுங்குமுறையாகவும் முன்னெடுக்கப்படுமாயின் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்திற்கு வாய்ப்பு இருக்காது. ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளைத் தவிர வேறு எந்தவொரு நுளம்பினமோ அல்லது வேறு காரணிகளோ இவ்வைரஸைக் காவிப்பரப்பக் கூடியதல்ல. அத்தோடு இவ்வின நுளம்புகளைத் தவிர வேறு நுளம்பினத்தின் ஊடாகவோ அல்லது ஏனைய காரணிகள் மூலமோ இவ்வைரஸ் பரவக்கூடியவையும் அல்ல. அதனால் ஈடிஸ் எஜிப்டைய் நுளம்புகளை ஒழித்துக்கட்டும் போது டெங்கு வைரஸின் தாக்கமும் அச்சுறுத்தலும் செல்வாக்கற்று விடும். இதனை உறுதிபடக்கூறலாம்.

ஆகவே இந்நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்கு துணை போகாதபடி வீட்டு சூழலையும் சுற்றாடலையும் பேணிப் பராமரித்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.அது நாட்டுக்கும் மக்களுக்கும் அளிக்கும் பாரிய சேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT