வறுமையிலிருந்து விவசாயிகளை மீட்க வழிவகை காண வேண்டும்! | தினகரன்

வறுமையிலிருந்து விவசாயிகளை மீட்க வழிவகை காண வேண்டும்!

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் போதியளவான நிதியை நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்ய 1200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பணடாரநாயக்க தெரிவித்திருக்கின்றார். 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நெல் களஞ்சிய சபையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென விவசாயத் துறை அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்திருக்கின்றார். இதனை ஏக காலத்தில் முன்னெடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் மாவட்ட ரீதியில் குறுகிய கால இடைவெளியில் இதனைச் செய்ய இருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டங்களுக்கு இதற்காக நிதி ஒதுக்கிக் கொடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலான விளைச்சல் நடக்கும் அம்பாறை மாவட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு விடயத்தில் விவசாயிகள் நீண்ட காலமாக பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கம் உத்தரவாத விலையை நிர்ணயித்தாலும் கூட நெல் சந்தைப்படுத்தும் சபை அந்த விலைக்கு விவாசாயிகளிடமிருந்து எல்லா நெல்லையும் கொள்வனவு செய்வதில்லை. ஒரு விவசாயியிடமிருந்து இரண்டாயிரம் கிலோ நெல்லையே சபை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்கின்றது.

மீதமுள்ள நெல்லை அவர்கள் வெளிச்சந்தைகளிலேயே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது விவசாயிகளை பெருமளவு பாதிப்படையச் செய்கின்றது. தனியார் வியாபாரிகள் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முன்வருவது கிடையாது.

நெல் அறுவடைக் காலத்தில் நெல் வியாபாரிகளின் லொறிகள் விவசாயப் பகுதிகளில் கியூவில் வந்து நிற்பதைக் காணமுடிகிறது. அப்பாவி விவசாயிகள் பெரும் கடன்பட்டு, மனைவி, பிள்ளைகளின் நகைகளைக் கூட அடகு வைத்தே விவசாயம் செய்கின்றனர்.

வங்கிகளில் கடன் பெற்று உரத்தை வாங்கி பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் விவசாயம் செய்து அறுவடைக் காலத்தில் நெல்லை உத்தரவாத விலைக்கு விற்க முடியாத அவலத்துக்குள் தள்ளப்படுகின்றனர். பெற்ற கடனைத் தீர்ப்பதற்காக நெல் முதலாளிகளிடம் விலை போக வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு போக விவசாயத்துக்காக காலத்தையும், பணத்தையும் செலவிட்டு இறுதியில் கையறு நிலைக்குத் தள்ளப்படும் ஒரு துரதிர்ஷ்டத்தையே விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். தங்களுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப் போகின்றது என்ற வேதனைக் குரலையே கேட்கக் கூடியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னரான காலம் எமது நாடு விவசாயத்தில் தன்னிறைவு கொண்டதாகக் காணப்பட்டது. எமது அரிசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு உள்ளது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க, இரண்டாவது பிரதமர் டட்லி சேனாநாயக்க போன்றோர் தமது ஆட்சிக் காலங்களில் விவசாயத்துக்கே முன்னுரிமை கொடுத்து வந்தனர். அப்போதெல்லாம் விவசாயிகளிடம் சந்தோசத்தையே காணக் கூடியதாக இருந்தது. இன்று அவ்வாறில்லை.

இன்றும் கூட வருடாந்தம் அறுவடை விழா நடக்கவே செய்கின்றது.ஆனால் விவசாயிகளின் உள்ளக் குமுறல்களுக்கு தீர்வு கிட்டவில்லை.

அரசாங்கம் விவசாயத்துக்கு கைகொடுப்பதாக கூறிக் கொண்ட போதிலும் விவசாயிகளின் துயரம் தீரவில்லை.

நெல் சந்தைப்படுத்தும் சபை உத்தரவாத விலையை நிர்ணயித்த போதும் அது குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப் போவதையே காண முடிகிறது.

இந்த உத்தரவாத விலையை வெளிச்சந்தை வியாபாரிகளுக்கு கட்டாயப்படுத்த அரசு முனையவில்லை. விவசாயிகள் உரிய காலத்தில் தாம் பெற்ற கடனிலிருந்து மீள்வதற்கு வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே நெல்லை அளக்க வேண்டிய அவலத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் பயன் பெறுவது வியாபாரிகள் ஆவர்.

விவசாயிகளின் இந்த ஓலம் அரசியல்வாதிகளின் காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை. தனியார் வர்த்தகர்களை ஊக்கப்படுத்துமளவுக்கு விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.

விவசாயிகளிடம் மகிழ்ச்சியும், மனநிறைவும் சதாகாலமும் நிலைபெறக் கூடிய வகையில் அவர்களது அனைத்து நெல்லையும் அரசு உத்தரவாத விலைக்கு வாங்கக் கூடியதான திட்டத்தை வகுக்க வேண்டும். அரசாங்கத்தால் முழுமையாக கொள்வனவு செய்ய முடியாதெனின் தனியார்துறை அதே உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யக் கூடிய வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும்.

நெல் வர்த்தகர்கள் கொள்ளை விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து சேமித்து வைத்து அரிசியின் விலை அதிகரிக்கும் போது சந்தைக்கு அனுப்பி இலாபமீட்டுகின்றனர். இது கூட கொள்ளை வியாபாரம்தான் என்பதை மறுக்க முடியாது.

வர்த்தக கொள்ளையில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.


Add new comment

Or log in with...