ஜனாதிபதி சிசியின் பதவிக்காலத்தை நீடிக்க எகிப்து எம்.பிக்கள் ஒப்புதல் | தினகரன்

ஜனாதிபதி சிசியின் பதவிக்காலத்தை நீடிக்க எகிப்து எம்.பிக்கள் ஒப்புதல்

எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் பூர்வாங்க ஒப்புதலை அளித்துள்ளது.  

சிசி தனது இரண்டாவது தவணை பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு பூர்த்தியான பின் அவரால் மீண்டும் அந்தப் பதவியை வகிக்க முடியாது. 

இந்நிலையில் எதிர்கால ஜனாதிபதி பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகள் நீடிக்கவும் சிசி மேலும் இரண்டு தவணைகளுக்கு நிற்கவும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தரப்பு பரிந்துரைத்துள்ளது.  

இந்த பரிந்துரைக்கு மூன்றில் இரண்டு எம்.பிக்கள் ஆதரவு அளித்ததால் இந்த மாற்றம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு விடப்படும்.  

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான மொஹமது முர்சியை இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்த்தே 2013ஆம் ஆண்டு சிசி ஆட்சிக்கு வந்தார்.  

அது தொடக்கம் பல்லாயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்தது, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது தொடர்பில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன.  

கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் 97வீத வாக்குகளை பெற்று சிசி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வானார். தம்மை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கைது செய்யப்பட்டும், போட்டியில் இருந்து விலகிய நிலையிலுமே அவர் வெற்றியீட்டினார்.  

2014சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எகிப்து அரசியலமைப்பின் 14ஆவது சரத்தில், ஜனாதிபதி நான்கு ஆண்டுகள் கொண்ட தவணைக்கு பதவி வகிக்க முடியும் என்பதோடு ஒரு முறை மாத்திரமே மீண்டும் தேர்வு செய்யப்பட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி 64 வயதான சிசியால் 2034 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க முடியும்.       


Add new comment

Or log in with...