வாழும் வசதியற்ற வாடகை வீடுகள் | தினகரன்

வாழும் வசதியற்ற வாடகை வீடுகள்

உலகின் அநேகமான நாடுகளிலுள்ள முக்கிய நகரங்களில் வேலைவாய்ப்புச் சந்தை உருவாகியுள்ளதால் அநேகமான மக்கள் நகரிலும் நகருக்கு அண்டிய பிரதேசங்களிலும் அதிகமாக வாழ விரும்புகின்றார்கள். இந்நிலைமையை இலங்கையிலும் காணக் கூடியதாகவுள்ளது. அதனால்  கிராமத்திலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் அநேகமானோரைக் காண முடிகிறது.
 
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு வெளியிடங்களிலிருந்து வரும் மக்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. முக்கியமாக தொழில் நிமித்தம் தங்கள் குடும்பங்களுடன் இங்கு வருபவர்கள் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இது அவர்களுக்கு மிகவும் கசப்பான அனுபவத்தை ஏற்படுத்துகின்றது என பலரும் குறிப்பிடுகின்றனர். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள்,ஆசிரியர்கள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் போன்று பணிபுரிவோர் இவ்வாறு பல வகையான பாதிப்புகளுக்கு உட்படுகின்றார்கள். அதிலும் உயர் பதவிகளில் உள்ளவர்கள், அதிக வருமானம் பெறும் நபர்கள் மோசமான நிலைமைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. அவர்கள் வாடகைக்குப் பெறுவது அதிசொகுசு வீடுகளாகும். ஆனால் மத்தியதர வகுப்பினரின் குடும்பங்களைப் போன்று மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றன.
 
கொழும்பில் மருதானை, பொரளை, இராஜகிரிய, பத்தரமுல்ல, பிலியந்தல, மஹரகம, ஹோமாகம, பொரஸ்கமுவ, வெள்ளவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நகருக்கு வெளியிலிருந்து வந்து வாடகைக்கு தங்கியிருப்பவர்களின் நிலைமையை ஆராய்ந்த போது அவர்களில் அநேகமானோர் பத்திரிகை விளம்பரங்கள் மூலமோ அல்லது வர்த்தக தகவல்களை வழங்கும் இணையங்கள் மூலமோ வாடகைக்கு வீடுகளைப் பெற்றுள்ளமை தெரியவந்தது. புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிடும் போது அவை முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படும். அவ்வாறு வீடுகளைச் சென்று பார்த்து ஏமாந்தவர்களே அதிகம்.
 
மூன்று படுக்கையறைகளுடன் கூடிய வீடுகள் என விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். அங்கு சென்று பார்த்தால் சில வேலைகளில் இரண்டு அறைகளே காணப்படும். சமையலறையையும் ஒரு அறையாக காட்ட முயற்சி செய்வார்கள். இன்னுமொரு விடயம், வாகன தரிப்பிடம் உள்ளது என விளம்பரத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அங்கு சென்றால் வீட்டுக்கு வெளியே அமைந்துள்ள இடத்தைக் காட்டுவார்கள்.
உதாரணமாக களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடம் 30,000 ரூபாவுக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. அதேயளவான அதற்கு அருகிலுள்ள வீடுகள் 35,000 தொடக்கம் 40,000 ரூபாவுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.
 
இவ்வாறான பல முறைகேடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஏற்படுகின்றது. குறிப்பிட்ட வாடகை வீடுகளுக்கு ஒரு வருடமோ இரண்டு வருடமோ குடியிருக்கச் செல்லும் நபர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பலவிதமானவை. தாங்கள் வசிக்கும் வீட்டில் நீர் ஒழுக்கோ, வடிகான்களில் அடைப்போ ஏற்பட்டால் வீட்டில் குடியிருக்கும் வேலைக்குச் செல்பவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. வீட்டு உரிமையாளர் அதை திருத்தித் தருவதாக வார்த்தைகளால் மட்டுமே கூறுவார். அதனால் தனது குடும்பத்தவர்களை சிரமத்திலிருந்து மீட்க வீட்டில் குடியிருப்பவரே தனது செலவில் அதனை திருத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
 
இவ்வாறான வாடகை வீடுகளில் அவற்றை சீரமைக்கும் பணியை வீட்டு உரிமையாளர்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை. அதனையும் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களே செய்ய வேண்டும்.
இவ்வாறான பல இடங்களில் இது தொடர்பாக ஆராய்ந்த போது அவர்களில் அநேகமானோருக்கு தரகர்களும் வீட்டு உரிமையாளர்களும் பொய்யான தகவல்களை வழங்குவது தெரியவந்துள்ளது.
நாம் முன்னர் கூறியது போன்று உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் நகரங்களை அண்டிய பிரதேசங்களில் இவ்வாறு வாடகை வீடுகளில் குடியிருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அந்நாடுகளில் அதற்காக மிக சிறந்த முறையில் ஒழுங்கமைப்புடன் கூடிய பலவழிகள் பின்பற்றப்படுகின்றன. வீடொன்றை வாடகைக்கு வழங்கும் போது அங்குள்ள அறைகளுக்கு ஏற்ப கட்டுப்பாட்டு வாடகையை நிர்ணயிக்க அந்நாட்டு அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கின்றன.
 
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறான கட்டுப்பாட்டு வாடகையை நிர்ணயம் செய்துள்ளன. இலங்கையும் அது போன்ற ஒரு முறையை பிள்பற்றினால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் அநேகமானோர் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைக்க வீட்டு வாடகை நிர்வாக குழுவொன்று இலங்கையில் செயற்படுகின்றது என்பதை அறியாது உள்ளார்கள். இது பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும் அதுபற்றி மக்கள் அக்கறை கொள்ளாததால் குறிப்பிட்ட சில நகர சபைகளில் மாத்திரம் செயல்படுகின்றது. விசேடமாக கொழும்பு நகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் செயல்படுகின்றது.
 
மகரகம நகரசபை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் ஒன்பது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுதாகவும் அவை அனைத்தும் வெற்றிகரமாக தீர்த்து வைக்கப்பட்டதாகவும் நகரசபை வாடகை நிர்வாகக்குழு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவ்வதிகாரி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு இதுபற்றி அறியத் தருவது மிக முக்கியம் எனத் தெரிவித்தார். 
 
வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் முற்பணத்தை திரும்ப செலுத்தாமை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் வீட்டை காலி செய்யுமாறு கோரல், வாடகை வீட்டை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களே தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
 
மேலும் அவ்வதிகாரி வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பற்றிய தரவுகள் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதியப்படவில்லை எனத் தெரிவித்தார்.
கொழும்பு நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் வீடுகளின் வாடகை கீழே குறிப்பிட்டவாறு அமைந்துள்ளது.
1. அறை 1, குளியலறை (15,000-_ 20,000)
2. அறை 1, குளியலறை (25,000-_ 30,000)
3. அறைகள் 2, குளியலறை  (35,000_- 45,000)
4. அறைகள் 3 ,குளியலறை  (40,000_- 50,000)
 
இதைத் தவிர அதிக வசதிகளையுடைய வீடுகளில் வாடகை 10,000 தொடக்கம் 20,000 வரை மாறுபடுவதோடு காணியின் அளவைக் கொண்டும் விலை அதிகரிக்கப்படுகின்றது. என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அநேகமானோர் கொழும்பில் தங்கியிருப்பது அவர்களுக்கு மாற்று வழி இல்லையென்பதனாலாகும். ஆகவே வாடகை வீடுகளில் வசிக்கும் தமக்கு அரசாங்கம் தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோளாகும்.
 
(பக்தி தர்மபிரிய மெண்டிஸ்)

Add new comment

Or log in with...