மோடி-மம்தா அரசியல் போட்டியின் நாடகம்! | தினகரன்

மோடி-மம்தா அரசியல் போட்டியின் நாடகம்!

கொல்கத்தாவில் 'தர்ணா' போராட்டம் மேற்கொண்டு வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை(சத்தியாக்கிரகம்) நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வாபஸ் பெற்று விட்டார்.

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார்.

''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார்.

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா பொலிசார் தடுத்து நிறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பொலிஸ் ஆணை யர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக கொல்கத்தா மெட்ரோ சாலை பகுதியில் தர்ணாவை தொடங்கினார். அவருடன் கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு தொடுத்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு அறிவித்தல் அனுப்பியது. ராஜீவ் குமார் சி.பி.ஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பொலிஸ் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் மம்தா தனது தர்ணா போராட்டத்தை நேற்றுமுன்தினம் மாலை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த அரசியல் களேபரங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த தர்ணா, இந்த அரசியல் பரபரப்பு அனைத்தும் ராஜிவ்குமார் எனும் ஒற்றை மனிதரிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது.

யார் இந்த ராஜிவ் குமார்? ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அவர் தற்சமயம் கொல்கத்தா பொலிஸ் ஆணையராக பணியாற்றுகிறார்.

ராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.

இந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது பொலிஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார்.

நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.

மம்தாவின் இந்தப் போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் ஓங்கி ஒலித்தது.மம்தாவின் போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் 'ராஜமன்னார் கமிட்டி' குறித்து பலர் இடுகைகளை பகிர்ந்தனர். ராஜமன்னார் கமிட்டி 1969ஆம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று.இந்த கமிட்டியானது மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.

சரியாக 50ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969மார்ச் 17-இல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி  மத்திய, - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.அக்குழுவின் அறிக்கை மத்திய,-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது.

மத்திய, - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கிய காரணம்.ஒரு வழக்கில் நீதிமன்ற ஆணை ஒன்று அனைத்து அரசியல் கட்சிகளையும் திருப்திப்படுத்துவதாக அமைவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. ஆனால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அப்படிப்பட்ட அரிய நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கொல்கத்தா பொலிஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை சி.பி.ஐ கைது செய்ய இயலாது எனக் கூறிய உச்சநீதிமன்றம் அதேவேளையில் சி.பி.ஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பைத்தான் மம்தாவும் கொண்டாடுகிறார். அவரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளும் கொண்டாடுகின்றன. மற்றொரு பக்கம் பாஜகவும் கொண்டாடுகிறது. பிரச்சினை என்னவோ சி.பி.ஐக்கும் மேற்குவங்க பொலிஸ்துறைக்கும் இடையேயானதுதான். ஆனால் வெற்றியை ருசிப்பவர்கள் மம்தாவும் பா.ஜ.கவினருமாக இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் போட்டியில் மேற்குவங்க பொலிஸும், சி.பி.ஐ அமைப்பும் ஆதாயம் பெறுவதற்கான கூலிப்படைகள் போன்றே நடத்தப்பட்டுள்ளன.

மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் செய்திருக்கிறது எனக் கூறுகிறார். பா.ஜ.க பிரமுகர்கள் பலரும் வெற்றி தங்களுடையது எனக் கூறுகின்றனர். தார்மீக வெற்றி என்பதை இந்த இடத்தில் விளக்குவது சிரமம் என்றாலும்கூட இருதரப்புமே அரசியல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது என்பதே உண்மை.

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்ப்பதற்காக சி.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது என்பது இப்போதைய சூழலில் யாருக்குமே ஆச்சரியம் தரும் செய்தியாக இருப்பதில்லை. ஆனால்  இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பெப்ரவரி 3-ம் திகதி ஞாயிறுக்கிழமையன்று சி.பி.ஐ அமைப்பின் புதிய இயக்குநர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கொல்கத்தா பொலிஸ் கமிஷனரின் வீட்டுக்கு சி.பி.ஐ குழு விரைகிறது. இந்த நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, அன்றைய தினம் அதேவேளையில்தான் இடதுசாரிகள் பெருங்கூட்டத்தைத் திரட்டி பிரம்மாண்டமாக பேரணி ஒன்றை நடத்தி முடித்திருந்தனர். பா.ஜ.கவை அகற்றுவோம், திரிணமூலை அகற்றுவோம் என்ற கோஷத்துடன் அவர்கள் வெற்றிப் பேரணி நடத்தி முடித்திருந்தனர். வெற்றியின் அடையாளமாக அவர்கள் பேரணி புகைப்படங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் சிபிஐ vs பொலிஸ் நாடகம் அரங்கேறி இடதுசாரிகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மம்தா பானர்ஜி_ - மோடி இடையேயான மோதல் தேசிய அளவில் தொலைக்காட்சி ஊடகங்களில் நிரந்தர முக்கியத்துவம் பெற்றிருக்கும் வேளையில் அன்றைய சி.பி.ஐ நடவடிக்கை செய்தி இடதுசாரி முன்னணி பேரணி தொடர்பான செய்திகளை இருண்டுபோகச் செய்து விட்டது.


Add new comment

Or log in with...