Home » இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினருடன் அமைச்சர் ஹரீன் சந்தித்துப் பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினருடன் அமைச்சர் ஹரீன் சந்தித்துப் பேச்சுவார்த்தை

by Rizwan Segu Mohideen
December 19, 2023 4:46 pm 0 comment

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜயசூரிய ஆகியோரை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று (18) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவின் நவீன மற்றும் மூலோபாய திட்டங்கள் அடிப்படையில் இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் முக்கிய இடத்திற்கு கொண்டுவர முடியும் என்று இந்த சந்திப்புக்குப் பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினேன். புதிய தேர்வுக் குழுவில் நவீன மற்றும் மூலோபாய திட்டங்கள் அடிப்படையில் இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் புரட்சியுடன் வெற்றிகரமான இடத்திற்கு தூக்கி நிறுத்தும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் நிலையத்தின் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு அங்கத்தவர்கள் இதில் பங்கேற்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க தலைமையிலான புதிய தேர்வுக் குழுவில் முன்னாள் வீரர்களான அஜந்த மெண்டிஸ், இந்திக்க டி சேரம், தரங்க பரணவிதான மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜனசூரிய இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் கட்டமைப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த திட்டமொன்றை வகுக்கவும், இளையோர் முதல் தேசிய மட்டம் வரை நேர்த்தியான கட்டமைப்பையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ளும் முகமாக சனத் ஜயசூரியவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்தே இந்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நேற்று முதல் முறை கூடியது. எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தலா மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணிகளை தேர்வு செய்வதே புதிய தேர்வுக் குழுவின் முதல் பொறுப்பாக அமைந்துள்ளது. இதற்கான அணித் தேர்வு குறித்து நேற்றுக் கூடிய தேர்வுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் மூன்று அணித் தலைவர்களை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் சூழலிலேயே தேர்வுக் குழுவினர் முதல் முறை கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT