Friday, March 29, 2024
Home » காசாவில் மருத்துவமனைகள், குடியிருப்புகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நூற்றுக்கு மேல் பலி

காசாவில் மருத்துவமனைகள், குடியிருப்புகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நூற்றுக்கு மேல் பலி

- போர் நிறுத்தத்திற்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
December 19, 2023 11:36 am 0 comment

காசாவில் பொரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கொல்லப்பட்டு மருத்துவமனைகள் சேதமாக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

மற்றோரு அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றின் மீது அமெரிக்க நேரப்படி நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது. பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை அடுத்து நீடித்த போர் நிறுத்தம் ஒன்றுக்கு பிரான்ஸும் அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (17) நடத்திய தாக்குதலில் 90 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூறுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஷெஹாப் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் கட்டடங்களைச் சேர்ந்த பலரும் காயமடைந்ததாக அல் அக்ஸா வானொலி குறிப்பிட்டுள்ளது.

“உயிரிழந்த பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நாம் நம்புகிறோம். இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதால் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்க முடியாதுள்ளது” என்று மருத்துவர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருப்பதோடு, தொற்கில் ரபா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலமான நில அதிர்வுடன் வெடிப்புச் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி மக்கள் இடிபாடுகளில் சிக்கிவர்களை மீட்பதற்காக ஓட்டம்பிடித்தனர் என்று தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வசிக்கும் மஹ்மூத் ஜர்பு ரோய்ட்டர்ஸுக்கு கூறினார்.

போராளிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்துவதாகவும் பொதுமக்கள் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு கூறுகிறது.

இலக்காகும் மருத்துவமனைகள்

எனினும் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்குள் இருக்கும் மகப்பேற்றுப் பிரிவு கட்டடத்தின் மீது இஸ்ரேலிய டாங்கி ஒன்று ஷெல் குண்டுகளை வீசியது. இதில் தினா அபூ மஹ்சன் என்ற 13 வயது சிறுமி கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் கான் யூனிஸின் அல் அமல் பகுதியின் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் வீச்சில் அபூ மஹ்சன் ஏற்கனவே தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களையும் தனது ஒரு காலையும் இழந்திருந்ததாக அல் கித்ரா குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் உள்ள மூன்றில் ஒன்றுக்கும் குறைவான மருத்துவமனைகளே தற்போது பகுதி அளவில் இயங்கி வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஞாயிறன்று மேற்கொண்ட நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் கடந்த பல நாட்களாக நடத்திய இராணுவ நடவடிக்கையில் கமால் அத்வான் மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கும் பெரும் அழிவுகளை கண்டு உலக சுகாதார அமைப்பு திகைப்படைந்துள்ளது என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையின் முற்றவெளிப் பகுதியில் டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் நிலைகொண்டிருப்பதோடு, மருத்துவமனைக்குள் தனது மகளை பார்க்க வந்த அபூ முஹமது அழுதபடி காணப்பட்டார்.

“அவனை எப்படிக் கண்டு பிடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை” என்று இடிபாடுகளை காண்பித்தபடி குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் அல் சிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு இரத்த வெள்ளமாக மாறியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்ததாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல நாட்களாக முற்றுகையில் வைத்து குண்டு வீசி வந்த வடக்கு காசாவில் உள்ள அவ்தா மருத்துவமனைக்குள் கடந்த ஞாயிறன்று ஊடருவிய இஸ்ரேலிய இராணுவம் மருத்துவப் பணியாளர்கள் பலரை கைது செய்ததாக அந்த அமைச்சு கூறியது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த போரில் காசா மீது இஸ்ரேல் இரண்டு மாதங்களுக்கு மேலாக இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 19,000ஐ தொட்டுள்ளது.

முடிவு வரை போரிடப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிறன்று கூறியதோடு, ஹமாஸை ஒழித்து, பணயக்கைதிகளை விடுவிப்பதாக உறுதி அளித்த அவர், காசா தொடர்ந்து பயங்கரவாதத்தின் மையமாக இருக்காது என்றார். இஸ்ரேலின் எரஸ் எல்லைக் கடவைக்கு அருகில் காசாவின் வடக்கு எல்லையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை சிறு வாகனங்களை பயன்படுத்தப் போதுமான அளவு பெரிதாக உள்ளது என்று அதனைப் பார்த்த ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் படப்பிடிப்பாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

இந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்கு பல மில்லியன் டொலர்கள் செலவாகி இருக்கும் என்றும், ரயில்கள், மின்சாரம், வடிகால் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பைக் கொண்ட இதனை உருவாக்க பல ஆண்டுகள் எடுத்திருக்கும் என்றும் அது கூறியது.

எனினும் காசாவில் பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறது. போர் நடவடிக்கைகளில் மேலும் நான்கு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்ட நிலையில் காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

போர் நிறுத்த அழைப்பு

போரை நிறுத்துவதற்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த போரினால் காசா மக்கள் தொகையில் சுமார் 90 வீதத்தை நெருங்கும் அளவுக்கும் 1.9 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசா மக்கள் தொடர்ச்சியாக தொடர்பாடல் துண்டிப்பை சந்தித்து வருகின்றனர். எனினும் அங்கு தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பியதாக காசாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சென்ற பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கத்தரின் கொலன்னா “அவசர மற்றும் நீடித்த” போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் உள்ள தமது வெளியுறவு அமைச்சு அதிகாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பிரான்ஸ் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

முன்னதாக 80 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இடம்பெற்ற ஏழு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகித்த கட்டார், “மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக” தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை புதுப்பித்து பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அதனை செயற்படுத்துவதில் முரண்பாடு நீடிப்பதாகவும் எகிப்தின் இரு பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவுத் தலைவர் மற்றும் கட்டார் பிரதமருக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது உறுதியான நிலையில் போர் நிறுத்தம் பற்றிய எதிர்பார்க்கு அதிகரித்துள்ளது.

விடுவிக்க முடியுமான பணயக்கைதிகளின் ஒருதலைப்பட்சமான பட்டியல் ஒன்றை ஹமாஸ் அமைப்பு தயாரித்திருப்பதாகவும், இஸ்ரேலிய படை போருக்கு முன்னரான எல்லைக்கு வாபஸ் பெற வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பதாகவும் நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இதில் ஹமாஸ் தயாரித்த பட்டியலுக்கு இஸ்ரேல் இணங்கி இருந்தபோதும் போர் நிறுத்தத்திற்கான நேரம் மற்றும் காலம் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் அந்தப் பட்டியலை பார்ப்பதற்கு அது கோரி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் படைகளை வாபஸ் பெறும் நிபந்தனையை இஸ்ரேல் மருத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எகிப்தின் அறிவிப்புக் குறித்து பதிலளித்த ஹமாஸ் அதிகாரி சமி சுஹ்ரி, “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு முற்சியையும் நாம் வரவேற்கிறோம். எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் அடித்தளமாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

காசா போர் மேற்குக் கரையிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேற்குக் கரை நகரான தூபாஸில் இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல்களில் இரு சிறுவர்கள் உட்பட நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு இலக்காகி இருப்பதாகவும் மூவரின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் மேற்குக் கரையில் 72 சிறுவர்கள் உட்பட 300க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதல்களில் இரு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்ததாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருவதோடு பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT