போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க விரிவான செயல் திட்டங்கள் தேவை | தினகரன்

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க விரிவான செயல் திட்டங்கள் தேவை

இலங்கையில் அண்மைக் காலமாக வகைதொகையின்றி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக மேல்மாகாணத்தில் அதிலும் கொழும்பு மாவட்டத்தில்தான் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றது. அதேநேரம் வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதையும் மறந்து விட முடியாது.  

இவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எடுத்து நோக்கினால் , 'கடந்த இரண்டொரு வருடங்களில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படாத ஒரு வாரம் கூட கிடையாது' என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இது நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ உகந்த நிலைமை அல்ல.  

அதேநேரம், போதைப்பொருள் கைப்பற்றப்படுவதோடு அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்நாட்டுப் பிரஜைகள் மாத்திரமல்லாமல் வெளிநாட்டுப் பிரஜைகளும் கூட கைதாகின்றனர். இப்போதைப்பொருட்களில் கொக்கைன், ஹெரோயின், மர்ஜுவானா, ஐஸ் உள்ளிட்ட பல வகைகள் காணப்படுகின்றன.  

பெருமளவு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்து சேர்வதன் விளைவாகவே அவை இவ்வாறு கைப்பற்றப்படுகின்றன. ஆனால் நாட்டில் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்களையும், அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கையையும் எடுத்து நோக்கினால் இந்நாடு எப்போதோ போதையற்ற நாடாக மாறி இருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. போதைப்பொருட்கள் கைப்பற்றல்களும், அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலான கைதுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அது நாட்டுக்குள் போதைப்பொருட்கள் வந்த வண்ணமே உள்ளன என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன.  

இதேநேரம் போதையற்ற நாட்டை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரந்த அடிப்படையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதன் நிமித்தம் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களும், பொலிஸாரும், பாதுகாப்பு தரப்பினரும் உச்ச அர்ப்பணிப்போடு செயற்படுகின்றனர். இப்பின்னணியில் போதைப்பொருட்களின் கைப்பற்றல்களும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களின் கைதுகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.  

போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நாட்டின் எல்லா மட்டத்தினரும் வரவேற்று பாராட்டுகின்றனர். அத்தோடு  போதைப்பொருட்கள் ஒழிப்புக்கான ஜனாதிபதியின் நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் மெச்சிப் பாராட்டியுள்ளன. அவற்றில் இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என்பன குறிப்பிடப்பட்ட நாடுகளாகும். அந்நாடுகள் இலங்கையில் போதைப்பொருட்கள் ஒழிப்புக்கு தேவையான ஒத்துழைப்புகளை நல்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன. குறிப்பாக இலங்கையின் 71வது தேசிய தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் முஹம்மத் சோலிஹ்,  சட்ட விரோத போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித் திட்டங்களையும், அதற்காக அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புக்களையும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புடன் செயற்படவும் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.  

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இது வரலாற்று முக்கியத்துவம் முன்னேற்றமாகும்.  போதைப்பொருட்களின் வருகை குறைந்ததாகத் தெரியவில்லை. போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுவதும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலான கைதுகளும் தொடர்கதை போன்று நீடித்துச் செல்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.  

நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு நாடாக இருந்த போதிலும் வகைதொகையின்றி நாட்டுக்குள் போதைப்பொருட்கள் வருகை தருவது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் கடற்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்க, விமான நிலையத்திலும், துறைமுகங்களிலும் சுங்க அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர்.  

இவ்வாறு வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் அவற்றையும் கடந்து நாட்டுக்குள் போதைப்பொருட்கள் வந்து சேருகின்றன. அவ்வாறு இப்போதைப்பொருட்கள் நாட்டுக்குள் இலகுவாக வந்துசேரும் வழிதான் எது? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

அதேநேரம் நாட்டில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களோடு சேர்த்து அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகளும் கைதாவதால் போதைப்பொருட்கள் கடத்தலுக்கான ஒரு மையமாக இலங்கை பயன்படுத்தப்படுகின்றதா? என்ற சந்தேகமும் பரவலாக எழுந்திருக்கின்றது.  

இவ்வாறான பின்புலத்தில் போதையற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இங்கு கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை நோக்கும் போது போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பது தெளிவாகின்றது.  

ஆகவே நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளித்து போதையற்ற நாட்டை உருவாக்க பொதுமக்களும் உச்சபட்ச ஒத்துழைப்பு நல்க வேண்டும். நாட்டு நலன்களுக்கோ மக்களின் ஆரோக்கியத்துக்கோ உகப்பற்ற போதைப்பொருட்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அது போதையற்ற நாட்டை உருவாக்க அடித்தளமாக அமையும்.


Add new comment

Or log in with...