அரேபிய தீபகற்பத்தில் பாப்பரசர் முதல்முறை ஆராதனை கூட்டம் | தினகரன்

அரேபிய தீபகற்பத்தில் பாப்பரசர் முதல்முறை ஆராதனை கூட்டம்

அரேபிய தீபகற்பத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பாப்பரசராக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் செய்திருக்கும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களுடன் முஸ்லிம்களும் பங்கேற்ற ஆராதனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

தலைநகர் அபூதாபியின் செயித் விளையாட்டு அரங்கு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் இடம்பெற்ற இந்த ஆராதனை கூட்டத்தில் 120,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். மதங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அவர் வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

இஸ்லாம் பிறந்த சவூதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இரண்டு மில்லியன் அளவான வெளிநாட்டவர்களில் பாதி அளவானவர்கள் கத்தோலிக்கர்களாவர்.

திறந்த ஜீப் வண்டி ஒன்றில் அரங்கிற்கு வந்த பாப்பரசர், “எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையுடன் அன்புக்குரியவர்களின் பாசம் இன்றி வீட்டில் இருந்து தொலைதூரத்தில் வாழ்வது நிச்சயமாக இலகுவானதக இருக்காது” என்று நிரம்பியிருந்த வழிபாட்டாளர்களிடம் குறிப்பிட்டார்.

முன்னதாக சுன்னி முஸ்லீம்களின் உயர் பீடமான அல் அஸ்ஹர் பள்ளிவாசல் தலைமை இமாமை பாப்பரசர் சந்தித்தார். இதன்போது உள்நாட்டு கிறிஸ்தவர்களை மத்திய கிழக்கு முஸ்லிம்கள் ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அபூதாபியில் திங்கட்கிழமை நடைபெற்ற மதங்களுக்கு இடையிலான நல்லிணக்க மாநாட்டிலேயே இருவரும் சந்தித்துக்கொண்டனர். இதில் உரை நிகழ்த்திய மத்திய பாப்பரசர் கிழக்கில் யுத்தங்களை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பாப்பரசர் செல்லுமிடங்களெல்லாம் அவருக்கு பலத்த வரவேற்பும், பாதுகாப்பும் அளிக்கப்பட்டன. கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள், யெமன், சிரியா, லிபியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.


Add new comment

Or log in with...