காடுகள் மனிதனால் ஆக்கிரமிப்பு; விலங்கினங்கள் எங்கே வாழ்வது? | தினகரன்

காடுகள் மனிதனால் ஆக்கிரமிப்பு; விலங்கினங்கள் எங்கே வாழ்வது?

உலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. உயிர்ப்பல்வகைமைச் சமநிலை இழக்கப்படுகின்ற போது ஆபத்துகள் உருவாகின்றன.

மனிதர்கள் இயற்கையின் சமநிலையைப் பேணுவது அவசியம். இயற்கைச் சமநிலையை துவம்சம் செய்கின்றபோதுஎதிர்விளைவுகள் தவிர்க்கமுடியாது போகும்.

உயிரினங்கள் பல்வகைமைச் சமன்பாட்டின் அடிப்படையிலே வாழ்கின்றன. அப்படி ஒரு சமன்பாட்டிற்குள் உட்பட்டே யானைகளும் படைக்கப்பட்டுள்ளன.காடுகளின் மூதாதைகள் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்.

யானைகள் நிலத்தில் வாழும் உயிரினங்களில் உருவத்தில் பெரியவை. ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் பிற விலங்குகளில் இருந்து உருவத்தில் மட்டுமல்லாது குணங்கள், வாழ்வியல்முறைகள் என எல்லாவற்றிலும் முற்றாக மாறுபட்டன.

யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆபிரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை,வடக்கே பூட்டான் வரை, கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆபிரிக்க கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆபிரிக்க யானைகள். ஆபிரிக்க யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.

யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த அழகிய, அறிவார்ந்த யானைகளை அழிவிலிருந்து பாதுகாப்பதும், புவி மேற்பரப்பில் உயிர்ப்பல்வகைமையினை பேணுவதும் மனிதனின் கடமை.

யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

இவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன? யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத் தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது.

யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிப்பமாகவிருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும். உயிரினங்களில் பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது யானை . 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. எப்போதாவது ஒரு முறையே, மிக அரிதாக இரண்டு குட்டிகளை பெற்றெடுக்கின்றது. யானைகள் சராசரியாக 60 வயது வரை வாழ்பவை ஆனால் பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை பெறுபவை.

யானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுப்புறத்தை அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அருகில் இருந்தாலோ அல்லது இருக்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில், கூட்டமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி விடும்.யானைகள் பல வகையான ஒலியை எழுப்பக் கூடியன.அதன் பிளிறல் ஒலியை 9 கி.மீ க்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கேட்க முடியும். தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளை கேட்கக் கூடியது.தனது தும்பிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியவை.

வெட்டுப்பற்கள் பெரிதாக வளர்ந்து தந்தமாகிறது. பிற விலங்குகளுடன் சண்டையிட தந்தத்தை பயன்படுத்துகின்றன. சண்டையின் போது தந்தம் உடைந்தால் மீண்டும் வளர்ந்து விடும். ஆனால், வலுவான மற்றொரு யானையுடன் மோதும் போது தந்தம் முழுவதுமாக முறிந்துவிட்டால் அதன் பிறகு காலம் முழுதும் தந்தம் இல்லாமல் தான் வாழ வேண்டும்.

ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

வயது வந்த ஆண் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே சுற்றித் திரியும், அல்லது, பெண் யானைகளே அதை கூட்டத்திலிருந்து பிரித்து அனுப்பி விடும். குடும்பத்தில் முழுதும் பெண் யானைகளின் ஆதிக்கம் தான். வயது வந்த ஒரு ஆண் யானை கூட கூட்டத்தில் இருக்காது.

யானைகள் இன்று அரிதாகின்ற சூழல் ஏற்படத் தொடங்கியுள்ளது. சூழலில் உயிர்ப்பல்வகைமை இழப்புக்கு மிகப்பிரதான காரணி மனிதன் ஆவான்.

உலகில் காடுகள் உருவாகுவதுக்கு யானைகளே பிரதான காரணி. மனிதனுக்கு தேவையான மழையை பொழிவதுக்கு காடுகள் அவசியம். அந்தக்காடுகள் உருவாக்கத்துக்கு யானைகள் காரணமாகின்றது. எனவே இந்த யானைகள் பாதுகாக்கப்படுவது மிக அவசியம் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது.

ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு உண்ணும். அதனுடைய உடல் எடையில் இருந்து 5 சதவிகித உணவை உண்ணும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 – 150 லீற்றர் தண்ணீர் குடிக்கும்.

இந்த 250 கிலோ உணவில் 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், தடிகள் இருக்கும். 10 கிலோ வித்துகளும் தடிகளும் திரும்ப மண்ணில் விதைக்கப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்கும். எண்ணிக்கையில் சொல்வதென்றால் சராசரியாக ஒரு யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்கும்'.

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 இலட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. யானைகள் காடுகளை உருவாக்கின்றன. மனிதன் அவற்றை அழிக்கிறான்.

மனிதன் இயற்கையை துவம்சம் செய்வதற்கு துணிந்துவிட்டான். அதனால் காடுகளுக்குள் இருந்த அநேக உயிரினங்கள் ஊர்களுக்குள் வரத் தொடங்கி விட்டன.

இலங்கையில் இன்று யானைகள் அழிந்து செல்லும் நிலை மிக வேகமான ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டினை விட 2018ம் ஆண்டு 70யானைகள் கூடுதலாக இறந்துள்ளன. யானைகள் பெருமளவில் இங்கு அழிவதும் கவலையளிக்கிறது.

2018ஆம் ஆண்டின் முதல் 10 மாதம் வரையிலான காலப்பகுதியில் 311 யானைகள் இறந்துள்ளன என்று வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, யானைகள் தாக்கியதில் 95 மனித உயிர்கள் இந்தக் காலப்பகுதியில் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில், 1,445 யானைகள் இலங்கையில் இறந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யானைகள் வாழும் இடங்களை மனிதர்கள் ஆக்கிரமிக்க தொடங்கியபோது யானைகள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுகிறது என்கிறார் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி என்.டி.பீ.சஞ்ஜீவ.

யானைகள் உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணி கழிவகற்றும் இடங்களில் உள்ள கழிவுகளை உணவாக உட்கொள்வதாகும். இதனால் அதன் இ​ைரப்பையில் கிருமித் தொற்று ஏற்பட்டு அதிகளவான இறப்புகள் ஏற்படுவதாக கால்நடை உற்பத்தித் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் தெரிவித்தார். இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரியிடத்தில் வினவியபோது கழிவுகளை தரம்பிரித்து பெறவேண்டியது பிரதேச சபைகளின் கடமை. கழிவு சேகரிக்கும் இடங்களுக்கு உயர் அழுத்த மின்கம்பி வேலிகளை இடுவதன் ஊடாக குப்பை மேடுகளுக்கு யானை உணவு உட்கொள்ள வருவதனை தடுக்க முடியும் என்றார் அவர். அதனை அம்பாறை நகர சபை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் யானைகளை பராமரிக்கும் வனப்பகுதியாக புத்தங்கல பிரதேசம் இருப்பதாகவும், அவ்வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான நீரை அருந்துவதுக்குரிய இடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார் அவ்வதிகாரி.

றிசாத் ஏ காதர்
ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...