சவால்களை வெற்றி கொள்ள ஒற்றுமையே சிறந்த அடித்தளம் | தினகரன்


சவால்களை வெற்றி கொள்ள ஒற்றுமையே சிறந்த அடித்தளம்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கையின் 71வது தேசிய தினம் நேற்றுமுன்தினம் நாடெங்கிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இத்தினத்தின் பிரதான வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.

இலங்கையின் தேசிய அரசியலில் மிக முக்கிய காலகட்டத்தில்தான் ஜனாதிபதி இந்த உரையை ஆற்றி இருக்கின்றார். இந்த உரைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த உரையின் ஊடாக ஜனாதிபதி, 'இந்தத் தேசம் முகம்கொடுத்துள்ள சவால்களை வென்றெடுக்கவென அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.

இந்நாடு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று 71 வருடங்களாகி விட்டன. இருந்தும் இற்றைவரையும் இந்நாடு 'வளர்முக நாடு' என்ற அடையாளத்துடன் தான் காணப்படுகின்றது. இந்நாடு சுதந்திரம் பெறும் போது இந்நாட்டை விடவும் பொருளாதார வளர்ச்சியில் கீழ்மட்டத்திலிருந்த உலகின் பல நாடுகள் இலங்கையைப் பின்தள்ளி பொருளாதார ரீதியாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால் இலங்கை தொடர்ந்தும் வளர்முக நாடாகவே இருக்கின்றது. இதற்கு இந்நாடு சுதந்திரம் பெற்ற பின் முகம்கொடுத்துள்ள பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கும் அவற்றை நியாயபூர்வமாகத் தீர்த்து வைப்பதற்கும் ஒழுங்கு முறையான வேலைத் திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக பிரச்சினைகளும், சவால்களும் மேலும் மேலும் அதிகரித்துச் சென்றன.

அந்த வகையில் இந்நாடு சுதந்திரத்திற்குப் பின்னர் முகம் கொடுத்துள்ள பிரதான சவால் தேசியப் பிரச்சினையாகும். இப்பிரச்சினை உரிய முறையில் அணுகப்படாததன் விளைவாக இந்நாட்டு பிரஜைகளே பிரிந்து நின்று ஆயுதம் தாங்கி யுத்தத்தில் ஈடுபடும் துர்ப்பாக்கிய நிலைமை தோற்றம் பெற்றது.

அந்த யுத்தம் சுமார் முப்பது வருட காலம் நீடித்தது. இதன் காரணத்தினால் பாரிய இழப்புக்களுக்கும் பின்னடைவுகளுக்கும் நாடு உள்ளானது.

யுத்தத்தின் விளைவாக இந்நாடு எதிர்கொண்டுள்ள சர்வதேச அழுத்தங்களும் தலையீடுகளும், இந்நாடு 1948 இல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் முகம்கொடுத்திருந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளை விடவும் வேறுபட்ட வடிவங்களில் இலங்கையை நோக்கி வந்துள்ளன. ஆனால் என்னதான் சவால்கள், அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாலும் 'ஒரே தேசத்தில் வாழும் மக்கள் நாம்' என்பதை மறக்காது செயற்பட வேண்டியுள்ளது.

இதற்கான பொறுப்பும் கடமையும் இந்நாட்டு பிரஜைகளிடம் உள்ளது.

மனிதன் என்றால் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோற்றம் பெறுவது இயல்பானது.ஆனால் அவற்றுக்கு உரிய நேர காலத்தில் சிறந்த கலந்துரையாடல்களின் ஊடாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எல்லா மக்களும் இன மன பேதங்களுக்கு அப்பால் பிளவுபடாத ஒரே நாட்டினராக சமமாக வாழக் கூடிய பின்புலத்தை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அதேநேரம் இந்நாடு முகம்கொடுத்துள்ள மற்றொரு சவால்தான் போதைப்பொருள் விடயமாகும். 'மடை திறந்த வெள்ளம் போல் நாட்டுக்குள் போதைப்பொருட்கள் வந்து குவிவதை பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் கைப்பற்றி வருகின்றனர்.

இவ்வாறு இலங்கைக்குள் போதைப் பொருட்கள் வந்து குவிவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலவித சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது. 'இப்போதைப் பொருட்களின் ஊடாக பலவீனமான சமூகமொன்றை இலங்கையில் உருவாக்குவதற்கான சதி சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றதா?' என்ற சந்தேகம் அவற்றில் பிரதானமானது. ஏனெனில் அந்தளவுக்கு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன.

இது தொடர்பில் எல்லா மட்டங்களிலும் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றன. என்றாலும் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டியதும் ஒரு முக்கிய சவாலாகும். அத்தோடு ஊழலும் ஒரு சவாலாகவே வளர்ச்சி பெற்று இருக்கின்றது.

இவ்விடயத்தில் இந்த நாடு இன்னும் முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் வெளிப்படைத் தன்மையுடனான சேவையை நாட்டு மக்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நாடு முகம் கொடுத்துள்ள சவால்களை எடுத்து நோக்கினால், அனைத்தும் வெற்றி கொள்ளக் கூடியவை சவால்கள்தான். அதற்கு எல்லா மக்களும் இன மத பேதங்களுக்கப்பால் ஒரே தேசத்தவர் என்ற பார்வையோடு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அப்போது இந்நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொண்டு வளமான உறுதிமிக்க நாட்டை உருவாக்க முடியும். அதுவே இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...