காஷ்மீர் பிரச்சினைக்கு துரிதமான தீர்வு வேண்டும் | தினகரன்

காஷ்மீர் பிரச்சினைக்கு துரிதமான தீர்வு வேண்டும்

காஷ்மீர் தினம் இன்று

சுதந்திரத்திற்கான போராட்டம் காஷ்மீர் மக்களின் மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா காஷ்மீரை இழந்து விட்டதா? என்ற கேள்விக்குறியுடன் இத்தருணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர் திருப்புமுனையை அடைந்திருக்கின்றது.

'இந்தியா, காஷ்மீரை இழந்து கொண்டிருக்கின்றதா?' என்ற தலைப்பின் கீழ் பி.பி.சியின் பதிப்பில் பிரசுரமான கட்டுரையானது காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தின் உச்சத்தினை விபரிக்கின்றது.காஷ்மீரில் 'கற்களுடன் மிரட்டுகின்ற காஷ்மீர் இளம் பெண்கள் இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையில் புதிய அச்சுறுத்தல்' என தி வோஷிங்டன் போஸ்ட் பதிப்பிலும் பிரசுரமாகியிருந்தது.  

காஷ்மீரில் இடம்பெறும் வன்முறைகளுக்கெதிராக ஓர் புதுவிதமான எதிர்ப்புப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது என தி அட்லாந்திக் சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்திய புலனாய்வு அமைப்பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், தனிமை மற்றும் இளைஞர்களின் கோபத்தினால் இளம் காஷ்மீரிகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயுதமில்லாத போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகவும் உணர்ந்துள்ளார்.  

சந்தோஸ் பாத்தியா என்ற இந்திய ஊடகவியலாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 'எழுகின்ற காஷ்மீர் ' என்ற தலைப்பில் எழுதிய திறந்த மடலில் 'காஷ்மீர் என்ற பிரதேசம் எங்களுடன் காணப்பட்டாலும், அங்குள்ள மக்கள் எங்களுடன் இல்லை. ஒவ்வொரு மரத்திலும், தொலைபேசி கோபுரங்களிலும் பாகிஸ்தானின் தேசியக்கொடி அசைந்து கொண்டிருக்கின்றது' என குறிப்பிட்டுள்ளார்.  

காஷ்மீர் மீதான புதுடில்லியின் கொள்கைகள் 'ஓர் குழப்பம் நிறைந்த தொகுதி' என வர்ணிக்கின்ற பா.ஜ.கவின் முன்னாள் சிரேஷ்ட தலைவர் யஸ்வந்த் சின்ஹா, இந்தியா உணர்வுபூர்வமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களை இழந்து விட்டது என சுட்டிக்காட்டியிருந்தார். 'உணர்வுபூர்வமாக நாம் காஷ்மீர் மக்களை இழந்து விட்டோம். எம்மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அறிய நீங்கள் காஷ்மீர் செல்ல வேண்டும்' என்கிறார். 

1949 ஆம் ஆண்டின் பொதுவாக்கெடுப்பின் மூலம் காஷ்மீருக்கு சுயநிர்ணய உரிமை வழங்குதல் தொடர்பான தீர்மானத்தை ஐ.நாவிற்கு நினைவூட்டும் முகமாக காஷ்மீர் மக்களும், பாகிஸ்தானியர்களும் ஒவ்வொரு வருடமும் பெப்வரி 5 ஆம் திகதியை இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கான ஐ.நா.வின் காஷ்மீர் தீர்மானத்தின் தினமாக அனுஷடிக்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

காஷ்மீர் இயக்கத்தை ஒடுக்குவதில் தோல்வியுற்றுள்ள இந்திய அரசாங்கம், 2018 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தியுள்ளது. சுய நிர்ணய உரிமையைக் கோரும் காஷ்மீர் மக்கள் மீது அட்டூழியங்களை தீவிரப்படுத்துவதே அதன் உண்மையான நோக்கமாக காணப்படுகின்றது.  

2016 ஓகஸ்ட் 27 'தி வயர்' என்ற சஞ்சிகையில் பிரசுரமான அறிக்கையில் இந்திய புலனாய்வு அமைப்பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், காஷ்மீர் பிரச்சினையில் முக்கியமான அங்கமாகத் திகழும் பாகிஸ்தானின் வகிபாகத்துடன் ஹுரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான தேவை இந்திய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என்று கூறியிருந்தார். காஷ்மீர் மக்களது எழுச்சியின் பின்புலத்தில் நூறுவீதம் சுதேசிகளே உள்ளனர் எனவும் கூறியிருந்தார்.  

அதேநேரம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் ஏர்டொகன் 2016 நவம்பர் 17ஆம் திகதி முன்னாள் பாகிஸ்தானிய பிரதமருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் மற்றும் காஷ்மீரில் இடம்பெறும் வன்முறைகள் புறக்கணிக்கப்பட முடியாது எனவும் காஷ்மீர் பிரச்சினைக்கு துரிதமான ஓர் தீர்வு வேண்டும் என அவர் வலியுறுத்தியதோடு, துருக்கி எப்பொழுதும் காஷ்மீர் மக்களுக்கான ஆதரவினை வழங்கும் என துருக்கிய ஜனாதிபதி கூறியிருந்தார்.  

அண்மையில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்த இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் செயலாளர் நாயகம் அயத் அமீன் மதானி காஷ்மீரில் இடம்பெறும் சட்டவிரோத கொலைகள் குறித்து மிகுந்த கவலை வெளியிட்டிருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பானது பாகிஸ்தானிற்கு ஆதரவளிக்கும் என கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.  

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் 2018 ஜுன் 14 இல் வெளியிடப்பட்ட அறிக்கை '2016 ஜுலை மாதத்திலிருந்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்களை காஷ்மீரின் மனித உரிமை நிலைமைகளை ஆய்வு செய்வதற்கான தடைகளற்ற அனுமதியினை கோரியிருந்தது. இருப்பினும், அக்கோரிக்கை இந்தியாவினால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அதற்கான அனுமதியை வழங்கியது. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஐ.நாவின் குழு செல்வதற்கு நிபந்தனைகளற்ற அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் தொலை கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தி மனித உரிமை நிலைமைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டது. உண்மை யாதெனில், இந்தியாவிற்கு இரு தெரிவுகள் உள்ளன. முதலாவது இந்தியாவில் காணப்படும் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் மற்றும் அவர்களை ஒடுக்குவதற்கான இராணுவ பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கொள்ளல். இரண்டாவது யதார்த்த அணுகுமுறையை பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் யஸ்வந்த் சிங் தனது நூலிலே சுட்டிக்காட்டியுள்ளார். 

(சஜ்ஜாத் சஹிகாத்)


Add new comment

Or log in with...