இனஉறவு அடையாளமாக விளங்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் | தினகரன்

இனஉறவு அடையாளமாக விளங்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்

வருடாந்த கொடியேற்றம் இன்று

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர்ஆண்டகை தர்ஹா ஷரீபின் 197வது வருடாந்த கொடியேற்ற விழா இன்று ஆரம்பமாகின்றது.கல்முனை மாநகரத்தின் கிழக்கே உள்ள வங்கக்கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதனால் இதனை எல்லோரும் 'கடற்கரைப் பள்ளிவாசல்' என்று அழைக்கின்றனர்.

இப்பள்ளிவாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்புச் சேர்ப்பது வருடாந்த கொடியேற்ற விழாவாகும்.

வருடாவருடம் ஜமாதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழா சங்கைமிகு சாகுல்ஹமீது ஒலியுல்லாவின் வருடாந்ந நினைவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

 நபி பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்களின் 23வது தலை முறையில் செய்யது ஹசன் குத்தூஸ் செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபீயுல் அவ்வல் மாதம் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மனிக்கபூர் எனும் ஊரில் பிறந்தவர்தான் சங்கைமிகு சாகுல்ஹமீது ஒலியுல்லா அவர்கள்.

இஸ்லாத்தின் ஞானவிளக்கை உலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று இருளகற்றி ஒளி பெறச் செய்த பெறுமை பல மகான்களையே சாரும்.

தன்நலம் மறந்து மக்களுக்கு அறிவூட்டி தொண்டு செய்வதையே வாழ்கையின் குறிக்கோளகக் கொண்டு ஊண் அற்று உற்றார் உறவினரை துறந்துஇறை தொண்டாற்றிய ஒரு பெரும் மகானே சங்கை மிகு சாகுல்ஹமீது ஒலியுல்லா அவர்கள்.

வேண்டிரை வீசும் வீயன் நாகூர் அண்ணல் சாகுல்ஹமீது ஆண்டகை அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. மனிக்கபூரில் பிறந்து, அரபு மொழி வல்லுனராய்மிளிர்ந்து,தந்தை தாயைத் துறந்து ஆண்டவனின் பாதையில் இறங்கி பிறந்தகம் விட்டு வெளியேறிச் சென்று பெரும் அற்புதங்கள் செய்தவர் அவர். 

தனது 8வது வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தார். அதன் பின்பு தமது இளம் வயதில் இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகில் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார்.இவர்களின் ஆன்மீக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது நாட்டிற்கும் வந்து தென்பகுதி கரையை அடைந்தார்.தென்கிழக்கு நோக்கி அவர் வந்த சமயத்தில் கல்முனைக்குடியில் மர்ஹூம் முகம்மது தம்பிலெப்பை என்பவர் வசித்து வந்தார். இவர் மார்க்கத்திலும் கல்வி ஞானத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.உயர் பண்பு ஒழுக்கச் சீடராக வாழ்ந்து வந்த இவர்,இக்காலப்பகுதியில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

கல்முனைக்குடி கடற்கரையோரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக்கடமையை செய்துவரத் தவறவில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின்னர் அயர்ந்து தூங்கி விட்ட முகம்மது தம்பிலெப்பை அவர்களின் கனவில் ஒரு வாட்டசாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிறத்தலைப்பாகையுடன் தோன்றி "உமது குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கிறேன். நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்கும் இடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மை பிடித்துள்ள நோயும் அகன்று விடும். என் பெயர் சாகுல்ஹமீது" என்று கூறி மறைந்து விட்டார். கண் விழித்துப் பார்த்த போது பொழுது புலர்ந்து இருந்தது. அவரின் உடலில் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனேயே இறைவனைப் புகழ்ந்தவராய் குறிப்பிட்ட மண்குவியலைத் தேடி கண்ணுற்றார். அருகிலிருந்த மரங்களை தறித்து தடிகளைக் கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைத்தார்.

இச்சம்பவங்களை பொதுமக்களிடம் அவர் கூறினார். பொதுமக்களும் அவ்விடத்து வந்த அடையாளப் பொருட்களை கண்ணுற்றதோடு அவரின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலைச் செப்பனிட்டு தர்ஹாவாக மாற்றினர். சாகுல்ஹமீது ஒலியுல்லா பெயரில் மௌலத்து ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவரின் பெயரில் அன்னதானமும் வழங்கினர். தொடர்ந்து மக்கள் இத்தர்ஹாவில் கூடத் தொடங்கினர்.

இதனால் சங்கை மிகு சாகுல்ஹமீது நாயகம் அவர்கள் வபாத்தான ஜமாதுல் ஆகிர் மாதத்தின் தலைப் பிறையுடன் இத் தர்ஹாவில் தொடர்ந்தும் 12 நாட்கள் அவரின் பெயரில் மௌலீது ஓதப்பட்டு 12ம் நாள் மாபெரும் கந்தூரி அனனதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலினதும் கொடியேற்ற விழாவினதும் வரலாறு ஆகும்.

இக் கொடியேற்ற காலப்பகுதியில் தர்ஹாவில் தொடர்ந்து 12 நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மௌலீது மஜ்லிஸ், பக்கீர் ஜமாத்தினரின் றாதிபு என்பன சிறப்பாக நடைபெறும். இவ்வாறே 05ம் திகதி கொடியேற்றப்பட்டு அடுத்த மாதம் 16ம் திகதி அன்று மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ்விழா இனிதே நிறைவுறும்.

ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் 3 அடுக்குகளைக் கொண்ட சிறிய மினராவும் கம்பீரமாக காட்சி தருகின்றன. இத்துடன் முற்றாக புணரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத் தர்ஹாவில் மேலும் மூன்று சிறிய மினாராக்களும் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன. இவற்றிலேதான் வருடாவருடம் கொடியேற்றப்படுகின்றது.

இவ்விழாவானது சமூகங்களின் உறவுப்பாலமாக திகழ்கிறது.

கல்முனைக்குடி கடற்கரையிலிருந்து 40 மீற்றர் தூரத்தில் இருக்கும் அழகிய தர்ஹாவும் பெரிய, சிறிய மினராக்களும் 14 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியினால் தாக்கப்பட்ட போதிலும் இத்தர்ஹாவுக்கும் மினராக்களுக்கும் எவ்வித சிறு சேதங்களும் ஏற்படவில்லை.

(எம்.ஐ.சம்சுதீன் - கல்முனை விஷேட நிருபர்)   


Add new comment

Or log in with...