இன்னுமே முடிவு கட்டப்பட முடியாத பகிடிவதை இம்சை! | தினகரன்


இன்னுமே முடிவு கட்டப்பட முடியாத பகிடிவதை இம்சை!

பல்கலைக்கழகங்களில் இருந்து ‘ராகிங்’ எனப்படும் பகிடிவதை கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதென்பது ஒருபோதுமே சாத்தியமாகப் போவதில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.  

எமது நாட்டில் பகிடிவதையென்பது மோசமான குற்றங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றது. இக்குற்றத்தில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒருபுறமிருக்க, பொலிஸாரும் தீவிர நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர்.  

இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் ‘மாணவர்கள்’ என்பதற்காக பொலிஸாரோ அல்லது நீதிமன்றமோ விசேட மன்னிப்பு, சலுகை வழங்குவது கிடையாது. பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்படுவதும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்படுவதும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.  

கடந்த இரண்டொரு ஆண்டுகளில் பகிடிவதை சம்பவங்கள் ஓரளவு குறைந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் பகிடிவதையை இன்னமும் முற்றாக ஒழிக்க முடியாதிருக்கின்றது. ‘ராகிங்’ சேஷ்டை இன்னும் தொடர்ந்தபடியே செல்கின்றது.  

வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் சிலர் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் மிக மோசமான முறையில் பகிடிவதை இடம்பெறுகின்ற இடமாக வயம்ப பல்கலைக்கழகமே உள்ளதென்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.   ‘ராகிங்’ குற்றங்களைப் பொறுத்தவரை விசித்திரமான இன்னொரு விடயத்தையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியம். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவு வெளியானதும், அப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறும் மாணவர்கள் எட்டு மாதங்களுக்கும் மேற்பட்ட காலம் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்க முடிகின்றது.  

ஆனால் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகி ஓரிரண்டு தினங்கள் கடந்ததுமே ‘ராகிங்’ சேஷ்டைகள் ஆங்காங்கே பரவலாக தலைதூக்கி விடுகின்றன. பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுகின்ற மாணவர்களின் பெயர்,விபரங்களை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் எவ்வாறோ அறிந்து விடுகின்றனர்  

அதன் பின்னர் சிரேஷ்ட மாணவர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து, அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் பிரதேசத்துக்குச் சென்று வாரக் கணக்கில் எங்காவது தங்கியிருந்து பகிடிவதைகளை ஆரம்பித்து விடுகின்றனர். பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களை எங்காவது தனியிடத்துக்கு வரவழைத்து ‘ஆரம்ப ராகிங்’ என்பதன் பேரில் சிறுசிறு சேஷ்டைகள் அங்கேயே தொடங்கி விடுகின்றன.  

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. சித்தியடைந்து அனுமதிக்குத் தகுதி பெற்றிருந்த மாணவர்களிடம் ‘சேஷ்டை’ புரிவதற்காக வயம்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மட்டக்களப்புக்கே சென்று சில தினங்கள் முகாமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமன்றி பேராதனை, தென்கிழக்கு, களனி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும் பகிடிவதைக் குற்றங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக செய்திகள் வந்தபடியே உள்ளன. 

பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களை பல வருட காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுக்காற்று நடவடிக்கை அதிகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உள்ளது. அதேசமயம் பகிடிவதையை மோசமான குற்றமாகக் கருதி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குகின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு.  

இத்தனை ஆபத்தான பின்விளைவுகள் உண்டென்று தெரிந்து கொண்ட போதிலும், ஆபத்தைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சிரேஷ்ட மாணவர்கள் ‘ராகிங்’ சேஷ்டையில் ஈடுபடுகின்றனரென்பதுதான் இங்கு ஆச்சரியமான விடயம்! 

அதாவது புதிய மாணவர்களை உடல், உள ரீதியில் இம்சைப்படுத்துவது சிரேஷ்ட மாணவர்கள் பலருக்கு மிகவும் பிடித்தமான விடயமாக உள்ளதென்பதே இதன் அர்த்தம் எனலாம்.  

முன்கோபம் எதுவுமின்றி மற்றொரு மனிதரையோ அல்லது பிராணியையோ கொடுமைக்குள்ளாக்குவதென்பது உளரீதியான பாதிப்பொன்றின் வெளிப்பாடு என்பதே உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது. அதாவது மற்றைய உயிரினங்களின் அவஸ்தையைப் பார்த்து இன்பம் பெறுகின்ற ஒருவகை மனோவியாகூலம் இது! உளப்பாதிப்பொன்று வாழ்வின் எவ்வேளையிலும் சந்தர்ப்பம் பார்த்து ஒருவரிடம் வெளிப்படக் கூடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.  

‘ராகிங்’ சேஷ்டையில் நிலவுகின்ற கொடுமைகள் அத்தனையையும் இங்கே விபரித்து விட முடியாது. பகிடிவதையின் போது கையாளப்படுகின்ற முறைகளினால் புதிய மாணவர்கள் ஒருசிலர் உயிரிழந்து போன பரிதாபமான சம்பவங்களும் எமது நாட்டில் அரங்கேறியிருப்பதை மறந்து விட முடியாது. பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற வரப்பிரகாஷ் என்ற மாணவன் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து போன கொடுமை முன்னொரு காலத்தில் எமது நாட்டையே உலுக்கியிருந்தது.  

அச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகங்களில் ‘ராகிங்’ கொடுமையை இல்லாதொழிக்க கடுமையான சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வரப்பிரகாஷ் என்ற மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவுக்குப் பின்னர் இரு தசாப்த காலம் கடந்து விட்ட போதிலும் பகிடிவதை கலாசாரத்தை பல்கலைக்கழகங்களில் இருந்து இன்னுமே ஒழிக்க முடியாதிருப்பது உண்மையிலேயே விசித்திரம்! 

பல்கலைக்கழகங்களின் நிருவாகத்தில் காணப்படுகின்ற பலவீனத்தையே இங்கு முதலில் சுட்டிக்காட்ட வேணடியுள்ளது. அதேசமயம் பகிடிவதைக் குற்றங்களின் பேரில் மாணவர்களை இடைநிறுத்துகின்ற போது, சிரேஷ்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமோ அல்லது பகிஷ்கரிப்போ நடத்துகின்ற நகைச்சுவையான காரியங்களையும் காண முடிகின்றது. பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளில் இதன் போது அரசியல் குறுக்கீடுகள் இடம்பெறுவதும் முற்றாகத் தவிர்க்கப்படுவது அவசியம்.  

பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுகின்ற மாணவர்களை பகிடிவதை கடுமையாகத் துன்புறுத்துகிறது. உடல்உள ரீதியில் அம்மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இக்கலாசாரத்துக்கு முற்றாகவே முடிவு கட்டப்படுவது கட்டாயம்!   


Add new comment

Or log in with...