முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பல் புஜாரா சதத்தால் இந்தியா 250/9 | தினகரன்

முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பல் புஜாரா சதத்தால் இந்தியா 250/9

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்கள் எடுத்துள்ளது

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணி தலைவர் விராட் கோலி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவிற்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. விகாரியை பின்னுக்கு தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது.

லோகேஷ் ராகுலும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அவுஸ்திரேலிய வேகப்பந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 19 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 3 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார். கம்மின்ஸ் முதல் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை ‘கலி’ பகுதியில் நின்ற உஸ்மான் குவாஜா ‘டைவ்’ அடித்து இடது கையில் பிடித்தார்.

அடுத்து வந்த ரகானே 13 ஓட்டங்களில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழக்க ஸ்கோர் 41 ஆக இருந்தபோது இந்தியாவின் 4-வது விக்கெட் சரிந்தது. அடுத்து ரோஹித் சர்மா களம் வந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 24.4-வது ஓவரில் இந்திய அணி 50-வது ஓட்டங்களை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை நதன் லியோன் பிரித்தார். ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா, புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் ரிசப் பந்த், நாதன் லயன் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ஓட்டங்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை 127 ஓட்டங்களுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் புஜாராவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் 76 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா 4 ஓட்டங்களில் ஸ்டார்க் பந்தில் வெளியேற முகமது சமி களம் இறங்கினார்.

பொறுப்புடன் விளையாடிய புஜாரா தனது 16-வது சதத்தை பதிவு செய்தார். அடுத்து அதிரடியாக விளையாடிய இவர் ஸ்டார்க் ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவர் 246 பந்துகளில் 123 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கம்மின்ஸ் இவரை ரன் அவுட் முறையில் வெளியேற்றினார்.

புஜாரா ஆட்டமிழந்ததும் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இந்தியா 87.5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷமி 6 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா பந்து வீச்சில் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று.

(தொடரும்)


Add new comment

Or log in with...