சீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை | தினகரன்

சீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை

 

இது வரை 13 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்று (25) அதிகாலை புத்தளம், தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான்கதவுகளும் திறக்கப்பட்டது. அதன் 06 வான் கதவுகள் 3 வீதமும், 08 வான்கதவுகள் ஒரு அடி வீதமும், மேலும் 06 வான்கதவுகள் அரை அடி வீதமும் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீஓயவை அண்டி தாழ் நிலங்களில் வசிப்போர் மிக அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தென்மேல் பருவ மழை மேலும் தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் மேல், தென், சப்ரகமுவா, மத்திய, வட மேல் மாகாணங்களில் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவா, மேல், மத்திய, வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 - 150 மில்லி மீற்றர் (10 - 15 செ.மீ.) வரையான பாரிய மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட மாகாணத்தின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் (5 செ.மீ.) வரையான ஓரளவு பாரிய மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக உயர்வடையலாம்.

மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்படையும் பொறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...