சுதந்திரத்தின் பலாபலன்களை அனைவரும் அனுபவிக்கட்டும்! | தினகரன்


சுதந்திரத்தின் பலாபலன்களை அனைவரும் அனுபவிக்கட்டும்!

எமது தாய்நாட்டின் எழுபத்தோராவது தேசிய சுதந்திர தினம் நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகின்றது. தேசிய சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு, காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்ற அதேவேளை, நாடெங்கும் மாவட்ட ரீதியிலும், பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக வைபவங்கள் நடைபெறுகின்றன. 

வருடம் தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாம், அந்நிய ஆட்சியாளரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி எமது தாய்நாட்டுக்குக் கிடைத்த விடுதலையின் பெறுமானத்தையும், சுமார் 450 வருட காலம் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சியில் கட்டுண்டு கிடந்த அடிமைத்தனத்தையும் இவ்வேளையில் நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். 

இலங்கையில் முதன்முதலில் போர்த்துக்கேயர் காலடி பதித்த 1505 ஆம் ஆண்டில் இருந்து எமது நாட்டில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஆரம்பமாகி இருந்தது. போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தர் இந்நாட்டில் காலடி பதிக்கத் தொடங்கினர். அதனையடுத்து போர்த்துக்கேயர் இலங்கையிலிருந்து அகன்றனர். பின்னர் ஒல்லாந்தரின் ஆதிக்கம் இங்கு உருவானது. இரு நாட்டவர்களாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை மாத்திரமே கைப்பற்றி ஆட்சி புரிய முடிந்தது. நாட்டின் மத்திய பிரதேசத்தில் எமது சுதேச மன்னர்களின் ஆட்சி பலம் பொருந்தியதாக விளங்கியதனால் போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் எமது நாட்டை முழுமையாகக் கைப்பற்ற முடியாதிருந்தது. 

ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கையில் காலடி பதித்த ஆங்கிலேயராலேயே எமது நாட்டை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. மலையக இராச்சியத்தையும் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் ஆங்கிலேயர் இலங்கையை 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

அதுவரை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் போராடிய இராச்சியமாக மலையக இராசதானி விளங்குகின்றது. ஆங்கிலேயரை இறுதி வரை எதிர்த்துப் போராடிய மன்னனாக கண்டி இராசதானியின் இறுதி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் திகழ்கிறான். 

அத்தனை காலம் வரை மலையக இராச்சியம் ஒன்றுமையுடன் விளங்கியதால் பலம் பொருந்தியதாகவும் விளங்கியது. மலையக இராசதானியின் பிரதானிகளிடையே ஒற்றுமை குலைந்ததால், அந்த இராச்சியம் பலமிழந்து போய் ஆங்கிலேயரின் காலடியில் வீழ்ந்தது. மன்னன் இராஜசிங்கன் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆயுட்காலம் வரை சிறையில் அடைக்கப்பட்டான். 

இவ்வேளையில், உயிரைத் துச்சமென எண்ணி அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடிய ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் மற்றும் அந்நியருடன் போரிட்டு உயிர் நீத்த யாழ்ப்பாண இராச்சிய மன்னன் சங்கிலியன், வன்னி சிற்றரசின் மன்னன் பண்டாரவன்னியன், அந்நிய ஆட்சியாளருக்கு எதிராகப் போராடி உயிரைத் துறந்த சிங்கள இனத்தின் வீரப் புதல்வர்கள் கொங்கேகொல பண்டார, கெப்பிட்டிபொல உள்ளிட்ட ஏராளமானோர் இன்றைய தினத்தில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.  

மலையக இராச்சியம் கைப்பற்றப்பட்டதையடுத்து மலையக இராசதானியின் பிரதானிகளுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமிடையே 1818 இல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்துக்குப் பின்னர் எமது நாட்டில் விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளன. 

ஆங்கிலேயரை எதிர்த்து ஆரம்பத்தில் ஆயுத ரீதியில் எமது தேசத்தின் வீரப் புதல்வர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்போராட்டங்களின் போது சிங்கள இனத்தின் வீரமிகு இளைஞர்கள் மாத்திரமன்றி, பௌத்த மதகுருமாரும் கொல்லப்பட்டுள்ளனர். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான அயுதப் போராட்டங்களெல்லாம் தோல்வியடைந்து ஆங்கிலேயரின் ஆட்சி இந்நாட்டில் நிலைபெறத் தொடங்கியதும், எமது நாட்டவர்கள் தத்தமது இனங்களின் சமய கலாசாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அன்றைய ஆட்சியமைப்பில் எமது நாட்டவருக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராட வேண்டியிருந்தது. 

அன்றைய எமது தேசத் தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது நாட்டுக்குரிய சமய கலாசார தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. இத்தலைவர்களை தேசிய வீரர்களாக இன்றும் நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம். 

பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து எமது நாடு விடுதலை பெற்று எழுபத்தொரு வருடங்கள் கடந்து விட்டன. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து எமது தேசம் முழுமையாக விடுதலை பெற்றுக் கொண்ட போதிலும், இத்தனை ஆண்டுகளாக நாட்டில் ஐக்கியத்தையும் அமைதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனமை உண்மையிலேயே பெரும் தோல்வியாகும். 

ஆங்கிலேயரிடமிருந்து 1947 இல் சுதந்திரம் பெற்றுக் கொண்ட எமது அயல் தேசமான இந்தியாவினால் அரசியலமைப்பு ரீதியில் பொருத்தமான கட்டமைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. 

ஆனால் இலங்கையினால் இன்னும்தான் உள்நாட்டில் ஐக்கியத்தையும் நிரந்தர அமைதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமலுள்ளது. 

1948 சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் தோற்றம் பெற்ற வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் அதிகாரம் கோரும் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. 

வடக்கு, கிழக்கு சிறுபான்மை இனத்தின் அரசியல் உரிமைப் பிரச்சினையைத் துரும்பாக வைத்தபடி தென்னிலங்கை பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இன்னும் சுயநல அரசியலை நடத்திக் கொண்டிருப்பதன் காரணமாக எமது நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அத்தனை முயற்சிகளுமே கைகூடாமல் போயுள்ளன. இனவாதமும், சுயநல அரசியலுமே எமது தேசிய ஐக்கியத்துக்கு சவாலான விடயங்களாக உள்ளன. 

அரசியல் உரிமை கோரும் போராட்டத்தின் விளைவாக உருவான உள்நாட்டு யுத்தத்தினால் நாம் விலைமதிப்பற்ற பெருமளவு உயிர்களையும், உடைமைகளையும் இழந்திருக்கிறோம். எனினும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற மனப்பக்குவம் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் பலரிடம் இன்னும் ஏறப்டாதிருப்பது வேதனைக்குரியது. 

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலமே அழகிய இத்தேசத்துக்கு நிரந்தர விடிவு ஏற்படும் என்பதை இன்றைய தேசிய சுதந்திர தினத்தில் அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியம்.   


Add new comment

Or log in with...