புதிய அரசியலமைப்பு முயற்சியை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை | தினகரன்

புதிய அரசியலமைப்பு முயற்சியை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை

இவ்வளவு தூரம் கடந்து வந்த நிலையில் சும்மா விட முடியாது  

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் அந்த முயற்சியை கைவிடுவதற்கு நாம் தயாராக இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பு விடயத்தில் நாம் இவ்வளவு தூரம் கடந்து வந்த நிலையில், சாத்தியமில்லையென்று கூறி கைவிடப்போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வாகரையில் சனிக்கிழமை(02)மாலை இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஓர் அறிக்கை வெளிவந்த போது தெற்கிலே உள்ள பேரினவாதிகள் இந்த நாட்டை பிரிக்கப் போகின்றது என்று கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எம்மவர்கள் மத்தியில் இருக்கின்ற சிலர் இதில் எதுவும் கிடையாது என்று சொல்லுகின்றார்கள். ஜனாதிபதி இப்போதைக்குச் சாத்தியமற்றது என்று சொல்லுகின்றார்.  

கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் உங்களிடம் (ஜனாதிபதியிடம்) இருக்கின்றது. 

இந்த அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்ட அன்று அதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்திலே 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது நீங்கள் ஆற்றிய உரையை மீண்டும் ஒரு முறை செவிமடுத்துப் பாருங்கள்.

ஏன் இந்த நாட்டுக்கு ஒரு அரசியலமைப்புத் தேவை என்பதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். பண்டா- செல்வா, டட்லி- செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு இரத்தக் களரி ஏற்பட்டிருக்காது. நானும் அந்த வேளையிலே தவறாக அதனை விமர்சித்தேன் என்று சொன்னீர்கள். 

இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் கூட இந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நீங்கள் அன்று சொன்னீர்கள். தெற்கில் இருக்கின்றவர்களுக்கு சமஷ்டி என்றால் பயம் ஏற்படுகிறது.

வடக்கில் இருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி என்று சொன்னால் பீதி ஏற்படுகின்றது. நாட்டு மக்கள் பார்த்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கக் கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள்.  

ஒரு விடயத்தை நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஜனாதிபதி முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் கூட நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை.

ஒக்டோபர் 26ல் அவர் சதிப் புரட்சி வலைக்குள்ளே சிக்கி செயற்பட்ட போதும் கூட நாங்கள் அவரைச் சந்தித்து அவரது முகத்திற்கு நேரே சில உண்மைகளை மரியாதையோடு சொல்லி வைத்தோம்.

நீங்கள் அரசியலமைப்பை மீறியிருக்கின்றீர்கள், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது நாங்கள் உங்களை ஆதரிக்க முடியாது என்று நேரடியாகவே அவரிடம் சொன்னோம். அதனை மாற்றியமைப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து செயற்பட்டோம். நிலைமை மாற்றப்பட்டது. 

எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. நாங்கள் அதிலே திடமாக இருப்போம்.

இந்த நாட்டிலே ஒரு அரசியலமைப்பு எமது மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அரசியலமைப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

(கல்குடா தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...