Friday, April 19, 2024
Home » வெள்ளம் காரணமாக மன்னாரில் 632 குடும்பங்கள் பாதிப்பு

வெள்ளம் காரணமாக மன்னாரில் 632 குடும்பங்கள் பாதிப்பு

- பா.உ செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பார்வை

by Prashahini
December 19, 2023 9:33 am 0 comment

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளதோடு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 404 குடும்பங்களைச் சேர்ந்த 1495 நபர்கள், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 நபர்களும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்களும்,மடு பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது 4 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன்பிட்டி கிராமத்தில் 3 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் கிராம சேவையாளர் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய நிவாரண உதவிகள் பிரதேச செயலகம் கிராம அலுவலகர் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மக்களுக்கான அவசர உதவிகளை பிரதேச செயலகம், மாவட்ட செயலகம்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மக்களுக்கு மேலதிக உதவிகள் அப்பகுதிகளில் உள்ள இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் உடனடித் தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று (18) மாலை (18) நலன் புரி நிலையங்களுக்குச் சென்று மக்களை பார்வையிட்டதோடு, மக்களின் தேவைகளை கேட்டறிந்த ,மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். மக்களின் சுகாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு நடமாடும் மருத்துவ முகாமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக நலன்புரி நிலையங்களை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கண்காணித்து வருவதோடு, நலன்புரி நிலையங்கள் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் தற்காலிக மலசலக்கூட தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT