மின்சாரத்தை சேமித்து சவால்களை சமாளிப்போம் | தினகரன்


மின்சாரத்தை சேமித்து சவால்களை சமாளிப்போம்

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கான தூரநோக்குடன் கூடிய ஆலோசனையொன்றை மின்சக்தி அமைச்சர் ரவிகருணாநாயக்க முன்வைத்திருக்கின்றார். கடந்த காலங்களில் ஏற்பட்ட வரட்சிக் காலநிலை காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதன் காரணமாக அனல் மின் உற்பத்தியையும், அவசர மின் கொள்வனவையும் மேற்கொள்ளும் நிலையே காணப்பட்டது. இதனால் மின்சார சபை பெருந்தொகைப் பணத்தைச்செலவிட நேர்ந்தது. மீண்டும் வரட்சி நிலையொன்று காணப்படுவதால் போதியளவு மின்சாரத்தை வழங்க மாற்று வழியென்றைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே மின்சக்தி அமைச்சர் நாட்டு மக்களுக்கு நல்லதொரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.

நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரப் பாவனையில் சிக்கனத்தை பேணக்கூடிய வகையிலேயே இந்த ஆலோசனை காணப்படுகின்றது. வீடுகளிலும் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் நாளாந்தம் இரண்டு மின் குமிழ்களையவது அணைத்தால் அந்தச சேமிப்பு மூலம் வரட்சிக் காலத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபையின் எத்துல்கோட்டே கட்டமைப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் பெருட்டு அங்கு சென்ற போது அதிகாரிகள் மட்டத்தில் இந்த புதிய யோசனையை அமைச்சர் முன்வைத்திருக்கின்றார். உண்மையிலேயே இதுவொரு ஆரோக்கியமான யோசனையாகக் கொள்ள முடியும். நாட்டில் மின்சார பாவனை விடயத்தில் அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் பாவனையில் வீண் விரயம் காணப்படுவதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. நகர்ப்புறங்களில் வீதி விளக்குகள் கூட பகல் முழுவதும் எரிந்துகொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இதுவிடயத்தில் உள்ளூராட்சிச்சபைகள் உரிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தினமும் இரண்டு மின்குமிழ்களையாவது அணைத்து மின்சாரத்தை சேமிக்க முற்பட்டால் வருடாந்தம் 100 மெகாவோர்ட் மின்சாரத்தைச் சேமிக்க முடியுமென மின் பொறியியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறு மின்சாரத்தைச் சேமிக்க முடிந்தால் அவசர மின்சார கொள்வனவு அவசியமற்றதாகிவிடும். அதேசமயம் அனல்மின் உற்பத்திக்காக கூடுதல் செலவிடுவதையும் தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கடந்த 2015ல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவானதன் காரணமாக அனல் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கவில்லை. அதிக மழைபெய்தால் அனல் மின் உற்பத்தி அவசியமானதல்ல என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதன்பின்னர் கடந்த நான்கு வருட காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாமை காரணமாக மின்சார சபை நஷ்டத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்த விடயத்திலும் கேள்வி அதிகரிக்கும் போது அதற்கு ஈடுகொடுக்கக்கூடியதாக விநியோகம் அமைய வேண்டும். கேள்விக்கேற்ற விதத்தில் விநியோகம் இல்லாது போனால் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். அவ்வாறான நெருக்கடி நிலை உருவாகும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடலாம். இதனால் மின்சார சபை மட்டுமல்ல மின் பாவனையாளர்களும் பாதிக்கப்படலாம். மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும்போது திடீர் மின் தடைகளும் ஏற்படலாம்.

அத்துடன் உற்சவ காலங்களில் கூடுதல் மின்சாரம் தேவைப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதற்கேற்ற விதத்தில் மின்சாரம் சேமிக்கப்பட வேண்டும். எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட காலத்திலும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய வெசாக் பண்டிகை காலத்திலும்தான் எமக்கு மிகக்கூடுதலான மின்சாரம் தேவைப்படுகின்றது. நாட்டில் அடுத்து வரக்கூடிய ஒரு மாதத்துக்கிடையில் மழைபெய்வதில் தாமதமேற்பட்டால் இந்த மின்சாரத் தேவையை எப்படி சமாளிப்பது என்பது கேள்விக்குரியதாகும்.

அவ்வாறானதொரு நிலையில் கட்டாயமாக அனல் மின் உற்பத்தி மிக அவசியமாகின்றது. அத்துடன் அவசர மின்சாரக் கொள்வனவையும் மேற்கொள்ள நேரிடலாம். தற்போதைய நிலையில் சிறிய வரட்சி காணப்பட்டாலும் நீரேந்து நிலைகள் உள்ள பகுதிகளில் இடைக்கிடையே பரவலாக மழை பெய்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அது போதிய மின் உற்பத்திக்கு ஈடுகொடுக்கக்கூடியதாகக் காணப்படவில்லை. என்றாலும் கூட இப்போதைக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பெதுவும் இல்லையென மின்சார சபை அறிவித்திருக்கின்றது.

இதேவேளை குறைந்த விலையில் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் விடயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி வருகின்றது. குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியாது போனால் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி கிடையாது என அமைச்சர் தெரிவித்த போதும், அதற்காக மின் கட்டணம் உயரும் என மக்கள் பீதியடைய வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்திருப்பது மக்களுக்கு திருப்தியளிப்பதாகவே உணர முடிகிறது.

என்றாலும் மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இந்த ஆலோசனைக்கமைய அனைத்துத் தரப்பினரும் தினசரி இரண்டு மின் குமிழ்களையாவது அணைத்து மின்சாரத்தை சேமிக்க உதவ முன்வரவேண்டும். அதேசமயம் அலுவலகங்களில் பெரும்பாலும் ஆளில்லாத நேரங்களிலும் மின் விசிறிகள் சுழன்று கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அரச அதிகாரிகள் பொறுப்புடனும், முன்மாதிரியாகவும் செயற்பட முன்வருவார்களானால் நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாகவே அமையும் என்பது உறுதியானதாகும்.


Add new comment

Or log in with...