வாடிக்கையாளரை வருத்தாத உழைப்பே நீடித்து நிலைக்கும் | தினகரன்

வாடிக்கையாளரை வருத்தாத உழைப்பே நீடித்து நிலைக்கும்

நம்பிக்கை, நாணயமே எங்களின் தாரக மந்திரம்

நேர்காணல் விசு கருணாநிதி

பத்தரை மாற்றுத் தங்கம்!

செம்பு கலக்காத தங்கம் பத்தரை மாத்து என்பது போல், நல்ல குணம் மட்டுமே கொண்டு, தீய குணங்கள் ஏதுமற்றவரையும் மாசு மருவற்றவரையும் 'பத்தரை மாத்துத் தங்கம்' என்றழைப்பார்கள். அவர் 'தங்கமான மனிதர்' என்றும் சொல்வார்கள்.

தங்கம் என்பது தூய்மைக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகிறது. அந்தத் தங்கத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்பவரும் தங்கத்தைப்போல் தூய்மையாக அதுவும் பத்தரை மாற்றாக இருந்தால், வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள் இல்லையா?

தங்கத்தில் நகை செய்வதென்றால், அதில் நிச்சயம் செம்பு கலக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது தேவைக்கு ஏற்றமாதிரி அது வளைந்து கொடுக்காது என்கிறார் விஸ்வநாதன்.

என்னதான் கலந்தாலும் எங்கள் (சொர்ணம்) நகை 22கரற்றுக்குக் குறையாது. அதன் தரத்தை அறிய உரசிப் பார்ப்பதற்குக்கூட வாடிக்கையாளர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தங்க நகை வடிவமைப்பதில் அக்கு வேறு ஆணிவேறாகக் கற்றுகொண்டவர். அதனால், தங்கம் அவருக்கு ஏற்றவாறு வளைந்துகொடுக்கிறது. அந்தளவிற்கு சொர்ணத்தின் நகைகள் மீது வாடிக்கயாளர்களுக்கு நம்பிக்கை என்கிறார் அவர்.

தினகரன் வர்த்தகப் பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

கேள்வி - வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது எப்படி?

பதில் - எல்லாவற்றுக்கும் நம்பிக்கையும் நேர்மையும்தான் காரணம். வாடிக்கையாளர்கள் தங்கவாங்கவந்து மகிழ்ச்சியுடன் செல்லவேண்டும். அவர்களின் மகிழ்ச்சிதான் எங்களின் உயர்ச்சி. எனது பிறப்பிடம் ஓந்தாச்சிமடம், வளர்ந்தது கல்முனை. எனது வியாபாரத்தை 1972 ஆம் ஆண்டு கல்முனையிலேயே ஆரம்பித்தேன். பாடசாலை கல்வியை முடித்தவுடனே வியாபாரத்திற்கு வந்துவிட்டேன். இது எனது தந்தை வழிதொழில் அல்ல. இது எனது சொந்த முயற்சியாகும். முதலில் நகைத் தொழிலுக்கே வந்தேன். நன்கு வரைதல் பண்ணுவேன். இதனால் தங்கத்தையும் நன்கு டிசைன் பண்ணக்கூடியதாக இருந்தது. இது எனக்கு இயற்கையாகவே வந்த கலையாகும். நகை வடிவமைப்பு என்பது ஒரு  கலையாகும். இந்த கலையுடனேயே எனது தொழிலும் அமைந்தது. 

கேள்வி - இத்தொழிலை தேர்வுசெய்த ஏன்?

பதில் - இதற்கு எனது சகோதரனை குறிப்பிடலாம். அவர் நகைத்தொழிலையே செய்தார். அவர் மூலமாகவே நகைத்தொழிலை கற்றேன். 1972 ஆண்டு கல்முனையில் சொர்ணம் ஜுவலரியை ஆரம்பித்தேன். அக்காலத்திலேயே நாணயமாற்றுப் பிரச்சினையும் உருவானது. அவ்வேளையில் நிதியமைச்சராக என். எம். பெரேரா இருந்தார். ரூபா ஐம்பது, ரூபா தாள் இரத்து செய்யப்பட்டது. அவ்வேளையில் சிற்சில பிரச்சினைகள் உருவானாலும் வியாபாரத்தில் நஷ்டமேற்படவில்லை. அதன்பின்பு சிறிதுசிறிதாக முன்னேறி வியாபாரத்தை ஸ்திரமான இடத்திற்குக் கொண்டு வந்தேன். அதன்பின்னர் 1997 இல் கொழும்பில் ரத்னமஹாலை ஆரம்பித்தேன். சரவணாஸ் மற்றும் லட்சுமி நாராயண ஜுவலரியை  ஆரம்பித்தேன். 

கேள்வி - தங்கத்தை எங்கிருந்து கொள்வனவு செய்கிறீர்கள்?

பதில் - ஆரம்பத்தில் வங்கியிலேயே நகைகளை வாங்கினேன். ஆரம்ப காலத்தில் அரசாங்கத்தினால் தங்கத்திற்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டது. நகை வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தங்கத்திற்குரிய அனுமதி பத்திரம் கொடுக்கப்பட்டது. அதனூடாகவே தங்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இது 1972க்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. அண்மையில் சிலர் தங்கம் இறக்குமதி செய்தனர். சிங்கப்பூர், துபாய் உட்பட சில நாடுகளிலிருந்து இறக்குமதியானது. இவர்களிடமிருந்து தங்கம் வாங்கப்பட்டது. வங்கி உட்பட வர்த்தகர்களிடம் வாங்கியது பிஸ்கட் தங்கமே.

கேள்வி - இலங்கை நகைகளுக்கு மௌசு அதிகம் என்கிறார்களே?

பதில் - இதற்கு வேலைப்பாடுகள் அதிகம். அக்காலத்தில் கையாலே செய்வதால் அதில் பல கலையம்சங்கள் நிறைந்து காணப்படும். அத்துடன் நாங்கள் நகைக்குரிய கற்களை கட்டும் முறை சிறப்பானது. இதனால் நகையிலுள்ள கற்கள் விழந்துவிடமாட்டாது. இலங்கையில் ஒருநாளைக்கு 50 முதல் நூறுவரையே கற்களை கட்டலாம். தங்க நகை செய்யும் பல தொழிலாளிகளுக்குக் கூட தங்க நகைக்குரிய கலவையின் அளவு இன்னும் தெரியாமல் இருக்கிறது.

கேள்வி - கோல்ட் சென்டர் ஆரம்பிக்கப்பட்டதுடன் உங்களது வியாபாரம் பதிக்கப்பட்டதா?

பதில் - அப்படி எதுவுமில்லை. செட்டியார் தெருவிலேயே தங்கத்திற்குரிய கேள்வி இருக்கிறது. விலை நிர்ணயமும் இங்கேயே நடைபெறுகிறது. மக்களுக்கு தெரிவு செய்வதற்கு அளவுக்கதிகமான கடைகள் இருக்கின்றன. ஆனாலும், நம்பிக்கைக்குரிய கடைகளுக்குரிய வியாபாரம் குறையவில்லை. எமக்கென நிரந்தரமான வாடிக்கையாளர்கள். கோல்ட் சென்டரிலும் வியாபாரம் உண்டு.

கேள்வி - வெளிநாட்டிலிருந்து தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்ய அனுமதி உண்டா?

பதில் - ஆம் அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளனர். எனினும் உரிய வரிகளைச் செலுத்தியே இறக்குமதி செய்யலாம். 15 வீத வரி செலுத்தவேண்டும். எனவே இறக்குமதி செய்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. சுமார் தங்கத்தின் விலை அறுபதாயிரம் என்றால் அதற்குரிய வரி ஒன்பதாயிரும். நகை கூடி, சேதாரம் என்றுவரும் போது நகையின் பெறுமதி எண்பதாயிரம் என்று வந்துவிடும். விற்க முடியாது. ஒருவீத வட்டியென்றால் இறக்குமதி செய்யலாம். எமது வியாபாரத் தேவைகளுக்கு வங்கியிலிருந்தே வாங்குகின்றேன்.

கேள்வி - ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றீர்களா அல்லது கைகளால்தான் வடிவமைக்கின்றீர்களா?

பதில் - இங்கு இரண்டு முறையும் உள்ளது. வியாபார இலாபம் இருப்பது மெஷினால் தயாரிக்கப்பட்டவைக்கே. கையால் செய்யும் ஆபரணங்களுக்கு காலங்கள் தேவை. சாதாரணமாக ஒரு மோதிரம் கையினால் செய்வதற்கு சுமார் இரண்டு நாட்கள் செல்லும். ஆனால், மெஷினூடாக இரண்டு நாட்களில் சுமார் இரண்டாயிரம் மோதிரங்களை செய்து முடிக்கலாம். இதற்கென மெஷினை இயக்குவதற்கு ஒரு இயக்குநர் இருந்தாலே போதுமானது. தற்போது நகைகளை நுட்பத்துடன் செய்பவர்களுக்கு கேள்வி குறைந்துவிட்டது.

கேள்வி - எந்த முறையில் சேதாரம் அதிகமாகும்? 

பதில் - கைகளினால் ஆபரணங்களை செய்யும் போது சேதாரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதேநேரம் மெஷின் மூலம் செய்யும் போது சேதாரம் மிக குறைவாகவே இருக்கும். 

கேள்வி - உங்களது நகை வடிவமைப்பு ஏனைய கடைகளைவிட எப்படி வேறுப்பட்டது?

பதில் - நான் நகைத்தொழிலை பற்றி நன்கு கற்றபின்னரே, நகை வியாபாரத்தை ஆரம்பித்தேன். நகையிலுள்ள தொழில் நுட்பங்கள் நன்கு தெரியும். ஒரு கொடியை ஆரம்பித்தால் அதன்பின்னரே இலை, பூ வென்று ஒவ்வொன்றாக வரும். இதுவே முறைசார்ந்ததாகும். நகைத்தொழிலை நன்கு தெரியவேண்டுமென்றால் நகை ஆரம்பத்திலிருந்து இப்படி கற்று வர வேண்டும், சிந்திக்க வேண்டும். நான் நகை செய்ய ஆரம்பித்தால், வேரிலிருந்து ஆரம்பித்து பூவில் வந்துதான் முடிப்பேன். இப்போது செய்யப்படும் நகைகள் அப்படியானதல்ல. இப்போது வேர் கொடியின்றி காய்வரும், பழம்வரும் பூவரும் என்ற ரீதியிலேயே செல்கிறது.

கேள்வி - நகைசெய்யும் தொழிலை எப்படி ஆரம்பித்தீர்கள்?

பதில் - எனது உறவினர் ஒருவர் நகை தொழிலை செய்தார். இவர் யாருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டார். ஆனால் நான் அவருக்கு பின்னால் இருந்து சகலவற்றையும் பார்த்து, கற்றுக் கொண்டேன்.  எனது விடாமுயற்சியாகும். நாளாந்தம் நகை ஆபரணங்கள் செய்வதைப் பற்றியே யோசித்துக் கொண்டு,  இது குறித்தே திட்டமிட்டுக் கொண்டிருப்பேன். 

கேள்வி - பெரும்பாலான நகைக்கடைகள் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகிறதே?

பதில் - ஆம், நான் நகைத்தொழிலை ஆரம்பிக்க முன்னர் கல்முனையில் பார்த்தால் எல்லாவற்றுக்குமே 22 கரட் என்று ரசீது கொடுப்பார்கள். ஆனால் அவை 16, 18, 20, 21 கரட்டுகளே இருக்கும். 22 என்ற ரீதியில் சரியாக கலவையை உருவாக்குவதில்லை. எனது நகை ஆபரணங்களை எடுத்துக் கொண்டால் சகலதும் 22 கரட் என்றால் அது 22 கரட்டேதான். 18 கரட் என்றால் அது அப்படியே இருக்கும். இதுவே எனது வியாபாரத்தின் முக்கிய செயற்பாடாக அமைந்தது.

கேள்வி - நகையின் பெறுமனத்தை எப்படி அறிவது?

பதில் - நகை குறித்து தெரிந்தவர்களுக்கு தெரியும். அதேநேரத்தில் நகையை வாங்கியவர்கள் விற்கும் காலத்தில் அதிலுள்ள தங்கத்தின் பெறுமானம் தெரியவரும். 22 கரட் என்று ரசீது இருந்தாலும் அது 18 கரட்டாக இருக்கலாம். எனது நகைகளை சொர்ணம் (SJ) 22 என்று முத்திரையிட்டே கொடுக்கிறேன். கல்முனை பகுதியில் SJ என்றாலே பொதுவாக அனைவருக்கும் தெரியும். எனது நடைக்கடையில் வாங்குபவர்களின் தங்கத்திற்கு குறையில்லை. அதிகமான நகைகளை ஈட்டுக்கு வைக்கும் போது, அல்லது விற்பனை செய்யும் போது நகையை நன்கு சுரண்டி பரிசோதித்து பார்த்தே பணம் கொடுப்பார்கள். ஆனால் சொர்ணம் என்றவுடன் அந்த நகையை குறித்து எந்தவிதமான கேள்வியுமின்றி, நகையின் பாரத்தைப் பார்த்துவிட்டு அதற்குரிய பெறுமானத்தை கொடுப்பார்கள். ஊர்மக்களிடம் எனது நகைக்கடை குறித்ததான நம்பிக்கையுண்டு. அத்துடன் நல்லெண்ணமும் நிறைவாகவே காணப்படுகிறது.

கேள்வி - தங்கத்தின் தரம் பற்றிக் கூறுங்களேன்?

பதில் - 24 கரட்டே சிறந்தது. தங்க ஆபரணம் 22 கரட்டே முக்கியமானது.

கேள்வி - இத்துறையில் நீங்கள் ஒரு வல்லுநர் என்ற ரீதியில் வாடிக்கையாளருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் - கல்முனையை பொறுத்த வரை முஸ்லிம் வாடிக்ைகயாளர்களே அதிகமானவர்கள். எமது இனத்தவர்கள் தங்கம் வாங்குவதைவிட முஸ்லிம்கள் அதிகமான தங்கம் நகை கொள்வனவு செய்கின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்த வரை பொருள் தரமாக இருக்க வேண்டும்.

அத்துடன் நகையை ஒட்டும்போது அதற்குரிய பெறுமதியுடைய உலோகத்தை பயன்படுத்தியே ஒட்ட வேண்டும். சிலர் தேவையற்ற பெறுமதியற்ற உலோகங்களை கொண்டு நகையை ஒட்டுவதால் நகையின் பெறுமதி குறைந்துவிடும். இதனைத்தான் பொடியென்று கூறுவர். இப்படியான இழக்கமான பொடியை வைத்து ஒட்டுவதால் நகையின் பெறுமதி குறைந்துவிடும். நூறு கிராமுக்கு ஒரு கிராம் என்றால் பரவாயில்லை. இதனையே அளவுக்கதிகமான நகையின் பெறுமதி வீழ்ச்சியுறும்.  நகை வாங்கும் போது மனம் நொந்து போகாமல் இருத்தல் வேண்டும். சுமார் இரண்டு இலட்சத்திற்கு நகை கொள்வனவு செய்யும் போது சுமார் ஐயாயிரம் கழிவாக்கினால் பாராவாயில்லை. கூலி மற்றும் சேதாரம் போக செயற்பட்டால் போதுமானது.

கேள்வி - பிளாட்டினம் குறித்து குறித்து கொஞ்சம் கூறுங்களேன்?

பதில் - பிளாட்டினம் தங்கத்தைவிட விலை கூட. இதனூடாக நகை செய்வது வேறுமுறையிலேயே இதற்கான செலவு அதிகமாகும். இதற்கான வேளையாட்கள் குறைவு. எம்மிடம் உண்டு. இதற்கு பெரிதளவான கேள்விகள் இல்லை. இதற்கு மீள்விலை இல்லை.போதிய சந்தைவாய்ப்பு இலங்கையில் இல்லை. தங்கம் ஏதோ சில ரூபாக்களை குறைத்து விற்கலாம். பிளட்னம் அப்படி விற்க முடியாது. அதனை விற்பதற்குரிய கேள்வி சந்தையில் இல்லை.

கேள்வி - இப்போது மஞ்சாடி கணக்கு இல்லையா?

பதில் - நாங்கள் 1975, 1976 வரை பயன்படுத்தினோம். இப்போது மில்லி கிராம், கிராம் கணக்கிலேயே நகை நிறுவை செய்யப்படுகிறது. 1000 மில்லி கிராம் ஒரு கிராம். எட்டு கிராம் ஒரு பவுண். சேதாரம் என்பது தங்கத்தை செய்யும் போது ஏற்படும் சேதமாகும் துகள்களாகும்.


Add new comment

Or log in with...