தோட்டத் தொழிலாளர்களின் வேதனைக்கு முடிவு வேண்டும்! | தினகரன்


தோட்டத் தொழிலாளர்களின் வேதனைக்கு முடிவு வேண்டும்!

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டம் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர் எனவும் கூட்டு ஒப்பந்தத்துடன் சம்பந்தப்படாத தரப்புகள் கடுமையாக சாடியிருக்கின்றன. நியாயமான சம்பள அதிகரிப்புடன் கூடிய புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட வேண்டுமெனவும் வெளியே உள்ள தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து தோட்டத் தொழிலாளர் ஏமாற்றப்பட்டிருப்பதாக பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பைப் பெற முடியவில்லை. எனவேதான் மலையகத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கைச்சாத்திடப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் குளறுபடிகள் நிரம்பி இருப்பதைக் கண்டதால் அதில் தாங்கள் கைச்சாத்திடாமல் வெளியேறியதாக தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு கிடைக்கக் கூடிய விதத்தில் புதிய ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட வேண்டும், அதற்காக அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் எனவும் அச்சங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தத்தில் மூன்று தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடுவது வழக்கமாக இருந்தது. இந்தமுறை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே கைச்சாத்திட்டன. இதனை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறி மூன்றாவது தொழிற்சங்கமான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒப்பமிட மறுத்து விட்டது. அதற்கு அவர்கள் மூன்று காரணங்களை காட்டியிருக்கின்றனர்.

முதலாளிமார் சம்மேளனத்தின் சதிக்குள் பிரதான இரண்டு தொழிற்சங்கங்களும் அகப்பட்டு விட்டதாகவும், இதன் மூலம் 85 சதவீத தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளப் போராட்டம் திசை திருப்பப்பட்டதாக தொழிலாளர்கள் பெரும் அதிருப்தியடைந்திருப்பதையே காண முடிகிறது. தொழிற்சங்கங்களும் தமது அரசியல் தலைவர்களும் தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் நினைக்கின்றார்கள். தொழிலாளர்களது அதிருப்தியில் கூட நியாயமிருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

தமது நீண்ட காலப் போராட்டத்தை தலைவர்கள் மழுங்கடிக்கச் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இது கவலை தரக் கூடிய விடயமாகும்.

தொழிற்சங்கங்களும், தலைவர்களும் தோட்டத் தொழிலாளர்கள் நலனில் உண்மையான அக்கறை செலுத்தவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாவில் ஒரு ரூபா குறைந்தால் கூட ஏற்கப் போவதில்லை எனக் கூறியவர்கள் பின்னர் வேறு கதை பேசியதைக் காண முடிந்தது.

அரசுடன் இணைந்திருக்கும் மலையகத் தலைவர்கள் கூட இந்தச் செயற்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு நீதியான தீர்வொன்று கிட்டாது போனால் அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க நேரிடலாமென அமைச்சர்கள் திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர் கடும் விரக்தியுற்ற நிலையில் தெரிவித்திருக்கின்றனர். தமது நிலைப்பாட்டிலிருந்து விலகப் போவதில்லை என அவர்கள் வலியுறுத்திக் கூறி வருகின்றனர்.

கடந்த 25ம் திகதியன்று கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற போது உடன்படிக்கை நகல் சனிக்கிழமை தரப்படுமெனக் கூறப்பட்டது. ஆனால் அத்தகவல் திருப்தியளிக்கவில்லையென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

திடீரென பிரதான இரண்டு தொழிற்சங்கங்களும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்வந்துள்ளன.

முன்னொரு போதுமில்லாத சம்பள அதிகரிப்பு என அவர்கள் கூறுகின்றனர். இந்த ஒப்பந்தத்தை தோட்டத் தொழிலாளர்கள் நிராகரித்து தமது பெரும் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.

தொழிலாளர்கள் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். இனிமேல் தொழிற்சங்கங்களை நம்பி இருக்கப் போவதில்லை எனவும் அனைத்து தொழிலாளர்களும் தனித்து நின்று போராடப் போவதாகவும் தொழிலாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

நிலைமை மேலும் மோசடைவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்கள் இதில் தலையிட்டு நல்லதொரு முடிவுக்கு வர வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்க வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களை துன்பத்துக்கும் மனவேதனைக்கும் உள்ளாக்கலாகாது.


Add new comment

Or log in with...