விவசாயிகளை மன்னர்களாக்க ஆற்ற வேண்டிய முதல் காரியம்! | தினகரன்


விவசாயிகளை மன்னர்களாக்க ஆற்ற வேண்டிய முதல் காரியம்!

'விவசாயிகளை அரசர்களாக்கும் வேலைத் திட்டத்தை எமது அரசாங்கம் தற்போது ஆரம்பித்திருக்கிறது' என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஊடாக விவசாயிகளுக்கான இலகு கடன் திட்டத்தை தம்புள்ளையில் தொடக்கி வைத்து உரையாற்றும் போது தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு இந்நாட்டு விவசாயிகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பல வருடங்களாக இந்நாட்டு விவசாயிகள் குறித்தும் விவசாயத் துறை தொடர்பாகவும் இவ்வாறான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகவில்லை. இவ்வாறான நிலையில்தான் அமைச்சர் மங்கள சமரவீர விடுத்திருக்கும் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இலங்கையானது ஆரம்ப காலம் தொட்டு ஒரு விவசாய பொருளாதார நாடாகும். இப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமிக்க கலாசாரப் பராம்பரியம் இங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது குளமும், தாதுகோபுரமும் தான் இந்த கலாசாரத்தின் அடிப்படையாகும்.

இந்தப் பாரம்பரிய கலாசாரத்தின் ஊடாக இந்நாடு விவசாய உற்பத்தித் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக நீண்ட காலம் திகழ்ந்திருக்கின்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் இந்நாட்டின் சமூக பொருளாதாரத் துறைகளில் பல்வேறு விதமான மாற்றங்களும் சீரமைப்புக்களும் இடம்பெற்றன. இதன் விளைவாக இந்நாட்டு விவசாய உற்பத்தித் துறை பல்வேறு சவால்களுக்கு உள்ளாகியது. அவை விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. அதனால் இந்நாட்டில் விளையக் கூடிய விவசாய உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது.

ஆனாலும் இந்நாட்டு விவசாயிகள் அந்தத் துறையிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது அத்துறையை கைவிடுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை. என்னதான் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதிலும் அவர்கள் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய உற்பத்தித் துறைக்கான செலவு இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாகும். அந்த செலவையும் கூட தம்மால் முடிந்த வகையில் ஈடு செய்தபடி அத்துறையில் தொடர்ந்தும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு செலவிட்டு செய்கை பண்ணப்படும் விவசாயத்தை பீடைகளின் தாக்கம், காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள் என்பவற்றிலிருந்து பாதுகாத்து அறுவடை கட்டத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டிய சவாலுக்கு விவசாயிகள் முகங்கொடுக்கின்றனர். இதேவேளை படைப்புழு, அறக்கொட்டியான் போன்ற பீடைகளின் தாக்கம் கடந்த வருடம் முதல் ஒரு தேசியப் பிரச்சினையாக தோற்றமெடுத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில் இந்நாட்டு விவசாயத் துறை முகங்கொடுத்துள்ள பீடைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த பீடைநாசினிகள் உள்ளிட்ட பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான செலவும், விவசாயத்திற்கான பசளைகளுக்குரிய செலவும் மிக அதிகமாகும். இவ்வாறான அதிகரித்த செலவுகளுக்கு முகங்கொடுக்கின்ற விவசாயிகள் காலநிலை மாற்றத்தின் விளைவான பாதிப்புகளிலிருந்தும் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலைமையையும் எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறான எல்லா சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்து அறுவடையைப் பெறும் இந்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு உரிய பெறுமதி கிடைக்கப் பெறாத துர்ப்பாக்கிய நிலைமையே காணப்படுகிறது. ஏனெனில் அவர்களது உற்பத்திகளுக்கு இடைத்தரகர்கள்தான் பெறுமதி நிர்ணயிக்கின்றனர். இதன் விளைவாக காலம் முழுவதும் விவசாய நிலத்தில் போராட்டம் நடத்தி அறுவடையைக் கொண்டு வருகின்ற விவசாயியை விடவும் இடைத்தரகர்கள்தான் கொள்ளை இலாபம் பெறுபவர்களாக மாத்திரமல்லாமல் மன்னர்களாகவும் இன்று விளங்குகின்றனர்.

இந்நாட்டின் மன்னராட்சிக் காலத்தில் விவசாயிகள்தான் உண்மையான மன்னர்களாக விளங்கினர். அந்த நிலைமை அண்மைக் காலமாகத்தான் தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலையிலிருந்து இந்நாட்டு விவசாயிகளும் விவசாயத் துறையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பலவீனமடைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபை மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனைய விவசாய உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியைப் பெற்றுக் கொடுக்கவும் உரிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் தம் உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியைப் பெற்றுக் கொள்வர். அவர்கள் மன்னர்களாக மாறும் நிலைமை ஏற்படும். இல்லாவிட்டால் விவசாயிகள் தொடர்ந்தும் ஏழைகளாக இருப்பதோடு, இடைத்தரகர்கள் தொடர்ந்தும் கொள்ளை இலாபமீட்டும் மன்னர்களாகவே திகழ்வர். அதனால் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக இந்நாட்டு விவசாயிகளையும் விவசாயத் துறையையும் வலுப்படுத்தும் போது அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருப்பது போன்று இந்நாட்டு விவசாயிகளை மன்னர்களாக கட்டியெழுப்ப முடியும். அதற்கான உரிய வேலைத்திட்டமாக இந்த இலகு கடன் திட்டம் அமையும். அதனால் அமைச்சர் அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் இந்நாட்டு விவசாயிகளுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.


Add new comment

Or log in with...