Wednesday, April 24, 2024
Home » ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய ESG மூலோபாயமான ‘HELIOS’ ஐ அறிமுகப்படுத்தும Advantis

ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய ESG மூலோபாயமான ‘HELIOS’ ஐ அறிமுகப்படுத்தும Advantis

by Rizwan Segu Mohideen
December 11, 2023 11:19 am 0 comment

Hayleys குழுமத்தின் டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) பிரிவான Hayleys Advantis Limited, குழுமத்தின் ESG பயணத்தில் ஒரு முக்கிய படியான ‘HELIOS’ எனப் பொருத்தமான வகையில் பெயரிடப்பட்ட அதன் சூழல், சமூக, ஆளுகை (ESG) மூலோபாயத்தை அறிமுகப்படுத்தி ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் இலங்கை காலநிலை நிதியத்தின் தலைவருமான கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் விசேட பேச்சாளரான, இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்றொழில் பிரிவின் தலைவர் பேராசிரியர் செவ்வந்தி ஜயக்கொடி உள்ளிட்ட கௌரவ பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் இலங்கை காலநிலை நிதியத்தின் தலைவருமான கலாநிதி அனில் ஜாசிங்க (இடது) இந்நிகழ்வின் காபன் நடுநிலை சான்றிதழை, Advantis குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கெப்டன் ருவன் வைத்தியரத்ன (நடுவில்) மற்றும் Advantis குழுமத்தின் சபை பணிப்பாளர் லசித குமரதுங்க (வலது) ஆகியோரிடம் கையளித்த போது…

‘HELIOS’ என்ற பெயரானது, சூரியனைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான உயிரினங்களுக்கும் அவற்றின் நிலைபேறான தன்மைக்கும் சக்தி மூலமாக காணப்படும் மையப் பாத்திரமான சூரியனை அது வலியுறுத்துகிறது.

ESG மூலோபாயம் ஏழு அடிப்படைத் தூண்களில் நிறுவப்பட்டுள்ளது:
அவை சக்தி, உமிழ்வுகள், உயிர்ப் பல்வகைமை, ஊழியர் ஈடுபாடு, சமூக ஈடுபாடு, பாதுகாப்பு மற்றும் ஆளுகை. இந்த தூண்கள், சூழல் தொடர்பான பொறுப்பாளர் எனும் வகையில், பொறுப்பான பெருநிறுவன நடத்தைக்கான இக்குழுமத்தின் உறுதிப்பாட்டின் அத்திவார கற்களாகும். Hayleys Lifecode என குறிப்பிடப்படும் அதன் தாய் நிறுவனமான Hayleys PLC இன் ESG கட்டமைப்பின் மூலம் இது வழிநடத்தப்படுகின்றது.

ESG மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய Advantis குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருவன் வைத்தியரத்ன, “HELIOS ஆனது மிகவும் நிலைபேறான எதிர்காலத்திற்கான எமது வலுவான அர்ப்பணிப்பை உள்ளடக்கியுள்ளதோடு, Advantis குழுமத்தின் உறுதிப்பாட்டை அது பிரதிபலிக்கிறது. சூழலைப் பாதுகாப்பதற்கும், சமூகங்களை ஆதரிப்பதற்கும், நெறிமுறையான மற்றும் வெளிப்படையான வணிக நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்குமான எமது உறுதிமொழியை இது காண்பிக்கிறது. Advantis தொடர்ச்சியாக முன்னேறி வரும் நிலையில், டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) துறையில் உள்ள ஏனையவர்களுக்கு ஒரு முன்மாதிரியை அமைத்து, சாதகமான மாற்றத்தை நோக்கி பயணிப்பதனை ஊக்குவிப்பதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. HELIOS ஆனது, ஒரு மூலோபாயம் மட்டுமல்லாது, மிகவும் பொறுப்பான மற்றும் நிலைபேறான உலகிற்கு வழிகாட்டும் கொள்கையாக இது செயற்படுகிறது.” என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் செவ்வந்தி ஜயக்கொடி, “Advantis குழுவுடன் நெருக்கமாக இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம், அந்நிறுவனம் சூழலுக்கு கணிசமான மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறது என்பதை அறிந்து கொண்டேன். ஆனைவிழுந்தானில் Advantis Blue C திட்டத்தின் மூலம் சதுப்புநிலங்களின் இயற்கையான மீளுருவாக்கத்தை மேற்கொள்வதில் அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பானது, வளிமண்டலத்தில் உள்ள காபனிரொட்சைட் கடலால் உறிஞ்சப்பட்டு சேமிக்கப்படும் திறனை (Blue Carbon) கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது. இது கரையோர சூழல் தொகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றுக்கு புத்துயிரளிப்பதற்கு உதவுகிறது. இந்த முக்கிய காரணத்திற்காக அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்காக நான் முழு மனதுடன் இக்குழுவினரைப் பாராட்டுகிறேன்.” என்றார்.

சூழலை பேணுவதன் கீழான முக்கிய இலக்குகளில் ஒன்றாக, 2030 ஆம் ஆண்டளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 45% ஆக குறைப்பது குழுவின் அர்ப்பணிப்பாகும். புதுப்பிக்கத்தக்க சக்தி, மாற்று எரிபொருட்கள், குறைந்த அல்லது பூச்சிய காபன் வெளியேற்ற போக்குவரத்து தீர்வுகளில் கவனம் செலுத்தும் முயற்சிகள் மூலம் இந்த அர்ப்பணிப்பு உணர்த்தப்படுகிறது. அதே நேரத்தில், தங்களது ESG மூலோபாய கட்டமைப்பிற்குள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கு அமைய, ‘சமூக’ மற்றும் ‘ஆளுகை’ கட்டமைப்பிற்குள் பல்வேறு அம்சங்களைக் கையாள்வதற்கான விரிவான இலக்குகளை குழுமம் உருவாக்கியுள்ளது.

குழுமத்தின் ESG மூலோபாயத்தைத் தொடங்குவதற்கான இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைத் தாண்டி, Advantis குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது காபன் நடுநிலையாக்கல் நிகழ்வாகவும் இது அமைகின்றது. அத்துடன் இந்நிகழ்விற்காக, இலங்கை காலநிலை நிதியத்தால் வழங்கப்பட்ட காபன் நடுநிலையாக்கல் சான்றிதழை, சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் இலங்கை காலநிலை நிதியத்தின் தலைவருமான கலாநிதி அனில் ஜாசிங்க, Advantis நிறுவனத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்ட கலாநிதி அனில் ஜாசிங்க, “அர்த்தமுள்ள மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ESG மூலோபாய அறிமுகமானது, Advantis இன் நிலைபேறான தன்மைக்கும், ஒட்டுமொத்தமாக எமது தேசத்திற்கும் முக்கியமானதாகும். காலநிலை மாற்றம் தொடர்பான முக்கியமான பிரச்சினையை இது போன்ற செயலூக்க விடயங்கள் மூலம் எதிர்கொள்ள, தனியார் துறை முன்னிற்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. சூழலைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தை ஆதரிப்பதற்கும் Advantis கொண்டுள்ள அர்ப்பணிப்புக்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறு மேலும் பல நிறுவனங்கள் இதைப் பின்பற்றும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Advantis ஆனது, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் செயற்பாடுகளைக் கொண்ட, இலங்கையின் பாரிய பல்துறை டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) சேவை வழங்குநராகும். Blue-Chip சர்வதேச நிறுவனமான Hayleys PLC இன் ஆதரவுடன், டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) துறையில் Advantis முன்னணியில் திகழ்கின்றது. ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ், சர்வதேச சரக்கு முகாமைத்துவம், கடல் துறைகள், வலுசக்தி, பொறியியல் திட்டங்கள், பயணம் மற்றும் விமான போக்குவரத்த்து உள்ளடக்கிய, அனைத்து சேவைகளையும் Advantis வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT