ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றிய அஜித் | தினகரன்

ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றிய அஜித்

போனி கபூர் சொன்ன சீக்ரெட் !

 விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்கும் 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

 "அஜித் குமாருடனான எனது நட்பு, அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை ஸ்ரீதேவி எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார். நிச்சயமாக என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார்.

ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான ஒரு படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி நாங்கள் தேர்ந்து எடுத்த கதைதான் 'பிங்க்'. இப்படத்தின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார்.

அவருடைய கனவை நனவாக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல், ஜூலை 2019ல் துவங்கி ஏப்ரல் 2020ல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது  நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன்.

அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான டீம் வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் எச்.வினோத் அவருடைய முந்தைய படங்களின் மூலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார். அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது" என்றார்.


Add new comment

Or log in with...