நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே அனைவரினதும் பொறுப்பு | தினகரன்


நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே அனைவரினதும் பொறுப்பு

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டை உண்மையாக நேசிக்கும் எல்லாத் தரப்பினரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அரசாங்கமும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது.

இந்த வகையில் 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பரந்தடிப்படையில் முன்னெடுக்கின்றது. ஏனெனில் பல தசாப்தங்களாக நிலவி வரும் இப்பிரச்சினையால் நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவற்றை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற அரசாங்கம், புதிய அரசியலமைப்பினூடாக இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் முயற்சி செய்கின்றது.

இந்த அடிப்படையில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது. அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கின்றார். இக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த யோசனைகளின் பிரகாரம் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் விவாதங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், நிபுணர் குழுவினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சில விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாததால், மாற்று அறிக்கையொன்று பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இவ்வறிக்கையைத்தான் எதிர்க்கட்சியினர் ஓர் சந்தர்ப்பத்தில், உத்தேச அரசியல் யாப்பு என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுதான் புதிய அரசியலமைப்பு என்றும் வேறு சந்தர்ப்பங்களில் இது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வரைவு என்றும் அரசாங்கம் கூறி வருவதாக மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, 'பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் உத்தேச அறிக்கை நாட்டைப் பிரித்து காட்டிக் கொடுக்கும் ஒரு ஏற்பாடு' என்று குறிப்பிட்டுள்ளதோடு , 'புதிய யாப்பை எவரும் கோரவில்லை. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவசியமற்ற ஒன்று. அதனால் நாட்டைப் பிரிக்கும் இந்த முயற்சியை எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

ஆனால் இவர் குறிப்பிடுவது போன்று இந்நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றை இலகுவாகக் கொண்டு வர முடியாது. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இந்த புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு இந்த ஆதரவு கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை வைத்துக் கொண்டு நாடு துண்டாடப்படப் போவதாகவும் உத்தேச அறிக்கையில் பௌத்த சமயத்துக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அவர் சார்ந்த அணியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது அற்ப அரசியல் இலாபம் தேடும் வேடிக்கையான முயற்சியாகும்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 2000ம் ஆண்டில் கொண்டுவந்த பிராந்திய அலகு யோசனையை உள்ளடக்கிய உத்தேச அரசியலமைப்புக்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நல்கியவராவார். இவர் அன்று சந்திரிகா தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்துக் கொண்டிருந்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ அவரது பதவிக் காலத்தில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, 'உச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்' எனக் கூறினார். அத்தோடு நின்றுவிடாமல் தைப்பொங்கல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 'சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்' என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

ஏனெனில் தேசியப் பிரச்சினையின் தாக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் அவர் நன்கு அறிந்திருந்ததன் விளைவாகவே அன்று அவ்வாறு கூறினார். அவர் பதவியில் இருந்த சந்தர்ப்பங்களில் தேசியப் பிரச்சினை தொடர்பில் கூறியுள்ளவற்றுக்கும் தற்போது கூறுகின்றவற்றுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமது அன்றைய பதவிக் காலத்தில் கூறிய மஹிந்த ராஜபக்ஷ தற்போது அதற்கு மாற்றமாக குரல் கொடுப்பது அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளாரா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

உண்மையாகவே நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் அனைவரும் தற்போதைய அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிப்பது கூடாது.

இப்பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு காண முன்னெடுக்கும் நடடிக்கைகள் தொடர்பில் பிழையானதும் தவறானதுமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி அற்ப அரசியல் இலாபம் தேடுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவர்களது செயற்பாடுகளை நாட்டை உண்மையாகவே நேசிக்கும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சிக்காது நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்குவதே பொறுப்பு மிக்க எதிர்த்தரப்பினரின் கடமையாகும்.


Add new comment

Or log in with...