Wednesday, April 24, 2024
Home » இக்ராவின் முதல் தசாப்தம்

இக்ராவின் முதல் தசாப்தம்

by Rizwan Segu Mohideen
December 18, 2023 3:40 pm 0 comment

தெவிட்டாத கடலலை ஓசை ஓயாது ஒலிக்கும் தென் மாகாணத்திலே, நான்கின மக்களும் நட்புறவோடு வாழும் ஹம்பாந்தோட்டை நகரிலே, சிறப்பிடம் பெற்று மிளிரும் ஓர் ஆரம்பப் பிரிவு பாடசாலையாம் ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலயம்.

பாடசாலையின் அதிபர் எம்.இஸட்.எம். இர்பான்

ஹம்பாந்தோட்டை நகரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஒரேயொரு தமிழ் மொழி மூல தேசிய பாடசாலையான சாஹிரா தேசிய பாடசாலை, ஆரம்பம் முதல் உயர்தரம் வரையிலான கல்வியை வழங்கி வந்ததோடு கல்வி அமைச்சின் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்திற்கு அமைவாக அதன் ஆரம்பப் பிரிவினை தனியான பாடசாலையாக இயங்கச் செய்வதற்கு அனுமதியினைப் பெறுவதற்காக நடாத்தப்பட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டத்தில் அனைவரும் ஏகமனதாக வழங்கிய அனுமதிக்கு ஏற்ப, பாடசாலைக்கு பெயரிடுவது தொடர்பான கலந்துரையாடலின் போது பல்வேறு பெயர்கள் முன்வைக்கப்பட்ட போதும் பாடசாலையின் ஆரம்பக் கூட்டத்தில் சட்டத்தரணியும் ஆசிரியருமான எஸ். எம். ரிஷாம் முன்வைத்த ‘இக்ரா’ என்ற பெயர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, புதிய பாடசாலைக்கு இக்ரா ஆரம்ப வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டு, வலயக் கல்விப் பணிமனை, தென்மாகாணக் கல்வித்திணைக்களம் மற்றும் தென் மாகாண கல்வி அமைச்சுக்கு பாடசாலையினூடாக அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைவாக, 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 08 ஆம் திகதி தென் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் இப்பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டதையடுத்து இக்ரா ஆரம்ப வித்தியாலயமாக அங்கீகாரம் பெற்று இயங்க ஆரம்பித்தது. அதன்போது ஹம்பாந்தோட்டை வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றிய இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த எம்.இஸட்.எம். இர்பான் இக்ரா ஆரம்ப வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார்.

பாடசாலையின் முகப்புத் தோற்றம்

அதிபர் எம்.இஸட்.எம். இர்பான், பாடசாலையின் அதிபராக தலைமை பொறுப்பேற்கும்வேளையில், 11 ஆசிரியர்களும் சுமார் 520 மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையின் காரணமாக சாஹிரா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவாக செயற்பட்டுவந்த இப்பாடசாலை, முற்றாக அழிவுற்றிருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இணை நிறுவனமான UNOPS நிறுவனத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான கட்டடத்தொகுதியிலேயே இக்ராவின் ஆரம்ப கால கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இச்சந்தர்ப்பத்தில் UNICEF மற்றும் UNOPS நிறுவனங்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர வேண்டியது இக்ராவின் கடமையாகும்.

பாடசாலையின் ஆசிரியர் குழாம்

இவ்வாறானதொரு பின்னணியில் கோட்ட, வலய, தென் மாகாணக் கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் தென்மாகாணக் கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் ஆகியோரது வழிகாட்டல்கள், அதிபரின் தலைமைத்துவத்தின் ஆற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் தியாகம், கற்றலில் மாணவர்களின் ஈடுபாடு, பாடசாலை மீதான பெற்றோரின் அக்கறை போன்றவற்றின் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக தொடர்ந்து வந்த காலங்களில் அரசாங்கத்தின் பல செயற்திட்டங்களுக்காக இப்பாடசாலை தெரிவாக ஆரம்பித்தது. இதன் பயனாக 2014ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்’ என்ற செயற்திட்டத்தின் கீழ் விளையாட்டு பூங்கா ஒன்றையும் 2019 ஆம் ஆண்டு ‘அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்தின் கீழ் ஆரம்ப கற்றல் வள நிலையமான இருமாடிக் கட்டடம் ஒன்றையும் மாணவர் பயன்பாட்டிற்காக பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேலும், 2019 ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டு வந்த தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாடசாலை பயன்பாட்டிற்கென பஸ் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டமையானது பாடசாலை வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மாணவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி, சில சமூகப் பொதுப் பணிகளுக்காகவும் பயன்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் பேண்ட் வாத்தியகுழு

இக்ராவின் வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக விசேட கல்வி அலகு ஆரம்பிக்கப்பட்டமையை குறிப்பிடலாம். சாதாரண மாணவர்களைப் போலவே விசேட தேவையுடைய மாணவர்களும் கல்வியைப் பெற தகுதி உடையவர்கள் என்ற அடிப்படையில், ‘விசேட தேவையுடைய மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் அம்மாணவர்களையும் எமது பாடசாலையில் உள்ளீர்ப்பு செய்து, அவர்களுக்கென தனித்துவமான அலகொன்றின் மூலம் பயிற்றப்பட்ட விசேட கல்வி ஆசிரியர்களின் பொறுப்பின் கீழ் விசேட கல்வி அலகு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தென்மாகாணத்திலேயே தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் இவ்வாறானதொரு விசேட கல்வி அலகு எமது பாடசாலையில் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை எமது பாடசாலையை பெருமைப்படுத்தும் இன்னுமொரு அம்சமாகும்.

பாடசாலை அபிவிருத்தி சங்கம்

விசேட கல்வி அலகு எனும் அறப்பணியின் மூலம் சமூகத்தில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு, அவர்களின் திறமைகளை சமுதாயத்திற்கு வெளிக்கொணர்வதில் இக்ரா பெருமை கொள்கிறது. தற்போது 11 விசேட தேவையுடைய மாணவர்களும் இரண்டு விசேட கல்வி ஆசிரியர்களும் இவ்வலகில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொட்டதெல்லாம் வெற்றி என்றாற் போல, இணைப்பாடவிதான போட்டித்தொடர்களான தமிழ் மொழித் தினம், ஆங்கில மொழித் தினம், இலக்கிய விழா மற்றும் தேசிய மீலாத் விழா போன்ற போட்டிகளில் வருடம் தோறும் தேசிய மட்டம் வரையில் எமது மாணவர்கள் பங்குபற்றி பல சாதனைகளையும் புரிந்து வருகின்றனர். 2017ஆம் ஆண்டு ஆரம்ப விளையாட்டுப் போட்டியில் ஹம்பாந்தோட்டை கோட்டத்தில் ஆண்கள் பிரிவில் தரம் 5 மற்றும் தரம் 3 மாணவர்கள் பங்குபற்றி மூன்றாமிடத்தினை பெற்று விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் பாடசாலைக்கு பஸ் வண்டி அன்பளிப்பு

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை மதிப்பிடும் பிரதான தேசிய மதிப்பீட்டு பரீட்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வருடம் தோறும் எமது சிறார்கள் புரியும் சாதனை மாவட்டத்தில் மட்டுமன்றி, தென் மாகாணத்திலேயே எமது பாடசாலையை தனித்துவம்மிக்க தலைசிறந்த ஆரம்பப் பிரிவு பாடசாலையாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றது. பாடசாலையின் வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் 2020 ஆம் ஆண்டு 195 புள்ளிகளைப் பெற்று எமது பாடசாலை சிறந்த சாதனையை நிகழ்த்தியதோடு, பாடசாலைக்கு விசேட விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை விசேட விருதும் 2022ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுக்கமைவாக, ஹம்பாந்தோட்டை கல்வி வலயத்தில் எமது பாடசாலை சிறப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, திறமை காட்டிய நான்கு ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டமையானது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கிய விடயமுமாகும்.

அத்தோடு, பாடசாலையில் ஒரு தசாப்த காலமாக கல்வி கற்ற பழைய மாணவர்கள் நாட்டின் பல்வேறு முன்னணிப் பாடசாலைகளில் இடைநிலை கல்வியை தொடர்ந்து வருவதோடு, அவர்கள் அப்பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய நிலைகளில் கல்விச் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்த சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். குறிப்பாக எமது மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடர அனுமதி பெற்று, சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்விக்கான வாய்ப்பினை பெற்று கல்வி கற்று வருவதானது இக்ராவின் இந்த குறுகிய கால வரலாற்றில் மறுக்க முடியாத சில உண்மைகளாகும்.

‘கற்றுயர்வோம்’ என்ற பாடசாலையின் மகுடவாசத்திற்கு அமைவாக சிறந்த கல்வி, அறிவொழுக்கம் மாத்திரமன்றி மாணவர்களின் ஆளுமைத் திறன், தலைமைத்துவ பண்புகளை விருத்தி செய்து இரண்டாம் நிலைக் கல்விக்கு அடிப்படையை வழங்கும் நோக்கில் முதன்முதலாக 2022ஆம் ஆண்டு மாணவர் தலைவர் குழாம் ஆரம்பிக்கப்பட்டு, மாணவத் தலைவர்களுக்கு அடிப்படை தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவதில் அதிபர் உட்பட ஆசிரியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றமை விசேடமான அம்சமாகும். இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பாடசாலை இசைவாத்தியக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டிய மற்றுமொரு விடயமாகும்.

கல்விச் செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள், விளையாட்டு, அழகியல் செயற்பாடுகள் போன்ற துறைகளுக்கு ஆசிரியர்களுடன் இணைந்து ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக இக்ராவிலிருந்து வெளியேறிய மாணவர்களையும் வளங்களாக பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு அதிபரின் தலைமையில் 2022ஆம் ஆண்டு இக்ராவின் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதிபலனாக பல மாணவர்கள் சுயேட்சையாகவே எமது பாடசாலையினால் முன்னெடுக்கப்படும் பலவிதமான செயற்பாடுகளுக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றனர்.

எமது பழைய மாணவர்களை எம்முடன் தொடர்ந்து இணைத்துக் கொள்ளும் வகையிலும் தசாப்த விழாவைக் கொண்டாடும் வகையிலும் பழைய மாணவிகளுக்கான வலைப்பந்தாட்ட போட்டித் தொடரும் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடரும் நடத்தப்பட்டதோடு, அதற்கான சிறந்த வரவேற்பும் கிடைக்கப் பெற்றமையானது இக்ரா பெருமிதம் அடைந்த இன்னுமொரு தருணமாகும்.

அதிபரின் தலைமையில் சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் எமது பாடசாலையினால் வருடம் தோறும் நடைமுறைப்படுத்தப்படும் ‘உதவிக்கரம் நீட்டுதல்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக எமது பாடசாலையில் கல்வி பயிலும் மற்றும் கல்வியை தொடர்வதில் இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதோடு, வருமானம் குறைந்த மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத குடும்பங்களுக்கு இயலுமான அளவு உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை நாம் பெற்ற பாக்கியமாகும். 2019ஆம் ஆண்டு தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ‘பாடசாலை சுற்றாடல் வேலைத்திட்டம்’ எனும் போட்டியில் குறுகிய நிலப்பரப்பை உடைய பாடசாலைகள் எனும் பிரிவில் எமது பாடசாலையும் பங்குபற்றி கோட்ட, வலய மட்டங்களில் முதலிடம் பெற்று மாகாண மட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் பணப்பரிசில்களையும் பெற்று சாதனை படைத்தது. மேலும் 2020ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான விவசாயப் போட்டியில் கோட்ட, வலய மட்டங்களில் முதலிடம் பெற்று மாகாண மட்டத்தில், கொரோனா தொற்றுக்காலப் பகுதியில் சிறந்த சூழல் முகாமைத்துவத்திற்கான திறமைச் சான்றிதழையும் பெற்றது. இதுவே குறித்த போட்டிகளில் உயர்ந்தபட்ச விருதுகளுமாகும். மேற்படி இரண்டு சுற்றாடல் சார்ந்த போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றியீட்டிய ஒரேயொரு தமிழ் மொழி மூல பாடசாலை இக்ரா என்பது இங்கு அடிக்கோடிடப்பட்டு கூறப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வெற்றியில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அளப்பரியது.

தற்போது எமது பாடசாலையானது அதிபரின் தலைமையிலான திறமையான ஆசிரியர் குழாம், போதிய அளவு கட்டடத் தொகுதிகள், போதிய அளவு பௌதீக வளங்களுடன் கூடிய மாதிரி வகுப்பறைகள், விசேட கல்வி அலகு, தொழில்நுட்ப செயற்பாட்டறை, ஆங்கில செயற்பாட்டறை, சிறுவர் விளையாட்டு பூங்கா, விளையாட்டு மைதானம், பிள்ளை நேய கவர்ச்சிகரமான கற்றல் சூழல் என அனைத்திலும் சிறந்து விளங்குவதோடு, தென் மாகாணத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் முன்னோடிப் பாடசாலையாக முன்னணியில் திகழ்கின்றது.

இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி கண்ட எமது சிறார்களின் கலையகம் தன்னலம் பாராது தியாக உணர்வுடன் பணியாற்றும் அதிபர், கடமை பொறுப்பிலிருந்து தவறாத ஆசிரியர்கள், பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் கண்ணாயிருக்கும் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிர்வாக குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரினது நல்வாழ்த்துக்களுடனும் பிரார்த்தனைகளுடனும் தனது முதலாவது தசாப்தத்தை நிறைவு செய்து இரண்டாவது தசாப்தத்தில் தடம் பதிக்கின்றது.

இவ்வாறு 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல சாதனைகளை புரிந்து 2022 ஆம் ஆண்டின் நிறைவுடன் தனது தசாப்த விழாவை கொண்டாடுவதில் இக்ரா பெருமை அடைகின்றது. இன்று போலவே என்றும் இப்பாடசாலையிலிருந்து ஏராளமான சமநிலை ஆளுமையுள்ள சிறந்த பிரஜைகள், கல்விமான்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்றோர்களை உருவாக்குவதற்கு அவசியமான அடிப்படை கல்வியை புகட்டுவதில் இக்ராஅயராது உழைத்து வருகின்றது. அறிவொழுக்கம் நிறைந்த மாணவ சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதே இக்ராவின் நோக்கமாகும். அதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் முயற்சிப்போம், முன்னேறுவோம், பிரார்த்திப்போம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்ராவின் தசாப்த நிகழ்வில் இக்ராவின் புகழ் எத்திக்கும் ஓங்கிப் பரவ வாழ்த்துக்கள்.

வாழ்க இக்ரா !
வளர்க இக்ராவின் பணி !!

பாடசாலையின் அதிபர்
எம்.இஸட்.எம். இர்பான்

பாடசாலையின் முகப்புத் தோற்றம்
பாடசாலையின் ஆசிரியர் குழாம்
பாடசாலையின் பேண்ட் வாத்தியகுழு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் பாடசாலைக்கு பஸ் வண்டி அன்பளிப்பு
பாடசாலை அபிவிருத்தி சங்கம்

தகவல்களும் படங்களும் : எம். இர்பான் சகரியா
(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT