‘கலைந்து போன கனவு!’ | தினகரன்


‘கலைந்து போன கனவு!’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் பலமாத இழுபறிக்குப் பின்னர் நேற்று கைச்சாத்திடப்பட்டு விட்டது.மலையகப் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகளின் பிரதிநிதிகளும், கூட்டு உடன்படிக்ைகயில் அங்கம் வகிக்கின்ற மலையக தொழிற்சங்கத் தலைவர்களும் நேற்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டதன் மூலம் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால சம்பளப் பிரச்சினையானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாதிருக்கின்றது. ஏனெனில் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையே சம்பள உயர்வு விடயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பொது இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக தகவல் வெளிவந்ததுமே, மலையகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உடனடியாகத் தீவிரமடையத் தொடங்கி விட்டன.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேற்றைய தினம் காலை ஹற்றன், பதுளை,நுவரெலியா,கேகாலை உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக இடம்பெற்றதைக் காண முடிந்தது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத கூட்டு ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திடுவதை எதிர்ப்பதாகத் தெரிவித்தே கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மலையகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயிரம் ரூபா நாட் சம்பளத்தை வலியுறுத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், மலையக தொழிற்சங்கங்கள் நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் கோஷமெழுப்பியதைக் காண முடிந்தது.

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்குமாறு கோரி பல மாதங்களாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்த தோட்டத் தொழிலாளர்கள், தற்போது தொழிற்சங்கங்களுக்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும்படியாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. ஆகவே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்னுமே இறுதி முடிவு எட்டப்படவில்லையென்பதே உண்மை!

சம்பள உயர்வு தொடர்பான நீண்ட கால இழுபறியைப் பொறுத்தவரை உண்மை நிலைமையொன்றை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் என்பது தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல! ஆயிரம் ரூபா வேதனம் வேண்டுமென்ற கோரிக்கையை மலையக தொழிற்சங்கமே முதன்முதலில் முன்வைத்தது.

வாழ்க்கைச் செலவு இன்று மோசமாக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரம் ரூபாவுக்குக் குறைந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு நாளாந்த சீவியம் நடத்த முடியாதென்பதால் ஆயிரம் ரூபா சம்பளத்தை எவ்வாறாவது வென்றெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தை மக்களுக்கு முதன்முதலில் ஊட்டியது தொழிற்சங்கமே ஆகும்.

அது மாத்திரமன்றி, ஆயிரம் ரூபாவுக்குக் குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும் ஒருசில தொழிற்சங்கங்கள் உறுதிபடக் கூறியிருந்தன. எனவேதான் தோட்டத் தொழிலாளர்களும் தங்களுக்கு ஆயிரம் ரூபா வேதனம் எவ்வாறாயினும் வென்றெடுத்துத் தரப்படுமென்று மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டனர்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரும் மலையகப் பெருந்தோட்டங்களில் இப்போது ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக நடைபெறுவதைப் பார்க்கின்ற போது ஒரு விடயம் மாத்திரம் தெளிவாகப் புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை நம்பியிருந்த ஆயிரம் ரூபா சம்பளம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வென்றெடுக்கப்படவில்லையென்பதுதான் இப்போது புரிகின்ற உண்மை!

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளம் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அதிகரிப்பானது கடந்த கால வரலாற்றில் முன்னெப்போதும் கிடைக்காத ஒன்றெனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்திருந்ததைக் காண முடிந்தது. ஆயிரம் ரூபாவை வென்றெடுக்கப் போவதாக சூளுரைத்த அவர்கள், இப்போது மாறுபாடாகப் பேசுவது அரசியலைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கக் கூடும்.

ஆனால் மறுபுறத்தில் பார்க்கின்ற போது, இதுகாலவரை 500 ரூபாவாக இருந்து வந்த நாட் சம்பளம் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 700 ரூபாவாகவே அதிகரித்துள்ளதாக தொழிலாளர் தரப்பில் கூறப்படுகின்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாதிருக்கின்றது.

தேயிலை விலைக்கேற்ப வழங்கப்பட்டு வந்த 30 ரூபா கொடுப்பனவு 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இக்கொடுப்பனவானது தங்களது நாட் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தப் போவதில்லையென தொழிலாளர்கள் ஆதாரங்களுடன் கூறுவதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களையும், ஒப்பந்தத்துடன் சம்பந்தப்படாத பல்வேறு தொழிற்சங்கங்களின் கருத்துகளையும் வைத்துப் பார்க்கின்ற போது, ‘முன்னர் நாளாந்தம் 500 ரூபாவைப் பெற்று வந்த தோட்டத் தொழிலாளர்கள் இனிமேல் 750 ரூபாவையே பெற்றுக் கொள்ளப் போகின்றனர்’ என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

இத்தனை காலப் போராட்டத்துக்குப் பின்னரும், இத்தனை எதிர்பார்ப்புகளுக்குப் பின்னரும் கிடைத்துள்ள சம்பள அதிகரிப்பானது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தருகின்ற ஒன்றுதான் என்பதை இலகுவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கின்ற போது, ஆயிரம் ரூபா என்பது ‘கலைந்து போன ஒரு கனவு’ என்பதைத் தவிர வேறு எதனைத்தான் இங்கு கூற முடியும்?


Add new comment

Or log in with...