நாகரிகம் மிகுந்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு | தினகரன்


நாகரிகம் மிகுந்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு

இலங்கையின் அரசியலில் மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பான பேச்சுகள் உலவத் தொடங்கியுள்ளன. அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கின்ற கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. 

தற்போதைய ஆளும் தரப்பான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்ற அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. 

இது சம்பந்தமாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசுக்கு ஆதரவான கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் அண்மையில் நடைபெற்றுள்ளது. 

இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியானது தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரும்பான்மை வாக்குகளால் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய அரசாங்கம் என்பது ஜனநாயக நாடொன்றைப் பொறுத்தவரை நாகரிகம் நிறைந்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு என்பதனை மறுப்பதற்கில்லை. வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை மறந்து பொதுநிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றிணைவதென்பது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் ஆகும். 

இவ்வாறான தேசிய அரசாங்கமொன்று அமையுமானால் அதனால் ஏற்படக் கூடிய அனுகூலமான விளைவுகள் ஏராளம் எனலாம். நாட்டில் அரசியல் ரீதியான பேதங்கள் அகன்று விடுமென்பது ஒருபுறமிருக்க, அபிவிருத்தித் திட்டங்களையும் அரசியல் ரீதியான முட்டுக்கட்டைகளின்றி, தங்குதடையில்லாமல் முன்னெடுத்துச் செல்ல வழியேற்படும். அதேசமயம் பல்வேறு கட்சிகளும் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு செயற்படுகின்ற சூழல் உருவாகுவதற்கு இடமுண்டு. 

கடந்த 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கூட்டு அரசாங்கம் உருவான போது, அதுவும் தேசிய அரசாங்கமாகவே அமைந்திருந்தது. நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எதிரும்புதிருமாக செயற்பட்டு வந்த பிரதான இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட போது மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சி கொண்டனர். 

இலங்கையில் பண்பான அரசியல் கலாசாரம் உருவாகி விட்டதாகவும், அரசியல் பேதங்கள் இன்றி நாடு இனிமேல் அபிவிருத்தியை நோக்கிச் செல்லுமெனவும் மக்கள் நம்பிக்கைகொண்டனர். அன்றைய நல்லாட்சி அரசின் ஆரம்பமே அவ்வாறுதான் அமைந்திருந்தது. 

ஆனாலும் இலங்கையின் அரசியலில் அது வரலாற்றுத் துரதிர்ஷ்டமாகவே அமைந்து விட்டது. 2015 ஜனவரியில் உருவாகிய நல்லாட்சி அரசாங்கம் தனது மூன்றரை வருட பயணத்தைப் பூர்த்தி செய்த நிலையில், அரைகுறைப் பயணத்துடன் கலைந்து போனது. 

நல்லாட்சி அரசுக்குள் தீவிரமாக உருவெடுத்த இரு தரப்பு முரண்பாடுகளாலும், ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளாலும் நாட்டில் ஏற்பட்ட உச்சகட்ட அரசியல் நெருக்கடியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அரசியல் நெருக்கடிக்குத் தீர்வைக் கண்டு கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தையே நாட வேண்டிய பரிதாப நிலைமைக்கு நல்லாட்சி அரசாங்கம் உள்ளாகியிருந்தது.  

வேறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகளால் ஒருபோதுமே பொது இணக்கப்பாட்டின் கீழ் ஒன்றுபட முடியாதென்ற யார்த்தமான உண்மையை அன்றைய அரசியல் நெருக்கடியானது எமக்கெல்லாம் உணர்த்தியது. அத்துடன், இலங்கை அரசியலின் வழமையான பாரம்பரியம் என்றுமே மாற்றப்பட முடியாதென்ற உண்மையும் அப்போதுதான் புலப்பட்டது.  

அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் ஸ்திரமான அரசாங்கமொன்றைத் தோற்றுவித்துக் கொள்வதற்கு நீண்ட நாட்கள் சென்றன. அதன் போது எதிர்நோக்கிய சவால்களும் கொஞ்சநஞ்சமல்ல. 

அரசாங்கம் தற்போது நிதானமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அரசுக்குள் தற்போது குறிப்பிடும்படியான நெருக்கடிகள் கிடையாது. ஆளும் தரப்பின் பிரதான கட்சி  ஐக்கிய தேசியக் கட்சியாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்ற போதிலும், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் குறிப்பிடும்படியான இடையூறுகள் தற்போது கிடையாது. ஆனாலும் தேர்தல்களை இலக்கு வைத்தபடியே இரு தரப்பும் இயங்க வேண்டியிருப்பதனால், எதிர்காலத்தில் அரசியல் நெருக்கடிகள் மீண்டும் தோன்றாதென்பதற்கு எதுவித உத்தரவாதமும் கிடையாது.  

இவ்வாறான வேளையிலேயே தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைத்துக் கொள்வதற்கான தீர்மானத்துக்கு அரசாங்கம் தற்போது மீண்டும் வந்திருக்கிறது. அரசியல் ரீதியான முரண்பாடுகளைக் களைவதில் அரசாங்கம் இன்னமும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டையே அரசின் இத்தீர்மானம் புலப்படுத்துகின்றது. 

தேசிய அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதிலும் அரசாங்கத் தரப்பு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உதயமானதில் இருந்து அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆரவை வழங்கி வருகின்றது. எனவே உத்தேச தேசிய அரசாங்கத்திற்கும் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவை வழங்குமென எதிர்பார்க்கலாம். எனினும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்குமா என்பதை எதிர்வுகூற முடியாது. 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றரை வருட காலம் கூட்டரசாங்கம் தொடர்ந்த போதிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பு போதிய கவனம் செலுத்தவில்லையென்ற மனக்குறை அம்மக்களுக்கு உண்டு. 

தமிழ்க் கூட்டமைப்பு இன்றைய அரசுக்கு ஆதரவு வங்குவதில் தவறில்லை. ஆனாலும் அந்த ஆதரவை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமிழ்க் கூட்டமைப்பு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே முக்கியம்.      


Add new comment

Or log in with...