போதைப்பொருள் ஒழிப்பை எவராலும் புறக்கணிக்க முடியாது | தினகரன்


போதைப்பொருள் ஒழிப்பை எவராலும் புறக்கணிக்க முடியாது

நாட்டை மற்றொரு பேரழிவுக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கும் போதைப்பொருள் வர்த்தகம், பாவனையை முற்றாக ஒழித்துக்கட்டும் தூரநோக்குடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதியின் முயற்சியை பாராட்டாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. நாடு போதைப்பாவனைக்குள் அடிமையாகும் போது நாட்டிலுள்ள மனித வலு முற்று முழுதாக சீர்குலைந்து சின்னாபின்னப்படுவது மட்டுமன்றி முழு நாடும் இருள் யுகத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றது. இதனால் நாட்டின் எதிர்காலச் சந்ததியினர்கூட பலத்த சவாலை எதிர்கொள்ளும் நிலையையே நோக்க வேண்டியுள்ளது. இந்தப் பேரழிவிலிருந்து தேசத்தை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டிருப்பதை எவராலும் புறக்கணித்துவிட முடியாது.

உண்மையிலேயெ நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல வழிகளிலும் தூரநோக்குச் சிந்தனை கொண்டவர் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. எந்தக்காரியத்தையும் தட்டிக்கழிக்கும் மனப்போக்கில் ஒருபோதும் ஜனாதிபதி செயற்பட்டது கிடையாது. தேசத்தை வளமுள்ளதாகவும், பலமுள்ளதாகவும் கட்டியெழுப்ப வேண்டுமென்ற சிந்தனைப் போக்குடனேயே ஜனாதிபதி இயங்கிக்கொண்டிருக்கின்றார். நாட்டுக்கு பொறுப்புள்ள பிரஜைகளாக மக்களை மாற்றியமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையே அவர் கொண்டிருக்கின்றார். அதுவும் எமது எதிர்காலச் சந்ததியினரான சிறார்களையும், இளைஞர்களையும் நல்ல மனநிலையிலும் நல்ல உணவுள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தி வருகின்றார்.

ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு உள்நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய மட்டத்திலும் நல்ல வரவேற்புக் கிட்டியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இன்று உருவாகியுள்ளது. உள்ளூர் போதைப்பொருள் பாவனையிலிருந்து இன்று வெளிநாட்டு போதைப்பொருட்களுக்கு எமது இளைய சமுதாயம் அடிமைப்பட்டிருக்கின்றனர். யுத்த காலத்தைவிட மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்திலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்தை ஜனாதிபதியே அறிமுகப்படுத்தினார். பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஒரு முன்மாதிரி முயற்சியாக இதனைப் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் வெறும் மதுவுக்கு மட்டும் அடிமையான மக்கள் இன்று மனிதப் பேரழிவுக்குக் காரணமான போதைப்பொருளுக்கு அடிமையாகி அழிவை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையே காணமுடிகிறது.

பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் நாட்டில் வெற்றிகரமாக நடந்துவரும் சூழ்நிலையில் ஆங்காங்கே சில கசப்பான அனுபவங்களும் உருவாகி வருவதை கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்ற போது பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும், நெருக்கடிகளும். சவால்களும் அந்த மாணவர்களின் எதிர்காலத்தையே பாதித்துவிடுமோ என்றதொரு அச்சம் இன்று ஏற்பட்டுள்ளது.

வடபுலம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் சகலராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. கிளிநொச்சியில் ஒரு பாடசாலையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு வார நிகழ்வின் போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிக்கொண்டிருந்தார். போதைப் பொருள் பாவனை பற்றி தகவல்கள் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத்தருமாறு மாணவர்களிடம் பொலிஸ் அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அங்கு கல்வி கற்கும் மாணவனொருவன் முன்பின் யோசியாமல் தனது வீட்டுச் சூழலில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்கப்படுவதாகக் கூறியுள்ளான். பொலிஸார் இதனை செவிமடுத்த போதிலும் அதனை பெரிதுபடுத்த முற்படவில்லை. என்றாலும் கூட இந்தவிடயம் போதைப்பொருள் விற்பனையாளருக்கு தெரியவந்ததால் அந்த மாணவனுக்கு பெரும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அந்த மாணவனால் படிப்பைக்கூட தொடரமுடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டிக்கின்றான். உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையே தொடர்கின்றது.

இதுபோன்ற சம்பவங்கள் வேறு சில கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மட்டத்துக்கு அப்பாலும் சில இடங்களில் இதுபோன்று நடந்துள்ளன. இதனால் போதைப்பொருள் பாவனை. விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிந்தாலும்கூட மக்கள் அவற்றைத் தெரிவிக்க அச்சம் கொண்டு “தமக்கேன் இந்தவேலை” என்று கண்டும் காணாத போக்கில் நடந்துகொள்கின்றனர்.

இவ்வாறான அச்சுறுத்தல் நிலை தொடருமானால் பொதுமக்கள் இதுவிடயத்தில் வெளிப்படையாக இயங்க முன்வரப்போவதில்லை. இதன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட திட்டமும், இலக்கும் கைநழுவிப் போகக்கூடிய நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதியின் தூய்மையான நோக்கமும், இலக்கும் இதன் காரணமாக தவறிப் போகும் ஒரு நிலைமையே ஏற்படுகின்றது. இத்திட்டம் வெற்றியளிக்க வேண்டுமானால் அதிகாரிகள் மட்டத்தில் சில நடவடிக்கைகள் கடினமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

பாடசாலை மட்டத்திலும் சரி வெளிப்படையாகவும் சரி இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்கொண்டு செல்லப்பட வேண்டுமானால் பாதுகாப்பு உத்தரவாதம் மிக முக்கியமானது என்பதை மறந்துவிட முடியாது. தகவல்களின் இரகசியம் பேணப்படுவதோடு. கிடைக்கும் தகவல்கள் விடயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தவிரும்புகின்றோம். அதேசமயம் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உதவும்அதிகார மட்டம் குறித்தும் பாதுகாப்புத்தரப்பு விழிப்படையவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விழைகின்றோம்.


Add new comment

Or log in with...