வீதிவிபத்துகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்ைககள் அவசியம் | தினகரன்


வீதிவிபத்துகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்ைககள் அவசியம்

நாட்டில் வீதிவிபத்துகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நாளாந்தம் பத்துக்கும் கூடுதலான வீதிவிபத்துகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், வீதிவிபத்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு பொலிஸ் தரப்பு தள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதிப் போக்குவரத்து விதிகளை பேணுவதில் வாகன சாரதிகள் அசிரத்தைப் போக்கில் நடந்து கொள்வதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையிலேயே வீதிவிபத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களாவர். அதுவும் வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்களே கூடுதலாக விபத்துகளை எதிர்கொள்கின்றனர். வீதிவிபத்துகளை தவிர்ப்பதில் கவனமெடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை உரிய முறையில் பேணுவது மிக முக்கியம். அதேசமயம் பொதுமக்களும் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடனும். நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இதில் எவரும் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது.

போக்குவரத்து,சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வீதிவிபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் அறிவித்திருக்கின்றார். தவறிழைக்கும சாரதிகள் மீதான அபராதத்தை பல மடங்கு அதிகரிக்கவும், மரணங்களுடன் தொடர்புபடும் சாரதிகளது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இதனை ஒரு விதத்தில் எச்சரிக்கை அறிவிப்பாகக் கூட பார்க்க முடிகிறது.

வீதிப் போக்குவரத்தின் போது கண்மூடித்தனமாகச் செயற்பட்டு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஒட்டுவதால் அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு சாரதிகளால் மாற்றீடு வழங்க முடியுமா? அதற்கும் அப்பால் பெரும்பாலான சாரதிகள் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதால் ஏற்படக் கூடிய மரணங்களுக்கு இழப்பீடு வழங்குவதால் போன உயிரைத் திரும்பப் பெற முடியுமா என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எழுப்பும் கேள்விகளுக்கு யாரால்தான் பதிலளிக்க முடியும்? எனவேதான் தவறிழைக்கும் சாரதிகள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தீர்மானித்திருக்கின்றார்.

வீதிவிபத்து தொடர்பான பொலிஸாரின் அறிக்கைகளைப் பார்க்கின்ற போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைத் காணக் கூடியதாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போவதையும் அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான சாரதிகள் கண்மூடித்தனமாக போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை செலுத்த முற்படுவதாலும் விளைவுகள் விபரீதமாக அமைந்து விடுகின்றன.

மறுபுறம் வீதிப் போக்குவரத்து விதிகளை சாரதிகள் மட்டும்தான் பின்பற்ற வேண்டுமெனக் கூறித் தப்ப முடியாது. பொதுமக்களும் இந்த விடயங்களில் விழிப்புடன் செயற்பட முன்வர வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயற்பட முனைவதன் மூலம் அனர்த்தங்களை கூடுதலாக தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். பாதைகளைக் கடக்கும் போது மஞ்சள் கடவையை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் இதனைப் பின்பற்றுவதில்லை. இதனாலும் நிறைய விபத்துகள் இடம்பெற்று வருவதை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மக்கள் சரியாக பின்பற்றுவதன் மூலம் அனர்த்தங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ள முடியும். சிறுவர்கள், மாணவர்கள் பாதையைக் கடக்கும் போது சாரதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயம். நெடுந்தூரப் பயணங்களின் போதும், சுற்றுலாக்களின் போதும் முடியுமான வரை வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது மிக முக்கியம். மலைநாட்டுப் பகுதிகளில் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதால் ஏற்படக் கூடிய விபத்துக்கள் மிகப் பாரதூரமானவையாக அமைகின்றன.

மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விடயத்தில் பொலிஸார் விழிப்பாக இருக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலைநாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தைப் பற்றி ஆராய்ந்த போது வாகனம் சரிவரக் கண்காணிக்கப்படவில்லை என்பதும் மற்றொரு வாகனத்தின் சாரதி குடிபோதையில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடக்கும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பொலிஸாரும் ஒரு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இக்குற்றச்சாட்டை ஒரு விதத்தில் நியாயமானதாகவே நோக்க முடிகிறது. தவறிழைக்கும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் தவறி விடுகின்றனர். தவறிழைத்தமை நிரூபணமான நிலையில் கூட சில பொலிஸார் அவர்களை தப்பவிடுகின்றனர். இங்கு பெரும் முறைகேடு நடப்பதை ஊகிக்க முடிகிறது. ஒரு உயிரின் மரணத்துக்கு காரணமான சாரதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்புகிறார். இவ்விடயம் கசப்பானதாக இருப்பினும் இதுதான் உண்மையாகும்.

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு முழு அளவில் ஒத்துழைக்க அனைவரும் முன்வர வேண்டும். அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேவேளை சாரதிகள் விடயத்தில் மட்டுமன்றி பொலிஸார் விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்திக் கூறிவைக்க வேண்டியுள்ளது. சட்டம் ஒரு தரப்புக்கு மட்டுமல்ல. சம்பந்தப்பட்ட அனைவருக்குமானதாக அமைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


Add new comment

Or log in with...