தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா உறுதி | தினகரன்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா உறுதி

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக கட்டாரில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

ஆப்கான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க விசேட தூதுவர் சல்மே கலில்சாத், கடந்த செவ்வாய்க்கிழமை கட்டார் தலைநகர் டோஹாவில் தலிபான் பிரிதிநிதிகளை சந்தித்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தினங்கள் நீடிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலில்சாத் இதற்கு முன்னர் பல தடவைகள் தலிபான்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவரது நேரடி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா உறுதி செய்வது இதுவே முதல்முறையாகும்.

வார்தாக் மாகாணத்தில் ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கும் நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 65 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளுர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கலில்சாத் உடனான சந்திப்புக் குறித்து தலிபான் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார். “ஆப்கான் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதில் இருந்து ஆப்கான் தடுக்கப்படுவது” குறித்த நிகழ்ச்சி நிரல் ஒன்றை அமெரிக்கா ஏற்றதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகவும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர ஆப்கானில் அமெரிக்காவின் மிகப்பெரிய போரை ஆரம்பித்த அமெரிக்க துருப்புகளில் தற்போதுள்ள 14,000 படையினரை பாதியாக குறைப்பது குறித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் ஆப்கானுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என ஆப்கான் ஜனாதிபதி அஷரப் கானியை காபுலில் சந்தித்த கலில்சாத் உறுதி அளித்திருந்தார்.


Add new comment

Or log in with...