Friday, March 29, 2024
Home » IMF உடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்படவும்

IMF உடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்படவும்

- அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை

by Rizwan Segu Mohideen
December 17, 2023 6:26 pm 0 comment

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயாரில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்பதாலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாகவும் வலியுறுத்தினார்.

கண்டி மாநகர சபையின் “கரலிய அரங்கம்” மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (17) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கண்டி மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு ”கரலிய அரங்கம் மற்றும் கலைக் கூட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்காக மாநகர சபை நிதியினால் சுமார் 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த அரங்கம் மற்றும் கலைக் கூடத்தை உருவாக்குவதன் மூலம், நகரில் இது வரை காணப்பட்ட கேட்போர்கூட குறைபாடு தீர்க்கப்படுவதோடு சித்திர, சிற்பக் கண்காட்சிகளுக்கும் வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

கண்டி முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி மாநகரசபையுடன் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்ட “சுத்தமான வாயில்கள்” வணிக பங்களிப்பு நிகழ்ச்சி மற்றும் நகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கியவர்களைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

“கரலிய” புதிய அரங்கம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம், கண்டி நகரம் 21 ஆம் நூற்றாண்டு தொடர்பான கட்டிட மாதிரியைப் பெற்றுள்ளது. இத்தகைய கட்டிடங்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். இந்த நகரம் நமது வரலாற்றின் ஒரு பகுதியாகும். வரலாறு என்பது நமது கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ஒரு அங்கம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்த அரங்கின் ஊடாக கண்டி நகரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மேலும், கண்டிக்கு நவீன நூலகமொன்றை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். போகம்பர வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று அல்லது நான்கு மாடி நூலகக் கட்டிடம் ஒன்றை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள டி.எஸ். சேனநாயக்க நூலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படும் போது இங்குள்ள நூலகக் கட்டிடமும் இந்த அரங்குடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.. அப்போது இந்த இடம் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் போன்ற வசதிகள் கொண்ட இடமாக மாறும்.

கண்டி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். மேலும், கண்டியில் பல்வகைமை போக்குவரத்து மையத்தை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும். கோபல்லவ மாவத்தையில் இன்னும் ஒற்றை மாடி வீடுகள் தான் உள்ளன. அந்த வீடுகளை அகற்றி குறைந்தபட்சம் மூன்று மாடி வீடுகளையாவது கட்டவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதன்படி நவீன கண்டி நகரம் உருவாகி வருகிறது. அடுத்த மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கும். ஆனால், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பணிகள் தாமதமாகின. நாட்டின் வங்குரோத்து நிலையால், வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

நாடு வங்குரோத்தடைந்த பிறகு, நாங்கள் இரண்டு குழுக்களை சமாளிக்க வேண்டியிருந்தது. பல நாடுகள் எமக்கு கடன் வழங்கியுள்ளன. கடன் பெற்ற நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பெரிஸ் ஒப்பந்தத்தைச் சேர்ந்த அமைப்புகளும் அடங்கும். இந்தக் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் ஏனைய அமைப்புகளும் பெரிஸ் கழகத்திற்கு வர சம்மதித்தாலும், சீனா அதற்கு முன்வரவில்லை. சீனாவுடன் தனித்தனியாக பேச்சு நடத்தி வருகிறோம். இலங்கையைப் போன்று வங்குரோத்து நிலைக்குச் சென்ற ஏனைய நாடுகளும் இவ்வாறான இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின்படி செய்யப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் முதல் ஒப்பந்தத்தை எட்டினோம். இந்தியா, சீனா மற்றும் பெரிஸ் கழகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கடன் மறுசீரமைப்பை எங்களால் முன்வைக்க முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டவாறு முதல் கடன் தவணையைப் பெற்றோம். அமெரிக்க திரைசேறி செயலாளருடன் கலந்துரையாடினோம். அதன்பின், ஜப்பான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாட வேண்டியிருந்தது. இந்திய நிதியமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டது. சீனா சென்று ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடியிருந்தோம். இவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போது லண்டன் சென்று தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதால் மீண்டும் கடன் பெற முடியும். எனவே, விரைவில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும். அடுத்த ஆண்டு மேலும் பல அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும். வங்குரோத்து நிலையில் இருந்து இப்போதுதான் வெளியே வந்தோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் காரணமாக இந்த நிலையை எட்ட முடிந்தது. நமது நாட்டின் கடனை அடைக்கக் கூடிய குறைந்தபட்ச வருமானம் இருப்பதைக் காட்ட வேண்டும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10.4% ஆக அதிகரிக்க வேண்டும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. 2024இல் அந்த இலக்கை அடைய முடியாது. இந்த இலக்கை 2025, 2026 காலப்பகுதிக்குள் அடையலாம். எனவே, நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 2024 இல் மொத்தத் தேசிய உற்பத்தியை 9.2% ஆக எட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம்.

இந்த இலக்கை 2024இற்குள் எட்டுவதற்கு எமது வருமானத்தில் 534 பில்லியன் பற்றாக்குறை உள்ளது. அதுதான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.

அந்த பற்றாக்குறைக்கு அஸ்வெசும திட்டமும் ஒரு காரணம். அதற்கு 61 பில்லியன் செலவிட்டுள்ளோம். ஆனால் நிவாரணத்திற்காக 207 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டின் ஏழை மக்களுக்கானது. மேலும், அரசு ஊழியர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியத்திற்காக மேலும் 133 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த 534 பில்லியன் தேவையில்லை என்று சொல்வதாக இருந்தால் அஸ்வெசும மற்றும் சம்பள உயர்வு என்பவற்றை நீக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் 03 வருடங்களாக மூலதனச் செலவின்றி வீழ்ச்சியடைந்தது.

எனவே இதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது. வரிகளை உயர்த்தினால், பிரபலம் குறையும். ஆனால் பொருளாதாரத்தை காப்பாற்றினால், நமது வங்குரோத்து நிலை மறைந்துவிடும். பல வரிகளை உயர்த்தியிருக்கலாம். எரிபொருள் வரியை உயர்த்தினால், அது மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும். எரிபொருள் வரி மின் கட்டணத்துடன் சேர்க்கப்பட்டு பெரிய தொகையாக கட்டணம் உயரும்.

15% ஆக இருந்த வெற் 18% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், தற்போது வெற் வசூலிக்கப்படாதவற்றுக்கும் இந்த வரி விதிக்கப்பட்டது. ஏனைய நாடுகளிலும் வெற் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் 23% வரையும் பாகிஸ்தானில், 18% வரை வற் வசூலிக்கப்படுகிறது. எனவே, அமைச்சரவையில் இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தான் அமைச்சரவையில் உள்ளனர். வரி உயர்வை அவர்கள் யாரும் விரும்பவில்லை. ஆனால் வேறு மாற்று வழியில்லை. 2024ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. அதனால் அனைவரும் கடினமான இந்த முடிவுக்கு உடன்பட்டனர்.

சில நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சிலர் கூறுகிறார்கள். இது முழுமையான பொய். சர்வதேச நாணய நிதியம் என்பது ஒரு நிறுவனம் அல்ல. நாம் பல நாடுகளுடம் பேசினோம். பல நாட்டு தலைவர்களைச் சந்தித்தோம். இதை மாற்றினால் நம் நாடு மீண்டும் கடனை கட்ட வேண்டி வரும் என்கிறார்கள். இதனை மாறினால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்வோம். மீண்டும் வங்குரோத்து நிலைக்கு திரும்ப வேண்டுமா? என்று கேட்க வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிட்டால், வேறு என்ன செய்ய முடியும் என்ற மாற்று வழியைக் கூறவேண்டும். நாம் எப்படி பணம் திரட்டப் போகிறோம். எப்படி வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறப் போகிறோம் என்பதை அவர்கள் அறிவிக்க வேண்டும். இதுதான் எமது அரசியலில் உள்ள மிகப்பெரிய பலவீனம். பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. கடினமான முடிவுகளை எடுக்க யாரும் தயாராக இல்லை. எனவே இது தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உரையாற்றுகையில்,
”வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அரசாங்கக் கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.. டி.எஸ்.சேனநாயக்க நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் இந்த அரங்கம் கட்டப்பட்டது. இது நம் பிள்ளைகளுக்கும், எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அரங்கு காரணமாக கண்டி நகரின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். ஹலீம், எம்.வேலுகுமார், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாநகர சபையின் முன்னாள் மேயர் கேசர சேனாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், கண்டி மாநகர சபை மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT