நாட்டின் விவசாயத்துறை எதிர்நோக்கும் பேராபத்து! | தினகரன்


நாட்டின் விவசாயத்துறை எதிர்நோக்கும் பேராபத்து!

இலங்கையின் விவசாயத் துறைக்கு பெரும் சவாலாக தோற்றம் பெற்றுள்ளது படைப்புழு. இன்று எல்லா மட்டங்களிலும் இப்புழு தொடர்பில்தான் கவனம் செலுத்தப்படுகின்றது. அது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல்வாதிகளும் அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இல்லை.

இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தப்படும் ஒன்றாக படைப்புழு விளங்குகின்றது. அப்புழு மேற்கொள்ளும் அழிவுகரமான செயற்பாடே இதற்குக் காரணமாகும்.

இது பார்ப்பதற்கு சாதாரண ஒரு புழுதான். ஆனால் அது மேற்கொள்கின்ற நாசகார செயல் உள்நாட்டு உணவு உற்பத்தியில் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. கம்பளிப் பூச்சியின் ரகத்தை ஒத்ததாக விளங்கும் இப்புழுவின் தொற்றுக்குள்ளாகும் பயிர்களில் 80 வீதம் அழிந்து நாசமாகி விடும். அந்தளவுக்கு கொடூர பண்பை இப்புழு கொண்டிருப்பதாக இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். டபிள்யு. வீரக்கோன் தெரிவித்திருக்கிறார்.

இப்படைப்புழுவின் தாக்கம் இந்தியாவில் காணப்படுவதாக கடந்த வருடம் (2018) மார்ச் மாதத்தில் இலங்கை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இப்புழு குறித்து விவசாயத் துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக விவசாய அதிகாரிகள், கமநல சேவை உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க விவசாயிகள் அறிவூட்டப்பட்டனர்.

ஆனாலும் சொற்ப காலத்தில் அம்பாறை மாவட்டத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் இப்புழுவின் தாக்கம் இந்நாட்டில் முதல் தடவையாக பதிவானது. அதனால் இப்புழுவின் தாக்கம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கமநல சேவைகள் திணைக்களம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் ஜனவரி மாதத்திலும் இப்புழு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் இப்புழுவின் தாக்கம் சொற்ப காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது.

இதன் விளைவாக நாட்டில் செய்கை பண்ணப்பட்டுள்ள 82 ஆயிரம் ஹெக்டேயர் சோளச் செய்கையில் 50 வீதத்தை இப்புழு அழித்து நாசப்படுத்தி விட்டதாக விவசாயத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு குறுகிய காலத்திற்குள் இவ்வாறு பாரிய அழிவை மேற்கொண்டுள்ள இப்புழுவின் செயற்பாடுகள் நாட்டில் நீடிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கம் உட்பட எல்லா மட்டத்தினரும் தீர்க்கமான முடிவில் உள்ளனர்.

அதேநேரம், படைப்புழுவின் பேரழிவிலிருந்து இலங்கை விவசாயத் துறையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனத்தினரும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துறை சார் புத்திஜீவிகளும் தேவையான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கவும் முன்வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இப்புழுவை கட்டுப்படுத்தவென மூன்று பூச்சிநாசினிகளை பாவிக்கலாமென கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும் அந்தப் பூச்சி நாசினிகள் சுற்றுசூழலிலும் மனித ஆரோக்கியத்திலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள், செல்வாக்கு தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதேவேளை படைப்புழுவை பூச்சிநாசினிகளால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு மாற்று வழிமுறைகளையும் பாவிக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவவே செய்கின்றது.

படைப்புழு மேற்கொண்டு வரும் இந்த அழிவுகள் நாட்டு மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தவே செய்துள்ளன. இந்த நிலையில் படைப்புழுவின் தாக்கம் காரணமாக அழிவுற்றுள்ள விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்திற்கென 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்திருக்கிறார். அத்தோடு இப்புழுவின் தாக்கத்தையும் பரவுதலையும் கட்டுப்படுத்தவும் 118 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , பூச்சி நாசினிகளை 50 வீத மானியத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'எமது விவசாயத்துறை எதிர்கொண்டுள்ள படைப்புழு அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவென யுத்தத்திற்கு முகம்கொடுத்ததைப் போன்று வினைத்திறனுடனும் அர்ப்பணிப்புடனும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு எல்லா மட்டங்களினதும் அவதானத்தைப் பெற்றுள்ள இப்புழுவின் பெண்ணினம் நாளொன்றுக்கு 1000 முட்டைகளை இடக் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகவும், இப்புழு சிறகு முளைத்து பறக்கும் கட்டத்தை அடையும் போது 100 கிலோ மீற்றர் தூரம் வரை பறக்கக் கூடியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பேரழிவுமிக்க புழுவின் பூர்வீகம் அமெரிக்கா என்றே கருதப்படுகிறது.

இப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தவென சகல தரப்பினரும் கைகோர்த்து செயற்பட வேண்டும். இது காலத்தின் அத்தியாவசியத் தேவையாகும். தவறும் பட்சத்தில் நாட்டின் உணவு உற்பத்தித் துறை பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும். அது நாட்டில் உணவு தட்டுப்பாட்டுக்கும் பஞ்சத்துக்கும் வழிகோலும் என்பதே துறைசார் நிபுணர்களின் கருத்தாகவுள்ளது. அதனால் படைப்புழுவின் தாக்கத்தையும் அதன் பேராபத்தையும் உணர்ந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சகலரும் கைகோர்க்க வேண்டும்.


Add new comment

Or log in with...